ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

- in சாதி

உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று (13-3-2018) தோழர் கெளசல்யா சங்கர் அவர்களால் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை துவக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்த பொதுக்கூட்டத்திற்கான அனுமதியை தோழர் கெள்சல்யா சங்கர் பெற்றார்.

சாதி ஒழிக! தமிழ் வெல்க! என்ற முழக்கத்துடன் இந்த கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள், படைப்பாளிகள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். சாதி ஒழியும் இடத்தில்தான் தமிழ் வெல்லும் என்று பேசினார். மேலும் பேசுகையில், ”தோழர் கெளசல்யா விகடன் விருது மேடையில் சாதி ஆணவக் கொலைகளை ஒழித்திட தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசி அந்த மேடையை அரசியல் மேடையாக்கிக் காட்டினார். அந்த இடத்தில் அவர் ஒன்றை அனைவருக்கும் தெளிவாக புரிய வைத்தார். இந்த பெண் ஒரு துயரத்தின் அடிப்படையில் அரசியலைப் பேச வரவில்லை. ஒரு விடுதலையை மையமாக வைத்து பேச வைத்திருக்கிறார் என்பதுதான் அது. சாதி ஆணவப் படுகொலைகளை ஒழித்திட தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்க மே பதினேழு இயக்கம் தொடர்ந்து உழைக்கும் என்றும், அதற்கான போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் முன்னெடுப்பதே சங்கருக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியும். மேலும் சாதி மறுப்பு திருமணம் புரிவோருக்கு பாதுகாப்பு வழங்கிட மாவட்டந்தோறும் பாதுகாப்பு மையங்களை உருவாக்கிட இங்கிருக்கிற நாம் அனைவரும் இணைந்து முயற்சி எடுத்திட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும், முற்போக்கு தோழர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply