சிலை உடைப்புகள்- சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் சிலையை உடைத்த பாஜகவினைக் கண்டித்தும், தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும், திரிபுராவில் லெனின் சிலையும், உத்திரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும் தி.நகரில் உள்ள பெரியார் சிலை முன்பு மே பதினேழு இயக்கத்தினால் கண்டன ஆர்ப்பாட்டம் 07-3-2018 அன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டது. பெரியாரே தமிழர்களின் தந்தை என்றும், பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் முழக்கங்கள் தோழர்களால் எழுப்பப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு, விவசாயிகளின் வாழ்வாதார சிக்கல்கள் என்று தொடர் போராட்டங்களை சந்தித்து வரும் தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்பும் வகையிலும், உழைக்கும் மக்களுக்காக போராடிய தலைவர்களின் அடையாளங்களை அழிக்கும் வகையிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தோழர்கள் குற்றம் சாட்டினர்.

காவி தமிழர்களின் நிறமல்ல. கருப்பே தமிழர்களின் நிறம். பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்து இந்துத்துவ மதவாத சமூக விரோத கும்பல்களை விரட்ட வேண்டும் என்றும் தோழர்கள் உரக்க முழங்கினர்.

சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுற்றிலும் நின்றிருந்த பொதுமக்கள் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை உற்சாகத்துடன் கை தட்டி மரியாதை செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு தி.நகர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply