ஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.

- in கட்டுரைகள்

கடந்த 29 ஆம் தேதி தமிழகத்தையும் கேரளாவையும் தாக்கிய புயல், கடற்கரையில் ஒரிரு நாள் மழையை கடந்து விட்டபின்னும் இன்னும் பல்வேறு இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது . இப்போதும் தமிழக முதல்வர் ’70 மீனவர்கள்’ பற்றித்தான் எந்த தகவலும் தெரியவில்லை என்கிறார் . இந்த தகவலை எதன் அடிப்படையில் அவர் வெளியிடுகிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .

30ந் தேதி புயல் தாக்கிய கிராமங்களுக்கு டிசம்பர் 5ம் தேதியான இன்று காலை வரை வருவாய் துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. 28ம் தேதி புயல் எச்சரிக்கை கொடுத்த பின், மீன் வளத்துறை இனை இயக்குநர்கள் அலுவலகத்தில் இருந்து வேறு எந்த தொடர்பையும் மக்களோடு ஏற்படுத்திக் கொள்ளவில்லை . குறிப்பாக தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன் பிடிக்க செல்லும் படகுகளும், கேரளாவை சேர்ந்த விழிஞ்சியம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகுகளும் காணாமல் போயிருக்கிறது.

29ம் தேதி மீன் பிடிக்க செல்பவர்களுக்குத் தான் புயல் பற்றிய எச்சரிக்கையாக ‘மீன் பிடிக்க செல்ல வேண்டாம்’ என்ற தகவல் சர்ச்சுகள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக, தினந்தோறும் மீன் பிடிக்க செல்லும் நாட்டு படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை மீன் பிடிக்க சென்ற விசை படகுகளுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு புயல் குறித்த எந்த முன் தயாரிப்பும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வில்லை. கடலினுள் மீன் பிடிப்பிலிருந்த இவர்கள் யாரிடமும் அரசு தரப்பில் எந்த உரையாடலும் நடத்தப்படவில்லை. தினமும் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்து சேரும் மீனவர்களிடமும் இது வரை எந்த தகவலையும் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள். கடற்கரைக்கு தானாக வந்து சேரும் மீனவர்கள் எங்களை யாரும் காக்கவில்லை என்று வைக்கும் குற்றசாட்டு என்பதுதான் முதன்மையானது. புயல் வந்த மறுநாள் கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள் அவர்களாகவே கரைக்கு வந்துள்ளனர்.

4ம் தேதி காலையில் தூத்தூரில் , சின்னத்துறையில் கரை திரும்பிய மீனவர்கள், தாங்களாகவே கரை திரும்பியதாக தெரிவித்தனர். 19ம் தேதி தேங்காய்பட்டினத்தில் இருந்து ind gn15mm275 என்ற எண் கொண்ட ஜோஸ் எனபவர் போட்டில் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற மரியதாஸ், ஜோன்ஸ் உள்ளிட்டவர்கள் புயல் தாக்கும் போது லட்ச தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்திருகிறார்கள். புயல் பற்றி தங்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் லட்சத்தீவில் கரை ஒதிங்கியிருப்போம் என்றனர். புயல் தாக்குதலுக்கு பின் அவர்கள் அருகில் வந்த நேவியிடம் உதவி கேட்டும் நேவி உதவவில்லை என்கிறார்கள். அதன் பின் தானக ஊருக்கு வந்து சேர்ந்ததுள்ளனர். வரும் வழியிலும் அவர்கள் புயல் தாக்குதலுக்கு உள்ளாகி அதன் போக்கில் சென்று மீண்டும் ஊர் திரும்ப 4ம் தேதி ஆகியிருக்கிறது. 4 நாட்களாக கடலில் தத்தளித்த அவர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பது தான், இங்கு அரசு என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வியை எற்ப்படுத்துகிறது.

4ம் தேதி காலை லெபின் என்பவரது விசை படகு ஜெர்மிஸ் என்பவரது இறந்த உடலோடு தேங்காய்பட்டினம் வருகிறது. 2மணிக்கு வர வேண்டிய விசைப்படகு 8 மணிக்குத் தான் வருகிறது. தாமதத்திற்கு காரணம் கரை திரும்புகையில் மீண்டும் கடல் சீற்றத்தை எதிர்கொண்டதுதான் என்று மீண்டு வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒகி புயல் இன்னும் கடலுக்குள் சென்று கொண்டிருப்பதால், பத்து நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்றவர்கள் அந்த ஆழ் கடல் பகுதியில் இருப்பார்கள் என்பதுதான் அவர்கள் வீட்டு பெண்களுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இன்று காலை கிடைத்த தகவல்படி தூத்தூரில் 17 விசைப்படகுகளும், சின்னத்துறையில் 7 விசைபடகுகளும், வல்லவிளையில் இருந்து சென்ற 44 விசைபடகுகளும் என்ன ஆனது என்றும் தெரிய வில்லை. மேலும் தேங்காய் பட்டினம் துறை முகத்தில் இருந்து சென்ற 38 விசை படகுகள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை . முட்டம் பகுதியில் மணச்சனுரில் இருந்து 3 பேர் காணமல் போயுள்ளனர்.

இதில் சின்னத்துறையில் இருந்து சென்ற மாதா என்ற அகஸ்டின் என்பவரது விசைப்படகில் 8 பேர் சென்றுள்ளனர். அதில் 6 பேர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீன்பிடி தொழிளாலர்கள் . கடலூரில் அழுது கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு அவர்கள் பிள்ளைகள் எந்த படகில் சென்றார்கள் என்பது கூட தெரியாது. இந்த தகவல்களையெல்லாம் அரசு திரட்டி ஒருங்கிணைத்திருக்க வேண்டும். ஆனால் அரசு செத்த பிணமாய் கிடக்கிறது. குஜராத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்டது அரசாக இருந்திருந்தால் அவர்களை துறைமுகத்தில் அனுமதிக்கவில்லை என்ற சிக்கலே வந்திருக்காது. குஜராத்திற்கு சென்றவர்கள் அவர்களாக கரை ஒதுங்கியவர்கள். அவர்களைதான் தாங்கள் மீட்டதாக அரசு நம் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பேரிழப்பை தாண்டி முட்டம் பகுதி துறைமுகமும் முழுவதும் காற்றில் சேதமாகி படகுகள் கற்களில் மோதி அந்த பகுதி மீனவர்கள் பெரும் பொருள் இழப்பை சந்தித்து நிற்கிறார்கள்.

உயிர் சேதம், பொருள் சேதம் என பெரும் பேரிழப்பை சந்தித்து அழுது கொண்டிருக்கும் மக்களிடம் அவர்கள் இழப்பு என்னவென்பதை கூட கேட்டறிய துப்பில்லாத அரசுதான் வல்லரசு என்று கதை அளந்து கொண்டிருக்கிறது. தங்கள் ஆளுகைக்குள் உள்ள கடற்பரப்பில் ஐந்து நாட்களாக தத்தளிக்கும் மீனவர்களை பற்றிய தகவல் கூட அறிய முடியாத பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலாய் சீத்தாராமன் பச்சையாய் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கிறது.

– மே பதினேழு இயக்கம்
5-12-2017

 

Leave a Reply