மீனவர்களை காப்பாற்றாத வக்கற்ற அரசை கேள்விக்குள்ளாக்குவோம்.

- in பரப்புரை

இடைத்தேர்தல் கூத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு மீனவர்களுக்காக குரல் கொடுங்கள்.

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நான்கு நாட்களாகியும் அவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. எத்தனை மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்கிற சரியான விவரம் தெரியவில்லை.

ஒரு புயல் எச்சரிக்கையைக் கூட முன்னரே வெளியிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு எந்த யோக்கியதையில் வல்லரசு கனவு பற்றி பேசுகிறது. இத்தனை மீனவர்களை மீட்க வக்கில்லாத இந்திய ஒன்றிய அரசினையும், பாஜகவின் பினாமியான அதிமுகவின் பெயரில் இயங்கும் தமிழக அரசினையும் கேள்விக்குள்ளாக்குவோம்.

என்ன செய்து கொண்டிருந்தது, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது இந்திய கப்பற்படை?
மீனவர்களை சுடுவதற்கும், தாக்குவதற்கும் தானா கப்பற்படை!

என்ன செய்து கொண்டிருக்கிறது வானிலை ஆய்வு மையம்?

வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்குள் செல்லும் மீனவர்களை உங்கள் வல்லரசு இந்தியா ஏன் காப்பாற்ற மறுக்கிறது?

புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத இந்த அரசு, எங்கிருந்து நம்மை அணு உலை போன்ற கோர விபத்துக்களிலிருந்து காப்பாற்றப் போகிறது. கேட்க நாதியவற்றர்களா தமிழ்நாட்டு மீனவர்கள்? இன்னுமா RK நகர் இடைத்தேர்தல் கூத்துக்களை தொலைக்காட்சிகளில் ரசித்துக் கொண்டிருப்போம்.

விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலை அழிப்பதற்கு 1000, 1500 , 2000 நாட்டிகள் மைல் கப்பற்படையை கொண்டு சென்ற இந்திய அரசு, புலிகளின் ஆழ்கடல் மிதவை கிடங்குகளை அடையாளம் காட்டுவதற்கு தமிழகத்தின் கடற்படை தளத்திலிருந்து விமானத்தைப் பயன்படுத்தி இலங்கை கப்பல்படைக்கு செய்தி அனுப்பிய இந்திய அரசு, காணாமல் போன தமிழ் மீனவர்களை மீட்க ஏன் மறுக்கிறதென்பதை தமிழகம் புரிந்து கொள்ளவேண்டிய காலம் இது.

எங்கே இருக்கிறார் குமரி தொகுதியின் எம்.பியும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்?
என்ன செய்து கொண்டிருக்கிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்?

தமிழர்களே! தமிழக மீனவர்களைக் காக்க நாம் தான் குரலெழுப்ப வேண்டும். மீனவர்களை காப்பாற்றாத இந்திய ஒன்றிய அரசையும், தமிழக பினாமி அரசையும், இந்திய கப்பற்படையையும், வானிலை ஆய்வு மையத்தையும் கேள்வி எழுப்பங்கள். சாமானியனுக்கு முன்னெச்சரிக்கை அளிக்காத தொழில்நுட்பத்திற்கும், கப்பற்படைக்கும் எதற்காக நமது வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்.

ஒரு புறம் இலங்கை அரசால் தாக்கப்பட்டு கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவன்,
இன்னொரு புறம் புயல் எச்சரிக்கை கூட அறிவிக்கப் பெறாத தமிழ்நாட்டு மீனவன்,
மற்றொரு புறம் மீனவர்களின் மானியத்தினை ரத்துசெய்ய, WTO-ல் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்திய பாஜக அரசு.
இப்படி நமது மீனவன் தொடர்ச்சியாக விரட்டப்படுகிறான்.

தமிழக மீனவர்களே! தமிழ்நாடு அரசும் சரி, இந்திய ஒன்றிய அரசும் சரி 2009லேயே நம்மை காவு கொடுத்து விட்டது.

தமிழக அதிமுக அரசு, தரகர் அரசு. அது மக்களுக்கான அரசல்ல. பாஜக காரன் இந்து இந்து என்று சொல்லி ஏமாற்றி வருவான். ஆனால் ஒருபோதும் நம்மை காப்பாற்ற மாட்டான். இந்த கும்பலை விரட்டுங்கள்.
தமிழர்களை வஞ்சம் தீர்க்கும் RSS-பாஜக மோடியின் கையாலாகத்தனத்தினை அம்பலப்படுத்துவோம்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்காக குரலெழுப்புவோம்.

– மே பதினேழு இயக்கம்
98840 72010

Leave a Reply