தமிழக அரசே! செவிலியர்களை பணிநிரந்தரம் செய்! – மே பதினேழு இயக்கம் அறிக்கை

MRB தேர்வின் அடிப்படையில் தேர்வான அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியினை தமிழக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. செவிலியர் படிப்பு முடித்த அனைவருக்கும் செவிலியர் பணிக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு MRB எனப்படக்கூடிய மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் (Medical services Recruitment Board) மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 40000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதி 19000 பேர் தேர்ச்சி அடைந்தார்கள். அதில் 7,700 பேர் முதல் கட்டமாக செவிலியர் பணிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாத ஊதியமாக வெறும் 7700 ரூபாய் சம்பளத்தின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் அவர்கள் 7,700 ரூபாய் சம்பளத்திற்கு அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக மேலும் 3300 பேர் பணி அமர்த்தப்பட்டனர்.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தும் இவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் தமிழக அரசு அலைக்கழித்து வருகிறது. 7700 ரூபாய் என்ற மிகக் குறைந்த சம்பளத்திற்கு இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு தொலைதூர மூலைகளிலும் சேவையாற்றி வருகின்றனர். முறையான ஊதிய முறையை பின்பற்றாமல் அவர்களை தமிழக அரசு சுரண்டி வருகிறது. செவிலியர் பணி என்பது ஒரு சமூகத்தின் நலன் காக்கிற மிக முக்கியமான பணி. மிக முக்கியமாக அரசு மருத்துவமனைகளின் செவிலியர்கள் அனைவரும் அடித்தட்டு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அவர்களுடன் வேலை செய்து வருபவர்கள். செவிலியர் உரிமைகள் மதிக்கப்படாமல், அவர்களை அலைக்கழித்து வருவது தமிழகத்தின் பொதுச் சுகாதாரத்தினையே கேள்விக்குறியாக்கும் தன்மை உடையது. இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவத் துறையினைக் கொண்டுள்ளதாக பெருமைபட்டுக் கொள்ளும் தமிழக அரசு செவிலியர்கள் உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதென்பது சரியானதாக இருக்க முடியாது.

இவர்களை தொடர்ந்து பணிநிரந்தரம் செய்யாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே தமிழக அரசு நடத்த முயல்வதினை, அரசு மருத்துவமனைகளை தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க முடியும். இந்தியாவின் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார்மயப்படுத்திட பல்வேறு ஒப்பந்தங்களை உலக நாடுகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே செவிலியர்களின் பிரச்சினை என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்காமல் அனைத்து ஏழை, எளிய மக்களின் சுகாதாரத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகவே பார்க்க முடியும்.

இரண்டு ஆண்டு பணி முடித்த தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கோரியும், காலமுறை ஊதியத்தினை தங்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், தங்கள் பணி நேரத்தினை முறைப்படுத்த வேண்டும் எனக் கோரியும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து பெரிய போராட்டத்தினை நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தினை முடித்துக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பின்னரும், அவர்கள் கோரிக்கையினை நிறைவேற்றாமல் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. இதனையடுத்து தொடர்ந்து போராட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கை பொதுசுகாதாரத்தினை வலிமைப்படுத்தும் கோரிக்கை. செவிலியர்களின் கோரிக்கையினை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவினை தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த விடயத்தில் செவிலியர்களின் உரிமைக்காக நிற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசே!
MRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 11000 செவிலியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு உடனடியாக வழங்கிடு.
ஒப்பந்தமுறை அல்லது தற்காலிக முறையில் செவிலியர்களை பணி நியமனம் செய்யாதே.
அவர்களுக்கு கால முறை ஊதியத்தினை வழங்கிடு.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply