நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது.

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தினை உறைய வைத்திருக்கிறது.

கந்துவட்டிக் கொடுமைகள் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மறுக்கப்படுவது அல்லது தாமதத்திற்கு உள்ளாக்கப்படுவதே சாதாரண ஏழை மக்களை இப்படிப்பட்ட முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது.

தேசிய வங்கிகளோ அல்லது கூட்டுறவு வங்கிகளோ அவை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே சாதாரண ஏழை உழைக்கும் மக்களுக்கான ஒன்றாக அவை செயல்படுவதில்லை. பணக்காரர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தரப்படும் முன்னுரிமைகள் எவையும் உண்மையிலேயே கடனுதவியை எதிர்பார்த்து நிற்கிற ஏழை மக்களுக்கு வழங்கப்படுவதில்லை.

கடனை வழங்காமல் அலைய விடும் இடங்களாகவும், விவசாயிகள் அடித்துப் பிடுங்கும் நிறுவனங்களாகவும் வங்கிகள் செயல்படுவதால்தான் ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கந்து வட்டிக் காரர்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள். இந்த சூழலினை கந்துவட்டிக் காரர்களும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, வட்டியின் பெயரால் ஏழை மக்களை சுரண்டும் வேலையினை மேற்கொள்கிறார்கள். அடியாட்களை வைத்து மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். மக்கள் நலனுக்காக வேலை பார்க்க வேண்டிய அதிகாரிகள் கந்துவட்டிக் காரர்களின் அடியாட்களைப் போல் மாறியதால் கந்துவட்டிக் கொடுமைகள் என்பவை மிக மோசமாக தமிழகத்தில் அதிகரித்திருக்கின்றன.

ஒன்றும் அறியாத பிஞ்சுகள் நெருப்பில் எரிவதற்கு யார் காரணம்? கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இசக்கிமுத்துவா? அல்லது இசக்கிமுத்துவின் புகார்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவிமடுக்காத அதிகாரவர்க்கமா?

2003ஆம் ஆண்டில் கந்துவட்டி ஒழிப்புச்சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு எத்தனை புகார்கள் இதுவரை வந்திருக்கின்றன, அவற்றின் மேல் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

சேமிப்புக் கணக்காளர்களுக்கு வழங்கப்படுவது போல், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் தடையின்றி ஏழை மக்களுக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசே! எல்லா மாவட்ட அலுவலகங்களிலும் கந்துவட்டி குறித்த புகார் அளித்திடவும், நிவாரணம் அளித்திடவும் முதல்வரின் கண்காணிப்பின் கீழான தனித்துறையினை உருவாக்கிடு. கந்துவட்டிக்காரர்களை தண்டித்திடு.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply