தோழர் முகிலன் அவர்களை விடுதலை செய்ய குரல் எழுப்புவோம்.

- in பரப்புரை

காவிரியில் மணல் கொள்ளையை எதிர்த்து போராடியதற்காகவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்த்து போராடியதற்காகவும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் கடந்த ஒரு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவரை ஜனநாயகமற்ற முறையில் வழிமறித்து தூக்கிச் சென்று கைது செய்தது காவல்துறை. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்க போராடுபவர்களுக்கு இந்த அடக்குமுறையே நிகழ்த்தப்படும் என தொடர் அடக்குமுறைகள் மூலமாக எச்சரித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசின் எடுபிடியாக செயல்படும் தமிழக அரசு.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் இடிந்தகரை மக்களுடன் முன்னிலையில் நின்றதற்காக அவர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிராக போராடுவதற்காக பலமுறை அடக்குமுறைகளுக்கு தோழர் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அலங்காநல்லூரில் தோழர் முகிலன் அவர்கள் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார். நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்தினை தேனியில் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்காக அரச அடியாட்களால் தொடர்ந்து பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தோழர். இருப்பினும் எந்த போராட்டத்திலிருந்தும் பின்வாங்கியதில்லை.

இப்படிப்பட்ட தோழர் முகிலன் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக பாளையங்கோட்டை சிறையினில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் போராடிய தோழர் முகிலன் அவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டியது அவசியம்.

தோழர் முகிலன் அவர்களை விடுதலை செய்ய குரல் எழுப்புவோம். மணல் மாஃபியா கூட்டத்திற்காக மக்கள் போராளிகளை அடக்குமுறைக்குள்ளாக்கும் அரசினை கேள்வி எழுப்புவோம்.

– மே பதினேழு இயக்கம்

 

Leave a Reply