மத்திய, மாநில அரசுகளே! தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு.

மத்திய, மாநில அரசுகளே!

தனியார் மருத்துவமனைகளின் செவிலியர் போராட்டத்திற்கு மதிப்பு கொடு. உயிர் காக்கும் செவிலியர்களுக்கு முறையான சம்பளம் வழங்க ஆணையிடு.

செவிலியர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முறையான மாத சம்பளம் வழங்கப் படுவதில்லை. அவர்களுக்கான வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. செவிலியர் பணிபுரிவோர் பெரும்பாலும் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாத சம்பளத்தினை 4500 என்ற அளவிலிருந்துதான் தனியார் மருத்துவமனைகள் வழங்குகின்றன. அவர்களில் பெரும்பாலோனோர் கல்விக் கடன் மூலமாகத் தான் படித்து செவிலியர் ஆகிறார். அவர்களுக்கு முறையான சம்பளத்தினை முறைப்படுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது தவறானது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடிப்படை மாத சம்பளமாக செவிலியர்களுக்கு 20000 வழங்கப்பட வேண்டும் என்றும், மேலும் செவிலியர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட ஆணையம் அமைத்திடவும் உத்தரவிட்டது.

2016 பிப்ரவரியில் அந்த ஆணையம் அமைக்கப்பட்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்தது.

அதன்படி 50 பெட்கள் கொண்ட மருத்துவமனையில் செவிலியர்களுக்கு 20000 அடிப்படை சம்பளமாகவும்,
50 முதல் 100 பெட்கள் கொண்ட மருத்துவமனையில், மாநில அரசின் அடிப்படை சம்பளத்தில் 75 சதவீதத்தினை வழங்கவும், 100-200 பெட்கள் கொண்ட மருத்துவமனையில் மாநில அரசின் அடிப்படை சம்பளத்தில் 90 சதவீதம் வழங்கிடவும்,
200 பெட்களுக்கு அதிகம் கொண்ட மருத்துவமனையில் மாநில அரசின் அடிப்படை சம்பளத்தினை முழுமையாக வழங்கிடவும் பரிந்துரைத்தது.

அறிக்கை சமர்ப்பித்து ஒரு ஆண்டு கழித்தும், அந்த அறிக்கையின் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அறிக்கையினை நடைமுறைப்படுத்தக் கோரி செவிலியர்கள் கடந்த ஆண்டு முதல் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை சம்பளம் உறுதிபடுத்தப்படாத காரணத்தினால் 11-10-2017 முதல் தொடர் போராட்டம் அறிவித்து மேற்கொண்டனர்.

இந்த நிலையிலும் அவர்கள் கோரிக்கை உறுதி செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தினை மேற்கொண்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் மிரட்டி வருகின்றன. பொத்தேரியில் உள்ள SRM மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

தங்கள் நியாயத்திற்காக ஜனநாயக வழியில் போராடுபவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து தமிழக அரசு உதாசீனப்படுத்துவது முறையானதல்ல. செவிலியர் போராட்டங்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு உறுதிப் படுத்த வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

செவிலியர்களின் போராட்டத்தின் நியாயத்தினை ஆதரித்து மே பதினேழு இயக்கம் அவர்களுடன் நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply