வேகமெடுக்கும் கெயில் பைப்லைன் திட்டம் பின்னனி என்ன?

இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களின் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான ’கெயில்’ பைப்லைன் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென்றும், அதுவும் 2018க்குள் இந்த திட்டத்தை முடிக்க வேண்டுமென்றும் அவசர உத்தரவு போட்டிருக்கிறார். 2007இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மோடி அரசு ஏன் துடிக்கிறதென்றால் அமெரிக்காவோடு போடப்பட்ட ஓப்பந்தம் தான் காரணம்.

கடந்த ஜீன் மாதம் 26ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எரிசக்தி தொடர்பான ஓப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி 1975க்கு பிறகு கிட்டதட்ட 42ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை (குர்ட் ஆயில்) கொடுக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு இந்தியா உதவி செய்யும் என்று வாக்குறுதிகளை கொடுத்தன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தினை இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்திருக்கிறது. இதன்படி இந்தியன் ஆயில் கார்ப்ரேசன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் சேர்ந்து 5.9மில்லியன் பேரால் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து 2பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொண்ட முதல் கப்பல் ஆறு நாட்களுக்கு முன்னால் அக் 02’2017 அன்று ஒடிசா மாநிலத்திலுள்ள பிரதீப் துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. (Paradip port in Odisha) . இன்னும் இரண்டு கப்பல்கள் முறையே 1மில்லியன் மற்றும் 2.9மில்லியன் பேரல்களை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினம் மற்றும் கொச்சிக்கு வரவிருக்கிறது.

இப்படி வந்த கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலாகவோ டீசலகவோ மாற்ற அதனை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு துறைமுகத்திலிருந்து எடுத்துச்செல்ல கெயில் பைப்லைன்கள் தான் பயன்படுத்தப்படும். எரிவாயு கொண்டு செல்வதற்காக மட்டும் என்று அறிவிக்கப்பட்ட கெயில் பைப்லைன் திட்டம் இதற்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

2 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டதாலும், இன்னும் கொச்சிக்கும், விசாகப்பட்டினத்திற்கும் வரவிருப்பதாலும் தான் கெயில் பைப் லைன் திட்டத்தை மீண்டும் உடனே அமைக்க வேண்டும் என்று பாஜக அரசு கட்டளையிட்டிருக்கிறது. உலகத்திலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா இருப்பதால் இந்த திட்டத்தினை, தமிழ்நாட்டின் விவசாய நிலங்களை அழித்து நடைமுறைப்படுத்த மிகத் தீவிரத்துடன் இந்திய அரசு களமிறங்கியிருக்கிறது.

வளர்ச்சி, வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும், உழைக்கும் மக்களையும் அழிக்கவே குறி வைக்கின்றன. இந்த திட்டத்தினை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடியதன் காரணமாக, தமிழ்நாட்டின் விவசாய நிலங்களின் வழியே இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அன்றைய ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு 2013 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. ஆனால் அப்படி முடிவெடுக்கும் உரிமை தமிழ்நாட்டின் அரசுக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் எதேச்சதிகாரத்துடன் அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு வரும் திட்டங்களை குறித்து முடிவு செய்ய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என அறிவித்திருக்கிறார்கள்.

7 மாவட்ட விவசாயிகளின் நிலங்களின் மீதான உரிமையை பறித்து, அவர்களின் வாழ்வை அழிக்கக் கூடிய இந்த திட்டத்தினை தமிழக விவசாய நிலங்களின் வழியாகத்தான் கொண்டு செல்வோம் என இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நமது விவசாயிகளின் வாழ்வைக் காக்க, நம் நிலத்தைக் காக்க ஒன்றிணைவோம்.

Leave a Reply