இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

மற்ற நாடுகளெல்லாம் மரணதண்டனை ஒழிப்பை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒருவரை எப்படிக்கொள்ளலாமென்று உச்சநீதிமன்றத்தில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று உச்சநீதிமன்றத்தில் ரிசி மல்கோத்ரா என்பவர் மரண தண்டனை நிறைவேற்றப்படும்பொழுது அந்த கைதி மிகுந்த வலிகளுக்கு உட்பட்டு சாகிறார். எனவே வலியில்லாமல் அவருக்கு மரணத்தை கொடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டுமென்று
ஒரு வழக்கை போட்டிருக்கிறார்.

அதாவது கொலை செய்வதே கொடூரம். இதிலென்ன வலி இல்லாமல் கொலை செய்வது. இதை கேட்டால் சட்டம் எல்லாருக்கும் சில உரிமைகளை வழங்குகிறது அதேபோல தான் கைதிகளுக்கும் அதனடிப்படையிலேயே இது குறித்து பேசுகிறோமென்று ஒரு மொன்னை வாதத்தை வைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?

கடந்த செப்டம்பர் மாதம் ஜநா மனித் உரிமை கூட்டத்தொடரில் 12நாடுகள் சேர்ந்து மரண தண்டனை ஒழிப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். அதனை அமெரிக்கா சீனா சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து திர்மானத்தை தோற்கடித்துவிட்டது. அப்போது பேசிய ஐநா மனித உரிமை ஆணையர் உலகத்திற்கு அகிம்சையை கற்றுக்கொடுத்த காந்தி பிறந்த நாடான இந்தியா மரணதண்டனைக்கு ஆதரவாக இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லையென்று தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோலத்தான் ஐரோப்பிய யூனியனும் சொல்லியிருந்தது.

எனவே உலக நாடுகள் மத்தியில் இதுவரை தனக்கு இருந்த நல்ல பிள்ளை இமேஜ் டேமேஜ் ஆனதை சரி செய்யவே. தற்போது கொலை செய்வதை மார்டனாக்கும் முயற்சியில் இறங்கி நாங்கள் மரணதண்டனை கைதிகளின் மனித உரிமைகள் மீதும் அக்கறைக்கொண்டவர்களென்று காட்ட முனைகிறது இந்தியா.

இந்தியா என்ற நாடு உருவான காலமான 1947லிருந்து மரண தண்டனை இருக்கிறது. ஆனால் இதுவரை குற்றங்கள் குறைந்தபாடில்லை. சரி குற்றவாளிகளாவது சரியாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. பணம் படைத்தவன் கைதாகி 5நிமிடங்களில் ஜாமின் வாங்கி கையை ஆட்டிக்கொண்டு போவதும், மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவன் விமானம் ஏறி வெளிநாடுகளில் சொகுசாக இருப்பதையும் நாம் அன்றாடம் பார்க்கும் நாட்டில். பணமில்லாதவர்கள் ஏழைகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் இவர்களுக்கு மட்டும் மரணதண்டனை கொடுப்பது நியாயமா?

மரண தண்டனை என்பது அரசே செய்யும் பச்சை படுகொலை என்பதை உணர்வோம். மரணதண்டனையை முற்றிலும் ஒழிப்பதே மனித உரிமைகளை மதிக்கிறோம் என்பதற்கான முதல் படி.

 

Leave a Reply