அரசின் அடக்குமுறையை கண்டித்து, எங்களை மீட்ட தோழமைகளுக்கு நன்றிகள்.

இன்று 29-09-2017 காலை 11 மணிக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர்கள் தோழர்.நாகைதிருவள்ளுவன் அவர்கள் தலைமையில் ‘திரு.வைகோ அவர்களிடம் வன்முறையாக நடந்து கொண்ட சிங்களர்களை கண்டித்து’ இலங்கை தூதரகத்தினை முற்றுகையிட்டனர். இந்நிகழ்வில் மே17 இயக்கத் தோழர்களும் பங்கேற்க வந்திருந்தனர்.

இப்போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலையில், தமிழ்ப்புலிகள் தோழர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு பிறகொரு பணிக்காக செல்வதற்காக நானும், தோழர். பிரவீனும் சென்றிருந்தோம். தோழர்களிடம் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு விடைபெற்று எங்களது வாகனங்கள் வரும்வரை காத்திருப்பதற்காக அருகில் இருந்த தேநீர்விடுதியில் நின்றிருந்தோம். அப்போது அங்கு வந்த சில மாணவர்கள் ஆவணப்படம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இச்சமயத்தில் தமிழ்ப்புலிகள் தோழர்கள் முற்றுகைப்போராட்டத்தினை நடத்தி கைதாகிவிட்டிருந்தார்கள்.

மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்து, தேநீருக்காக காத்திருந்த தருணத்தில் திடீரென காவல்துறை அதிகாரிகள் வந்து ‘உங்களை கைது செய்கிறோம்’ என்றார்கள். “எதற்காக கைது செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ’மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது, போராட்டத்தில் பங்கெடுத்தீர்கள் என்பதற்காக கைது செய்ய சொல்லி இருக்கிறார்கள்’ என்றார்கள். …” போராட்டத்தில் பங்கெடுக்காத நிலையில் நாங்கள் ஏன் கைதாகவேண்டும், அப்படியே கைது செய்கிறீர்கள் எனில் , போராடி கைதான தோழர்களுடன் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள், தமிழ்ப்புலிகள் கட்சி தோழர்களுடன் நாங்களும் இணைந்து கைதாகிறோம்” என்று சொன்னோம். ஆனால் பதிலேதும் சொல்லாமல் எங்கள் இருவரையும், மற்றூமொருவரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினார்கள். எந்த காரணத்திற்காக கைது, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை சொல்லவில்லை. முரட்டுத்தனமாகவே காவல்துறை நடந்து கொண்டது.

சட்டவிரோதமாக கைது செய்திருக்கிறீர்கள் என்பதை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து பதிவு செய்தோம். எங்களை கைது செய்து தனியே காவல்நிலையத்தில் அடைக்க காரணம் ஏதுமில்லாத நிலையில், தமிழ்ப்புலிகள் தோழர்களோடு மண்டபத்தில் இணைந்து கொள்கிறோம் என்பதற்கும் பதில் இல்லை. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், எங்களை எதற்காக கைதுசெய்தோம் என்பது குறித்த விவரங்கள் இல்லை. மேலிடத்திலிருந்து உத்தரவு என்பதை மட்டும் திரும்ப திரும்ப பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

காவல்நிலையத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர்.நாகை திருவள்ளுவன், பொறுப்பாளர்களோடு வந்து எங்களோடு அமர்ந்து கொண்டு எதிர்ப்பினை பதிவு செய்தார்.

இந்நிலையில் செய்தியறிந்து, த.ஓ.வி(தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்) இயக்க தோழர்கள் வழக்கறிஞர்.பாவேந்தன், கயல், திருமலை ஆகியோர் நேரடியாக காவல்நிலையம் வந்து காவல்துறை அதிகாரியிடம் பேச ஆரம்பித்தனர். மதிமுகவின் வழக்கறிஞர் தோழர்கள் சுப்ரமணியம் இதர தோழர்களோடு அங்கு வந்தார். பிற வழக்கறிஞர் தோழர்கள் என பலர் அங்கே திரண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொறூப்பாளர் முகம்மது அவர்கள் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். மதிமுகவின் தோழர் ஜீவன் விவரங்களை கேட்டறிந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேச முனைந்தார்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் மூத்த தலைவர், பேராசிரியர்.ஜவாஹிருல்லா அவர்கள் தொடர்பில் வந்தார். கமிசனர் உட்பட பிற அதிகாரிகளிடம் பேசி எதிர்ப்பினை பதிவு செய்து விவரங்களை கேட்டறிவதாக சொன்னார்.

SDPI கட்சியின் மாநிலத் தலைவர் தோழர்.தகலான் பாகவி அவர்கள் தொடர்பு கொண்டார். அவசியமெனில் தோழர்கள் எதிர்ப்பினை பதிவு செய்ய தயாராக இருப்பதாக சொன்னார்.

இத்தகவலை கேட்டறிந்து ஜெனீவாவில் இருந்து ஐயா வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காவல்துறை அதிகாரிகளிடத்தில் தனது கண்டனத்தை தெரிவிப்பது மட்டுமல்லாமல், தமிழகம் வந்த உடன் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக உடனடியாக செயல்படப் போவதாக சொன்னார்.

காவல்நிலைய உயர் அதிகாரியிடம் ‘”சிறையில் அடைக்கும் திட்டமிருந்தால் வெளிப்படையாக தெரிவிக்கவும், அதை சொல்லாமல் காரணமும் இல்லாமல் இவ்வாறு தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதம். கிட்டதட்ட காவல்துறை எங்களை கடத்தி வந்திருக்கிறது. சிறைக்கு செல்ல தயாராகவே இருக்கிறோம், வழக்கு விவரங்களை தெரிவியுங்கள்” என்று கேள்விகள் எழுப்பினோம். அவர்களிடம் பதில் இல்லை. இந்நிலையில் காரணமின்றி அடைத்து வைத்தால் உடனடியாக காவல்நிலையத்தில் இருந்து வெளியேற வேண்டிவருவது மட்டுமல்லாமல் போராட்டங்களை துவக்குவோம் என்று காவல்துறையிடம் பதிவு செய்தோம். காவல்துறை அதிகாரிகளுக்கு ‘ஏன் கைது நடந்தது என்பது குறித்து எவ்வித விவரமும் தெரியவில்லை. மத்திய அரசிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே இக்கைது நடந்திருப்பதை உணர முடிந்தது.’ …

மாலை வரை காவல்நிலையத்தில் வைத்திருந்துவிட்டு, பின் சிறையில் அடைப்பது என்கிற முடிவிற்கு காவல்துறை வந்திருப்பதை அவர்களது செயல்பாடுகள் உணர்த்தின. ஏனெனில், போராட்டத்திற்காக கைது செய்வதாக இருக்குமெனில், போராட்ட தோழர்களோடு எங்களை இணைத்து மண்டபத்தில் அடைத்திருப்பார்கள். மண்டபத்திற்கு எங்களை கொண்டு செல்ல காவல்துறை மறுப்பதன் காரணத்தினை அவர்களால் சொல்ல இயலவில்லை.

இந்நிலையில் கைதாகி மண்டபத்தில் இருந்த தமிழ்ப்புலிகள் கட்சி தோழர்கள், உணவருந்தவும், நீர் எடுத்துக்கொள்ளவும் மறுத்தது மட்டுமன்றி, வழக்கிற்காக பெயர்களை பதிவு செய்யமாட்டோம் என்று போராட்டத்தினை துவக்கினார்கள். காவல்நிலையத்தில் நாங்களும் எங்களது எதிர்ப்பினை பதிவு செய்தோம். வழக்கறிஞர்கள் மோகன், முத்துக்குமார், ராமராஜன், ஆகியோர் காவல்நிலையம் வந்தனர். காவல்நிலைய உயர் அதிகாரிகளை சந்திக்க தோழர் பாவேந்தனும், கயல் அவர்களும் சிந்தாதரிபேட்டை சென்றனர்.

நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் செய்தியறிந்து விவரங்களை கேட்டறிந்து தனது எதிர்ப்பினை ஊடகங்களுக்கு பகிர்வதாக சொன்னார். இயலுமெனில் நேரடியாக வருவதாகவும் சொன்னார்.

இயக்குனர் திரு.ராம் நேரடியாக காவல்நிலையம் வந்து பேசினார். பிற படைப்புலக தோழர்களும் தொடர்பு கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்.பார்வேந்தன் அவர்கள் தோழர்களுடன் காவல்நிலையம் வந்தார். மேலும், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தோழர்களும், மாவட்ட தலைவர் தோழர் முகமது கவுஸ் அவர்களும் எங்களோடு இணைந்து கொண்டார்கள். இந்திய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு தமது ஆதரவை தெரிவித்தது மட்டுமல்லாமல் போராட்டத்திற்கு அணியமாவதாக பதிவு செய்தார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர்.வேல்முருகன் காவல்துறை அதிகாரிகளிடம் பேசி கைதை கண்டித்து விடுதலை செய்யச் சொன்னார். காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர். மகேஸ் அவர்கள் தொடர்பு கொண்டு , சென்னை வருவதற்கு அணியமாக இருப்பதாகவும் , கைது செய்து சிறைக்கு செல்லும் பட்சத்தில் எதிர்ப்பினை பதிவு செய்ய தயாராக இருப்பதை சொன்னார். தமிழக மக்கள் முன்னனியின் தோழர்கள் பொழிலன், அரங்க குணசேகரன் ஆகியோர் பேசினார்கள். மக்கள் பாதை இயக்கத்தின் தோழர்கள் காவல்நிலையத்தின் வாசலில் திரள ஆரம்பித்தனர். மே17 இயக்கத்தின் தோழர்கள் பெருமளவில் காவல் அலுவலகத்தின் வாயிலில் திரண்டனர்.அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத் தோழர் தெய்வமணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் ஜான், முகிலன் உள்ளிட்ட தோழர்கள் வாயிலில் திரண்டார்கள். ஊடகங்கள் உடனடியாக செய்தியை கேட்டறிந்து பதிவு செய்தார்கள்.

இந்நிலையில் , தமிழ்ப்புலிகள் கட்சியின் பிற மாவட்டங்களில் தோழர்கள் போராட்டத்திற்கும், சாலை மறியலுக்கும் அணியமான செய்தி காவல்துறைக்கு சென்றது. பல ஊர்களில் இருந்து தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர்கள் போராட்டத்திற்கு தயாராகும் செய்தி இணையத்தில் பதிவானது.

டிசம்பர்3 இயக்கத்தின் தோழர். மருத்துவர்.தீபக் தொடர்பு கொண்டார். இது தவிர எழுத்தாளர்கள், பத்திரிக்கை நண்பர்களும் நேரடியாக காவல்நிலையம் வந்தார்கள். வழக்கறிஞர். அருள்மொழி அவர்கள் மே17 இயக்கத்தினை தொடர்பு கொண்டு ஆதரவினை தெரிவித்தார். நாணல் நண்பர்கள் இயக்கத் தோழர் தமிழ்தாசன் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு தயாராக இருப்பதாக பதிவு செய்தார். தமிழர் விடுதலை கழகத்தின் தோழர்.சுந்தரமூர்த்தியும் இயக்கத்தோழரும் நேரில் வந்து ஆதரவு அளித்தனர்.

பூவுலகின் நண்பர்கள் , மனித நேய மக்கள் கட்சி , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பச்சைத்தமிழகம், இந்திய தவ்ஹீத் ஜமாத், நாணல் நண்பர்கள் , மனித நேய சனநாயகக் கட்சி, புதிய பொதுவுடமை இயக்கம் ஆகிய தோழமை அமைப்புகள் கண்டன அறிக்கையை பதிவு செய்தார்கள். ( ** மேலும் சில தோழர்களின் விவரங்கள் விடுபட்டிருக்குமெனில், தெரிவிக்கவும், இணைத்துக் கொள்கிறோம்.)

கடந்த செவ்வாய், 26-09-2017ஆம் தேதியில் என் மீது பிணையில்லா வழக்கு ஒன்றை மெரினா காவல்நிலையத்தில் பதிவு செய்தார்கள். நான் அச்சமயத்தில் சென்னையில் இல்லாத காரணத்தினால் அவர்களால் கைது செய்ய இயலாமல் போனது. இவ்வழக்கு வரும் 4ம் தேதி நீதிமன்றத்திற்கு வர இருக்கும் நிலையில், வேறொரு வழக்கில் எங்களை கைது செய்ய காவல்துறை முயற்சி செய்ததையே இன்றய நிகழ்வு உணர்த்தியது. போராட்டத்தில் பங்கெடுக்காத நிலையில் எதற்காக கைது செய்தோம் என்பதைக் கூட சொல்ல இயலாத நிலையில் உயர்மட்ட அழுத்தம் காரணமாக வன்முறையாக எங்களை கைது செய்த காவல்துறை சிறையில் அடைக்கவே இந்நிகழ்வை நடத்தியது என்பதை அவர்களது நடவடிக்கைகள் சொல்லியது.

கைது நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. ஆனால் அக்கைது நடவடிக்கையை நேர்மையாக முன்னறிவித்து செய்ய திராணியில்லாமலும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டது அவர்களை மேலும் மேலும் அம்பலப்படுத்துகிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இத்தகைய செயல்களை செய்து தங்களது மரியாதையை இழக்கின்றது தமிழக காவல்துறை. சட்டவிரோதமாக நடந்து கொள்வது குறித்து எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பது அதிர்ச்சிக்குரியது, கண்டிக்கத் தக்கது.

இவ்வாறாகவே தோழர்.முகிலன் அவர்களை கைது செய்து கொண்டு போனது காவல்துறை. இத்தகைய நடவடிக்கை சனநாயகத்திற்கு மிக மிக ஆபத்தானது, எதேச்சதிகாரமானது.

நாங்கள் மீண்டும் சொல்லிக்கொள்கிறோம், ‘கைதாவற்கு தயாராகவே இருக்கிறோம். எங்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. நேரடியாகவே கைது செய்வதை சொல்லி காவல்துறை முன்வருமெனில் கைதாவதற்கு தயாராகவே என்றும் இருக்கிறோம்.’

இத்தகைய வன்முறை-அடக்குமுறை கலாச்சாரம் மிக மிக ஆபத்தானது. காவல்துறையைக் கொண்டு மக்கள் இயக்கங்களை அடக்கிவிட முயலும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி அரசுகளின் அடக்குமுறை எங்களை அச்சப்படுத்தாது.

இத்தனை இயக்க-கட்சி தோழர்கள், தனி நபர்கள், படைப்பாளிகள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூகவலை தள செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் அழுத்தம் காரணமாகவே இன்று இரவு வீட்டிற்கு நாங்கள் திரும்புவது சாத்தியமானது. கைது செய்து சிறையில் அடைக்கும் அரசின் எண்ணத்தினை, முயற்சியினை நீங்கள் அனைவரும் ஒன்றாக குரல் எழுப்பி முறியடித்திருக்கிறீர்கள்.

நாம் அனைவரும் ஒன்றாக திரண்டோமெனில், நம் உரிமையை எவரும் பறிக்க இயலாது, எதிரிகள் வெற்றி பெற இயலாது, சதிகளால் நம்மை வீழ்த்த இயலாது என்பதை இந்த நாள் நிகழ்வு தெள்ளத்தெளிவாக உணர்த்தி இருக்கிறது. இது திருமுருகன், ப்ரவீன் எனும் நபர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான பாதுகாப்பு இத்தகைய ஒற்றுமை உணர்வே. எங்களுக்கு நீங்கள் கொடுத்த இந்த ஆதரவு அனைத்து களப் போராட்டதோழமைகளுக்கும் கிடைக்கப் பெற ஆவண செய்வோம்.

அறிவிக்கப்படாத அவசரநிலை- எம்ர்ஜென்சி ஆட்சியில் நாம் வாழ்கிறோம்.

கருப்புச்சட்டைகள் மீது நடத்திய ஒடுக்குமுறை தேநீர் கடைவாசிகள் வரை வந்து நிற்கிறது. ராஜபக்சே-சிரிசேனா ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்?

தமிழின எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வோம்.

இது குறித்து விரிவான செய்தி :

– திருமுருகன் காந்தி

Leave a Reply