போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி

போர்க்குணம் மிக்க தோழர்களே!

கல்வி, சுகாதாரத்துறையில் இட ஒதுக்கீட்டின் மூலமாகவும், சமூக நீதிக் கொள்கையாலும் தமிழர்கள் ஈட்டிய வளர்ச்சி, முன்னேற்றத்தை சூழ்ச்சியாலும், அதிகாரத் திமிரிலும் கைப்பற்றும், இந்திய ஆரிய உயர்சாதி வெறி கொண்ட’இந்துத்துவ’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக நீட் தேர்வினை எதிர்த்து போராடி தன்னுயிர் நீத்த போராளி மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம்.

இந்திய மோடி அரசு தமிழர்கள் மீது நிகழ்த்துகிற தொடர் தாக்குதலுக்கு தமிழ்க் குழந்தைகள் பலியாக்கப்படுகிற அவலம் ஆரம்பித்திருக்கிறது. தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டனர், கர்நாடகத்தில் தாக்கப்பட்டார்கள்,மீனவர்கள் கொல்லப்படுகின்றனர், தமிழ் மொழியின் மீது தாக்குதல், கீழடியை மூடுதல், சல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதலை தடை செய்தல், காவிரி டெல்டாவை அழித்தல் என நடக்கும் இந்த தாக்குதல், தற்போது இந்தியாவிலேயெ சிறந்து விளங்கும் மருத்துவ-கல்வி சுகாதாரக் கட்டமைப்பை சிதைத்து கொள்ளையடிக்க நடத்தப்படுகிறது. விவசாயத் தமிழர்கள், மீனவத் தமிழர்கள் கொல்லப்படுவது மட்டுமல்லாது தற்போது தமிழ் மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கு முழுமுதற் காரணம் இந்திய டெல்லி அரசு, மோடி, ஆர்.எஸ்.எஸ், நிர்மலா சீத்தாராமன், எச்.ராஜா, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கும்பல்களே. ஆரிய இனவெறி கொண்ட இந்த கொலைகார கும்பலுக்கு எதிராக தமிழர்கள் திரள வேண்டும்.

1951-ல் தந்தை பெரியாரும், 4500 திராவிடர் இயக்கத் தோழர்களும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து பதினைந்திற்கும் மேற்பட்டோர் சிறையிலேயே தம் உயிரை இழந்து பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை, அண்ணல் அம்பேத்கர் கடும் நெருக்கடிகளுக்கு இடையே கொண்டு வந்த இடஒதுக்கீட்டு உரிமையை, சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்று சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த உயர்சாதி வெறியை முறிய்டித்து நீதிக் கட்சியினர் கொண்டுவந்த உரிமையை, பெருந்தலைவர் காமராசர் தமிழருக்கு கல்வி பெரும் வசதியை, உரிமையை நிலைநாட்டியதற்காக ஆர்.எஸ்.எஸ்-சால் டெல்லியில் எரித்து கொலை செய்ய நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிய, உயிருக்கு அஞ்சாமல் கொண்டு வந்த உரிமையை மோடி அரசு காலில் போட்டு நசுக்க முயல்வதை எதிர்த்து களம் காணுவோம்.

‘நீட்’ உரிமையை பெற்றுத்தருவதாக பசப்பு காட்டி வஞ்சகம் செய்த திருமதி.நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை சனாதிபதிக்கு அனுப்பாமல் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் மோடி அரசு, இது குறித்து வாய் திறக்காத திரு.எடப்பாடி பழனிச்சாமி, திரு.ஓ.பன்னீர்செல்வம், திரு.தம்பிதுரை கும்பல் ஆகியோரை அம்பலப்படுத்தும் மக்கள் திரள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்.

மீனவர் கொலை, பணமதிப்பிழப்பு, விவசாய கடன் நீக்கம், கீழடி, சல்லிக்கட்டு போன்ற போராட்டங்கள் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமானபொழுதும், மக்கள் பாஜகவினை எதிர்த்த பொழுதும், மக்களை சந்திப்பதை தவிர்க்கும் இல.கணேசன், எச்.ராஜா, நிர்மலா சீத்தாராமன், கே.டி.ராகவன், எஸ்.வி.சேகர், நாராயணன் போன்ற உயர்சாதி பார்ப்பன கும்பல் வழக்கம்போல இவர்களின் சுதந்திர அடிமைகளான திருமதி.தமிழிசை, திருமதி.வானதி, திரு.பொன் ராதாகிருஷ்ணனை ஊடகங்களை சந்திக்க அனுப்புகின்றன.
நீட் விலக்கு வாங்கித் தருவதாக சொன்ன நிர்மலா சீத்தாராமன் எங்கே ஓடினார்? ஏன் மாணவி அனிதாவின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை? தலித்திய நண்பன் என்று வேடம் போடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் எங்கே ஓடின?
இந்து உரிமை என்று கலவரம் செய்யும் இந்து முன்னணி ராமகோபாலன் எங்கே? பார்ப்பன அடியாள் அர்ஜூன் சம்பத் எங்கே ஓடிப்போனார்? தமிழர்கள் உரிமை என்றாலே ஓடி விடும் இந்த கும்பல்கள் தமிழகத்தில் வளர நாம் அனுமதிக்கலாமா? பிள்ளையார் சிலையை தூக்கிக் கொண்டு இசுலாமியருக்கும், பொதுமக்களுக்கும் எதிராக ரவுடித்தனம் செய்யும் இந்த கும்பல்கள் தமிழர் விரோதிகளே. இந்த கூட்டங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவோம்.

இட ஒதுக்கீட்டு உரிமையை பெற்றுக் கொடுத்து நாமெல்லாம் கல்வி அறிவு பெறவும், மருத்துவர்களாக, பொறியியல் அறிஞர்களாக, சட்ட வல்லுனர்களாக வளரவும் பெரும் தொண்டாற்றிய ”தந்தை பெரியாரை அவமதிப்பேன்” என்று எக்காளமிட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் கும்பலை விரட்டியடிக்காமல் தமிழினம் தன் வளர்ச்சியை, வளத்தை பாதுகாக்க முடியாது.

இந்த சமயத்தில் காங்கிரஸ் செய்யும் துரோகங்களை நாம் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. தேடப்படும் குற்றவாளியான கார்த்திக் சிதம்பரத்தின் தாயாரும், தமிழினப் படுகொலையின் ரத்தத்தில் கை நனைத்தவருமான காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியான திருமதி நளினி சிதம்பரம் தொடர்ந்து நடத்தி வரும் தமிழின எதிர்ப்பு வழக்குகளும் அனிதாவின் மரணத்திற்கு காரணம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாய பாட மொழியாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்காடி தடை வாங்கிய இவர், நீட் தேர்வில் தமிழக மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு எதிராக CBSE மாணவர்கள் சார்பாக தடையை வாங்கினார்.

தமிழினத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்திய அரசின் தாக்குதல், இந்துத்துவ கும்பல்களின் தாக்குதலை போர்க்குணத்துடன் ஜனநாயக வழியில் எதிர்கொள்வோம். மாணவி அனிதாவின் மரணத்திற்கான நீதியை வெல்வோம். நீட் தேர்வினையும், இதர உரிமைகளையும் வென்றெடுக்க போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். வரும் வாரங்களில் பள்ளி, கல்லூரி பணியிடங்கள், வணிக தளங்கள் என அனைத்தையும் போராட்டக் களங்களாக மாற்றுவோம். மாணவர்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லூரிகளை புறக்கணியுங்கள். வேலை நிறுத்தம், பணிநிறுத்தம் மேற்கொள்வோம்.

தமிழ்க் குழந்தைகள் இனிமேலும் பலியாவதை தடுக்கும் ஒரே வழி போராட்டத்தை தீவிரப்படுத்துவதே. வீதிகளிலும், சாலைகளிலும் திரள்வோம். மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம். பாஜக அரசினை அம்பலப்படுத்துவோம். அதன் அலுவலகங்களை முடக்குவோம்.
திட்டமிட்டு ஆங்கில ஊடகங்கள் தமிழகத்தின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றன. உலகத்திற்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் எட்டுகின்ற அளவிலே போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். பள்ளி, கல்லூரி, வேலை, பணியிடங்களுக்கு நாம் சில நாட்கள் செல்லவில்லையெனில் எதுவும் பிழையாகி விடாது. தமிழ் குழந்தைகளின் சாவு அனிதாவோடு நிற்கட்டும். இனிமேலும் இது தொடரக் கூடாதெனில் தமிழகம் போராட்டக் களமாகட்டும். போராட்ட வேட்கை பரவட்டும்.

மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம்

தமிழகமே திரண்டெழு!

– திருமுருகன்.கா
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
புழல் சிறை
3-9-2017

Leave a Reply