பறிக்கப்பட்டது சமூக நீதி! நீட் தேர்வினை ரத்து செய்ய வைப்போம்.

பறிக்கப்பட்டது சமூக நீதி! நீட் தேர்வினை ரத்து செய்ய வைப்போம்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என்று முதலில் அறிவித்து, பின்னர் ஓராண்டு மட்டும் விலக்கு என கோரிக்கை தேய்ந்து இப்போது முழுவதுமாக படுகுழியில் தமிழ்நாட்டு மாணவர்களை தள்ளியிருக்கிறது தமிழக எடுபிடி அரசு.

ஓராண்டு மட்டும் விலக்கு என்பதே அயோக்கியத்தனமான கோரிக்கையே. ஆனால் அதையும் கூட எட்டி உதைத்திருக்கிறது இந்திய பாஜக அரசு. கல்வி என்பது மாநிலங்களின் உரிமை. நாம் எந்த கல்வி முறையில் பயில வேண்டும் என ஒன்றிய டெல்லி அரசு முடிவு செய்ய முடியாது.

இத்தனை காலமாக அடை காத்து வந்த மாநில சுயாட்சி உரிமையினை தட்டிப் பறித்திருக்கிறது இந்திய அரசு.

பெரியாரும், அம்பேத்கரும் போராடிப் பெற்றுக் கொடுத்த சமூக நீதி இடஒதுக்கீட்டு உரிமையை அழித்து பார்ப்பனிய சாம்ராஜ்யத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு தமிழக மாணவர்கள் பாடம் புகட்ட வேண்டும்.

சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற 1920 களுக்கு முந்தைய காலத்தினை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். சூத்திரனுக்கு எதற்கு மருத்துவப் படிப்பு என்பதையே “தகுதி”, “திறமை” என்ற பல்வேறு போலி வார்த்தைகளை சொல்லி நீட் தேர்வின் மூலமாக நம்மைக் கேட்கிறார்கள்.

பல்வேறு கலாச்சாரங்களையும், பல்வேறு தரப்பட்ட வரலாறு கொண்ட தேசிய இன மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் ஒற்றைக் கல்வி முறையை திணிப்பது என்பது அயோக்கியத்தனமானது. பார்ப்பனிய CBSE முறையில் தான் அனைவரும் படிக்க வேண்டும் என தள்ளுவது பாசிசமாகும்.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு தான் சிறந்த மருத்துவப் பின்னணியைக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 24 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே அதிக மருத்துவ இடங்களை உருவாக்கியிருக்கிறது.

குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1000க்கு 21. இந்தியாவில் 1000க்கு 40.

பிரசவத்தில் இறக்கும் தாய்கள் விகிதம் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கு 79. இந்தியாவில் 167.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் 18%. இந்தியாவில் 28%.

1 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் 149 மருத்துவர்கள். இந்தியாவில் 36.

வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகமாக வருகை புரிவது தமிழ்நாட்டிற்குத்தான்.

மருத்துவ உயர்கல்வியில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.

இவை அனைத்தையும் தமிழ்நாடு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிக் காட்டியது. தனது மாநிலத்தின் கல்வி வழியே படித்த மாணவர்கள் உருவாக்கியது. CBSE பாடத்திட்டத்தில் படித்து வந்தவர்கள் எவரும் இதில் எதையும் கிழித்து விடவில்லை.

தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத் திட்டப்படி 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடத் திட்டத்தின் கீழ் படித்துள்ளனர். ஆனால் CBSE மாணவர்கள் வெறும் 4,675 பேர்.

மேல்தட்டு உயர்சாதி சமூகத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்திய பாஜக அரசு.

ஒற்றைக் கல்வி முறை திணிப்பினையும், நீட் அநீதியினையும் எதிர்த்து வீதிகளை நிரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நீதிமன்றம் அவர்களுக்கான கடமையினை செவ்வனே செய்து முடித்து விட்டது. இனி நமக்கு பெரியார் காட்டிய வழிதான். நீதிமன்றத்தின் தீர்ப்பை விட மக்கள் மன்றம் முடிவு செய்யும் தீர்ப்பே முக்கியம்.

ஜல்லிக்கட்டிற்காக திரண்டு போராடி தீர்ப்பை மாற்றினோம். போராடினால் தீர்ப்புகள் திருத்தப்படும். சட்டங்கள் மாற்றப்படும். போராடத் தயாராவோம்.

– மே பதினேழு இயக்கம்.
9884072010

 

Leave a Reply