உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.

- in அறிக்கைகள்​, மே 17
215

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.

அதனைப் பற்றிய எந்த தயக்கமும் இன்றி சுதந்திர தினக் கொண்டாட்டத்தினை “வளர்ச்சி” மந்திரத்தினை ஓதி நிகழ்த்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி அரசு.

குழந்தைகளின் மரணம் மூளைச் சிதைவினால் நிகழ்ந்ததென்றும், ஊட்டச்சத்து குறைவினால் நிகழ்ந்ததென்றும், விபத்தென்றும் பல்வேறு பொய்களை சொல்லி, நெஞ்சு நிமிர்த்தி சுதந்திர தின உரையை நிகழ்த்தி முடித்திருக்கிறார்கள் மோடி, யோகி மற்றும் பாஜகவினர்.

தனியார் நிறுவனத்திடம் ஆக்சிஜன் சப்ளை பெற்று வந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில், பணம் கட்டாத காரணத்தினால் ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்தியிருக்கிறது அந்த தனியார் நிறுவனம். இதனால் 63 குழந்தைகள் பலியாக்கப்பட்டிருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்த்தால், பணமில்லாத ஏழைகளின் நிலை என்னவாகும் என்பதை இந்த படுகொலை சம்பவம் நமக்கு முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.

மூச்சுக்கு முன்னூறு வரி போடும் இந்த அரசாங்கம், ஏழை மக்களுக்கு நல்ல மருத்துவத்தினை அளிக்க மறுக்கிறது. அப்படியென்றால் யாருக்கானது இந்த வளர்ச்சி முழக்கங்கள். யாருக்கானது உங்கள் டிஜிட்டல் இந்தியா?

மாடுகளுக்கு ஆம்புலன்ஸ், ஆதார் என்று மாடுகளைப் பற்றியே பேசிக் கொண்டு, அதைப் பயன்படுத்தி மதவெறியை வளர்க்கும் அரசு, பிஞ்சுக் குழந்தைகளை எந்த பராமரிப்புமின்றி பலி கொடுத்திருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் அரசு மருத்துவமனைகளில் ஏழைகளின் மரணம் என்பது சர்வசாதாரண ஒன்றாக விவாதங்களே இன்றி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கல்வியையும், சுகாதாரத்தையு முறையாக வழங்குவதே ஒரு அரசின் முதல் கடமை.

அதனை சரியாக செய்யாமல், மதத்துவேசத்தில் காலத்தினை கழித்துக் கொண்டிருக்கும் உத்திரப்பிரதேசத்தின் பாஜக-யோகி ஆதித்யநாத் அரசு இந்த படுகொலை சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் முழுமையான பொறுப்பினை அரசு ஏற்று, அவற்றுக்கு முழு அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து மக்களுக்கும் சாதி, மத, வர்க்க வேறுபாடின்றி சமமான மருத்துவ வசதி கிடைக்குமாறு செய்ய வேண்டும். இதற்கு அரசு மருத்துவமனைகளின் பிரிவுகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

உலக வர்த்தகக் கழகத்தில் (WTO) அரசு மருத்துவமனைகளை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்க அடிமை சாசனம் எழுதிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது நிறுத்தப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply