சேசசமுத்திரம் சாதிவெறி தாக்குதல் – மே17 இயக்கம் கண்டனம்

விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம்(அகரம்) கிராமத்தில் நிகழ்ந்த சாதிவெறி தாக்குதலை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இப்பகுதியில் தாம் உருவாக்கிய தேரை ஓட்ட கடந்த 4 வருடங்களாக தாழ்த்தபட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து அப்பகுதியில் இருக்கும் முற்போக்கு இயக்கத் தோழர்களும், தலித் இயக்க-கட்சித் தோழர்களும் போராடி வந்திருக்கிறார்கள்.

 

இன்று (16-08-2015) தேரோட்டுவதற்கான அனுமதியை பெற்றபின்னர் , அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும், அதற்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்டு 15 ல் சுமார் 7-15 மணியளவில் தேர் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் கூரை வீட்டிற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் தீ வைத்து நாசம் செய்தனர் அதோடு மட்டுமின்றி பெட்ரோல் குண்டு வீசினர் அப்போது தடுக்க சென்ற காவல்துறையினரையிம் கல் வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்கினர் அதில் ஏழு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் 3 காவல்துறை அதிகாரிக்கு மண்டை உடைந்தது.
தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதால் மேலும் 3 வீடுகள் தீக்கிரையாக்கினர், தேர் மீதும் பெட்ரோல் குண்டு வீசி சேதம் செய்யப்பட்டுள்ளது.

 

உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்கி அழிப்பதும், அவர்களது வீடுகளில் இருந்து வெளியேறும் வண்ணம் தாக்குதலை அவர்களது குடியிருப்புகளில் நிகழ்த்துவதும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. வலிமையான பின்னனி இல்லாமல் இது போன்ற தாக்குதலை செய்யும் மனநிலை இச்சாதிவெறியாளர்களுக்கு உருவாக முடியாது. கோழையான மனநிலையை கொண்ட இந்தசாதி வெறியாளர்களிடத்தில் அரசு மென்மையான போக்கையே கடைபிடிக்கிறது.

 

தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட வன்முறைகொண்டு தடுத்து வெறியாட்டம் போடும் சாதிவெறியை தமிழக அரசு இதுவரை கடுமையாக ஒடுக்கத் தவறியிருப்பதை சாதகமாக பயன்படுத்தியே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடக்கின்றன. மனிதத் தன்மையற்ற சாதிவெறியை திட்டமிட்டு பரப்புவதும், வன்முறை தாக்குதல்களை வடிவமைத்து பாதுகாப்பற்று வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்துவதும் வளர்ந்து வருகிறது. கோகுல்ராசு கொலையாளி யார் என்று தெரிந்தும், இதுவரை அதிமுக அரசு கைதுசெய்யவில்லை.
அரசுக்கு தெரியாமல் இந்த வன்முறையும் நிகழ வாய்ப்பில்லை என்றே தோழர்கள் பதிவு செய்தார்கள். இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கிறது. பெருமளவில் கற்களை கொண்டும் தாக்கி இருக்கின்றனர். இரு தரப்பிற்கும் இடையே அமைதிக் குழு ஏற்படுத்தி காவல்துறையினர் பேசிய பொழுது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மறுத்து சென்ற சாதிவெறியினர் மீது தக்க நடவெடிக்கைகளை எடுத்திருந்தால் வன்முறை தடுக்கப்பட்டிருக்கலாம். அரசிற்கு தெரியாமல் எப்படி பெட்ரோல் குண்டுகளை பெருமளவில் தயாரித்து தாக்குதலுக்கு தயாரவது இயன்றது என்பது கேள்விக்குரியே?..

இந்தப் பகுதி அதிமுக எம்.எல்.ஏ மோகன் அவர்களுடைய பகுதி. இவர் அமைச்சராக இருக்கிறார். கிராமப்புற தொழில் மற்றும் சிறு தொழில்களுக்கான அமைச்சராக இருக்கிறார். இதுவரை இவர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவரவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக ஊரை விட்டி வெளியேறி இருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் இவர்கள் இருப்பதால் இவர்களது பாதுகாப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.. சாதிவெறியை வளர்த்து பாதுகாக்கும் கும்பல்களை அரசு கடுமையாக கையாள மறுக்கிறது. அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக நிற்க மறுப்பதை கண்டிப்பது அவசியம்.

மனித குல விரோத தாக்குதலுக்குள்ளான உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றாவோம்.

கோகுல்ராசு, நெல்லை-மகராசன், ஒட்டன்சத்திரம்-முத்துக்குமார் போன்றோரின் கொலைக்கான நீதிக்கு அனைவரும் ஒன்றாக திரண்டிருந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க தவறும் ஒவ்வொரு கணமும் இது போன்ற மனித குல விரோதிகள் வலிமையாவதை நம்மால் தடுக்க இயலாது….

நாம் ஒன்றாக திரண்டு சாதிவெறியன்களுக்கு எதிரான குரலை வலுப்படுத்துவோம். அகரம் கிராம மக்களுக்கான நீதியின் குரலை நாம் உரக்க வெளிப்படுத்துவோம்.
இந்த காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதிமுக அமைச்சர் திரு.மோகன் அவர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் எனும் கோரிக்கையை இச்சமயத்தில் முன்வைக்க விரும்புகிறோம்.

ஏழை எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை காக்க வக்கற்ற அரசும், அரசதிகாரமும் மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பதாகவே நம்ப இயலும். இந்த வகையிலேயே கடந்த வருடங்கள் முதல் இது நாள் வரை தமிழக அரசும், அதிகார வர்க்கமும் செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்நிகழ்விற்கு அதிமுக அரசு உடனடியாக கடுமையான நடவெடிக்கை எடுத்து சமூகவிரோத-சாதி வெறியர்களை கைது செய்வதும், அப்பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்க தவறியதால் பதவி விலகுவதும் உடனடி எதிர்வினையாக கருதுகிறோம்.

சாதிவெறியர்களுக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றிணையுமாறு மே17 இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

மே பதினேழு இயக்கம்.
16-08-2015

11889661_692279924238779_104194746303834575_n