திரு.வைகோ தயாரித்த “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு விழா-தோழர்.திருமுருகன் ஆற்றிய உரை.

- in பரப்புரை

சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில்,தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.

ஒரு சமூகத்துக்கு, பல்வேறு அரசியல் களங்களில் நின்று பேசுவதற்கு, அதனுடைய பிரச்சினைகளை விரிவாக வாதிடுவதற்கு, அறிஞர்கள் தேவைப் படுகிறார்கள்; போராளிகள் தேவைப்படுகிறார்கள்; நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள் ; வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். இவை அனைத்தையுமே செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவராக, ஐயா வைகோ அவர்களை நான் பார்க்கின்றேன்.

கடந்த மூன்று தலைமுறைகளாக, தமிழ் ஈழ விடுதலைக்கான நோக்கத்தை,அதன் அடிப்படையான நியாயத்தை, மிகத் தெளிவாகவும், மிக ஆழமாகவும், எளிமையான சொற்களில் எடுத்துக் கூறி விளக்கி, தமிழகம் முழுமையும் கொண்டு சென்று இருக்கக்கூடிய ஐயா வைகோ அவர்களுக்கு, தமிழ் ஈழ விடுதலை என்கின்ற அந்தப் பெரும் பயணத்தில்,தமிழகத்தைச் சேர்த்ததில், பெரும்பங்கு இருக்கின்றது.

2009 க்குப் பிறகான காலகட்டத்தில், தமிழ்ச் சமூகத்தில், போராட்டக் களத்தில் இருந்து வரக்கூடிய கோரிக்கைகள் என்பதையும் தாண்டி, புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, தமிழ் ஈழத்தில் இருக்கக் கூடிய தமிழ்ச்சமூகமாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இருக்கின்ற தமிழ்ச்சமூகமாக இருந்தாலும் சரி, இவை அனைத்துமே எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்கின்ற ஒரு குழப்பம் இருந்தது.

அந்தக் கட்டத்தில், தமிழகத்தில் இருந்து ஒரு குரல், தமிழ் ஈழ விடுதலையின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற அந்தக் கோரிக்கையை, யார் மனித உரிமையாக சித்தரிக்கின்றார்களோ, யார் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்து, அமைதிப் பேச்சுகளை முடக்கி, தமிழ் ஈழ விடுதலையை நோக்கிய பயணத்தை உடைக்க முயற்சி செய்தார்களோ, அந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாடாளுமன்றத்திலே, ‘இது மனித உரிமைகள் பிரச்சினை அல்ல; மனித அவலம்; விடுதலைக்கான பயணம் ; அந்தத் தருணம், தமிழ் ஈழ வரலாற்றில் மட்டும் அல்ல, தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமானது.

அவரை ஒரு அரசியல் கட்சித்தலைவராக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஒரு அரசியல் கட்சிக்கு எந்த விதமான பொறுப்பு ஜனநாயகத்தில் இருக்கின்றதோ அந்தப் பொறுப்பை, ஒரு சமூகத்தில் போராளியாக, அரசியல் போராளியாக இருக்கக்கூடிய, நமக்கு எந்த விதமான கடமை உணர்ச்சி இருக்க வேண்டுமோ அந்தக் கடமை
உணர்ச்சியும், ஒரு வழக்கறிஞருக்கு ஒரு வழக்கைப் பற்றி எந்த அளவுக்கு நுண்ணிய விவரங்கள் தெரிந்து இருக்குமோ, அந்த அடிப்படையில் வாதங்களை முன் வைக்கக் கூடியவராக,அந்த பிரஸ்ல்ஸ் மாநாட்டில் வைகோ உரை ஆற்றியதை நாம் பார்த்துஇருக்கிறோம்.இது, எந்தச் சமூகத்துக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. இப்படிப்பட்ட ஒருவர், தமிழ்ச்சமூகத்தின் நியாயத்தை, வாதங்களை எடுத்து உரைப்பதற்குத் தேவைப்படுகின்றார்.


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மீனவர்கள் படுகொலைகள் குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுப்பதற்காக, நாங்கள் இராமேஸ்வரம் பகுதிக்குச் சென்று இருந்தோம். இலங்கையைத்தோற்கடித்து இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த இரவில், சிங்களக் கடற்படை நான்கு தமிழக மீனவர்களைச் சுட்டுப் படுகொலை செய்தது. 

இறந்து போன ஒரு மீனவருடைய வீட்டுக்கு நாங்கள் சென்று இருந்தோம். அவரது மனைவியைச் சந்தித்துப் பதிவு எடுத்துக்கொண்டு இருந்தோம். அவர்களுக்கு, மூன்று வயதில் ஒரு குழந்தை. நாங்கள் அங்கே சென்று இருந்த அந்த நாள், அவர்களுடைய திருமண நாள். அது, எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு அது துக்ககரமான நிகழ்வாக மாறி இருந்தது. மிகுந்த வேதனையோடு, எங்களுக்கு மனம் இல்லாமல் அந்த ஒளிப்பதிவை நாங்கள் செய்து கொண்டு இருந்தோம்.

அந்தக் குழந்தைக்கு, தன் தந்தை இறந்தது தெரியாது. அப்பா திரும்ப வருவார் என்ற மனநிலையில் தான் அந்தக் குழந்தை இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது,
‘அம்மா, தாத்தா எப்போது என்னைப் பார்க்க வருவார்? அவரை நான் பார்க்கணும்’ என்று அந்தக் குழந்தை கேட்டது. அந்தத் தாய், தனது துக்கத்தைக் குழந்தைக்குக் காட்டாமல், எங்களோடு பேசி பதிவு செய்து கொண்டு இருந்தார்.

அந்தக் குழந்தையின் தாத்தாவும் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால், இந்தக் குழந்தை தாத்தா எங்கே? என்று கேட்கிறது. எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. எனவே, குழந்தை யாரைப் பற்றிக்கேட்கிறது? என்று நாங்கள் அந்தத் தாயிடம் கேட்டோம். அதற்கு அவர் சொன்னார்: வைகோ தாத்தா எப்போ வருவார்? என்று கேட்கிறது என்றார்.

எங்களுக்கு அது வியப்பாக இருந்தது. ஏனென்றால், அந்த மீனவர் இறந்த பிறகு, அடுத்து என்ன செய்வது என ஆதரவு அற்ற நிலையில் நின்ற அந்த இளம் பெண்ணுக்கு, ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்து, வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளையும், மிக அமைதியாக, யாருக்கும் தெரியாமல், தன்னை எந்த இடத்திலும் முன்னிறுத்தாமல் செய்து கொடுத்து இருக்கிறார் ஐயா வைகோ.

 நன்றி : வால்டர் வில்லியம்ஸ்


Leave a Reply