தமிழினப் படுகொலையை மறவோம்! தமிழீழம் வெல்லும் வரை ஒயோம்!

- in பரப்புரை

2009 முள்ளிவாய்க்கால் போரில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை தமிழருக்கு எதிராக சர்வதேசத்தின் துணையோடு இலங்கை இனவெறி அரசு நடத்தி ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் தமிழர்களை கொன்று குவித்தது.

இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் ஆனபின்னும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ‘விடுதலை’ என்கிற ஒற்றைச் சொல்லிற்காக ஒரு தலைமுறையே அழிந்தாலும் எதிரிகளை விடப்போவதில்லை, பிறந்த மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தமீழீழத் தமிழர்கள் போர் புரிந்து மடிந்தார்கள்.

இதோ இந்த தமிழர் கடலின் கரையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் இலங்கையில் நாம் மற்றும் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க, பதைக்க பதைக்க, வதைத்து வதைத்து, வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் நம் உறவுகள். தமிழீழம் என்கிற தனது நாட்டினை இலங்கையின் பிடியிலிருந்து விடுவிக்காமல் ஓயமாட்டோம் என்று போராடி மடிந்த தமிழர்களுக்காக 2009இல் நாம் போராடாமல் மெளனம் காத்த கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் நடந்து இருக்காது.

நம் வரிப்பணத்தினை வைத்து இந்தியாவும், இனவெறி கொண்ட இலங்கையும் கைகோர்த்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் துணையோடு தனித்து விடப்பட்ட தமிழர்களை வேட்டையாடினார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாமும் அவர்களை கைவிட்ட பாவம் வரலாறு முழுவதும் நம்மை துரத்தும்.

இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற சூழ்நிலையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைக்கு வலுசேர்க்கவும், இந்த இனப்படுகொலை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வருடம்தோறும் சென்னை மெரினா தமிழர் கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் விதமாக பொதுமக்கள் பங்கேற்க்கும் நினைவேந்தலை தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது மே17 இயக்கம்.

2011 சூன் 26ஆம் நாள் ஐ.நாவின் சித்தரவதைக்கு எதிரான தினத்தில் ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளின் கவனத்திற்கு தமிழீழ இனப் படுகொலையையும், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய மீனவர்களின் நிலையையும் கொண்டு செல்வதற்காகவும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உணர்வாளர்கள், தலைவர்கள், வேற்று மொழி மக்கள் கலந்து கொண்டு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலையே என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்தார்கள்.

அதுபோல சென்ற ஆண்டு 2012 இனப்படுகொலை வாரமான மே 20ஆம் நாள் நினைவேந்தலை கீழ்க்கண்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், தலைவர்கள் (குறிப்பாக இதில் வடநாட்டு தலைவர் திரு.ராம்விலாஸ் பசுவான் கலந்து கொண்டு தனி ஈழமே ஒரே தீர்வு என்று நமது கோரிக்கைக்கு மேலும் வலுசேர்த்தார். அதன் பின் அவர் ஈழம் சம்பந்தமாக யார் அழைத்தாலும் இந்த கோரிக்கையில் உறுதியாக இன்று வரை இருக்கிறார்.) பங்கேற்ப்போடு நடத்தினோம்.

1. தமீழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே.

2. தமீழீழ விடுதலைக்காக ஐ.நா அவையின் மேற்ப்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பானது தமீழீழத்தில் வாழும் தமிழர்களிடத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும்.

3. இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் தண்டிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் அதில் ஆசிய நாடுகள் எதுவும் இருக்க கூடாது.

இதுபோல இந்த 2013ஆம் ஆண்டும் இனப்படுகொலை வாரமான மே 19ஆம் தேதி தமிழனப் படுகொலைக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தலை அதே தமிழர் கடற்கரையில் நீதீ கேட்ட கண்ணகி சிலையின் பின்புறம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பொழுது நமது கோரிக்கைகள் ஆனது அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து அது மாணவர் போராட்டமாக மாறி அரசுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து சட்டமன்றத்தில் ஈழம் சம்பந்தமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக நிறைவேறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இனப்படுகொலை என சொல்ல மறுக்கிறது. இனப்படுகொலை என்று சொன்னால்தானே தனி நாட்டிற்கான நீதி கிடைக்கும் என்பதால் இதை மறுக்கிறார்கள்.

ஏப்24 1915ல் நடந்த இனப்படுகொலைக்காக 98 ஆண்டுகள் கடந்த பின்னும் ஆர்மீனிய மக்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் ஒன்று கூடுகிறார்கள், யூதர்கள் 60 ஆண்டு கழித்தும் இன்றும் தங்களது வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.

உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வருடம் தோறும் இதே தமிழர்கடல் கரையோரம் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நம் குடும்பம்-குழந்தைகளுடன் நினைவேந்தி ‘தமிழினப்ப டுகொலையை மறக்கமாட்டோம், தமிழீழ விடுதலையை அடையாமல் ஓய மாட்டோம்’ என உறுதி மொழியேற்போம்.

இந்த கருத்துப் பதிவுகளை மக்கட் சமூகங்களிடயே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும், அறிவுச்சீவிகள்-கலைஞர்கள் இந்த கோரிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரினாவில் மே 19 ஆம் தேதி நடைபெறுதல் அவசியமாகிறது. இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கம் மட்டுமே நடத்துகிற நிகழ்வாக அமையாமல் அனைத்து தோழமை இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய முழக்கங்களை முன்வைத்து இந்த நினைவேந்தலில் பங்களிக்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வை தங்களுடைய சொந்த நிகழ்வாக மாற்றி, அதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளுதலை வரவேற்கிறோம். மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைவுப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக செயல்படும். மேலும் விருப்பமுள்ள அமைப்புகள் எங்களது ஒழுங்கமைப்பு பணிகளில் பங்கெடுத்து, பணியை மேலும் செழுமை பெறச் செய்ய உதவுமாறும் வேண்டுகிறோம்.

2009 இல் தமிழீழ மக்களின் ரத்தம் கலந்த அதே தமிழர் கடற்கரையில் மே 19, 2013 ஆம் நாள் மாலையில் கண்ணகி சிலையின் பின்புறம் ஒன்று கூடி நமது வணக்கங்களை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் செலுத்துவோம். நாம் இணைவோம்.

– மே பதினேழு இயக்கம்

9600781111/9443486285

Leave a Reply