நரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்?

- in பரப்புரை
குஜராத்தில் 2000இல் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நிகழ்ந்த இசுலாமியர் மீது நிகழ்ந்த இனப்படுகொலையை மறக்க முடியாது, மன்னிக்க முடியாது. இந்தியாவில் சிறுபான்மையினர், தேசிய இனங்களின் மீது இந்துத்துவ ஆற்றல்கள் அரசாகவும், அமைப்புகளாகவும் தொடர்ச்சியாக நிகழ்த்தும் வன்முறையானது நீண்ட வரலாற்றினைக் கொண்டது. பார்ப்பனிய-இந்துத்துவம், இசுலாமியர் மீது நடத்தும் அரசியல், பண்பாட்டு வன்முறை, வன்மத்தின் அடிப்படையாக நிற்பதன் காரணம், ஒடுக்கப்பட்ட சமூகம் இந்துத்துவத்தின் ஒடுக்குமுறையிலிருந்தும், சுரண்டலில் இருந்தும் தம்மை காக்க இசுலாமிய அடையாளத்தினை கைக்கொண்டாகும். சிறுபான்மை மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்யத் தயங்காத ஓர் ஆட்சியாளர் இதே மன நிலையைத்தான் இந்தியா என்கிற கருத்தியலை கேள்விக்குள்ளாக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட, தேசிய இன, சிறுபான்மை மற்றும் போராடும் மக்களின் மீதும் செலுத்துவார் என்பது வரலாற்று ரீதியான உண்மை.

ராஜபக்சே இலங்கையில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு எந்த விதத்திலும் குறைந்த அளவில் இல்லாமல் நிகழ்ந்தப்பட்ட குஜராத் இனக்கொலையும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த நேரடிமோதல் (என்கெளண்டர்) மூலமாக நிகழ்ந்த கொலைகளையும் எந்தவிதத்திலும் பாஜக நியாயப்படுத்தி விட முடியாது. வளர்ச்சி என்கிற முழக்கத்தின் காரணமாக நிகழும் மனித உரிமை மீறல்களையும், இனக்கொலைகளையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட முடியாது. எதற்காகவும் நீதியை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. ஹிட்லரின் ஆட்சிக் காலத்திலும், முசோலினியின் ஆட்சிக்காலத்திலும், ராஜபக்சேவின் ஆட்சியிலும் பொருளாதார வளர்ச்சி – கட்டுமான முன்னேற்றம் எனப்படும் பொருளாதாரக் காரணிகள், முதலாளித்துவ வளர்ச்சிகள் நிகழவே செய்தன/செய்கின்றன. இவை அந்தப் பாசிசத்தின் ஒருபக்க விளைச்சலாக நிகழ்கின்றன. இந்த விளைச்சலில் பலியிடப்பட்ட அடித்தட்டு மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் நாம் மறந்துவிட்டு முன்னேற்றத்தினை பேசிவிட முடியாது.

இந்துத்துவம் ஒருபொழுதும் இந்தியத்தினை விட்டுக்கொடுக்காது. இந்திய தேசியத்தின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க பல்தேசிய இனமான இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் பிற தேசிய இனங்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும். இவை ஏற்கனவே எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் மேலும் கூர்மையடையும். இந்திய தேசியத்தினை கட்டிக் காக்கிறோம் என்கிற பெயரில் அனைத்து தேசிய இனமக்களின் மீதும் அரச பயங்கரவாதம் காங்கிரஸைப் போலவே நிகழ்த்தப்படும். காசுமீர போராளி அஃப்சல் குரு தூக்கிலிடப்படுவதை விரைவுபடுத்தக் கோரியவர்கள் இவர்கள். அப்சல் குருவின் மரணத்தினை ஜனநாயக முறையில் எதிர்த்தவர்களை புதுதில்லியில் தாக்கியவர்கள் இந்துத்துவவாதிகள். இதே ஒடுக்குமுறைதான் நமக்கும் நிகழும்.

இந்த வகையில் இந்தியாவின் உள்ளேயும், அண்டைப்புற நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன மக்கள் போராட்டங்களில் இந்தியா தலையிடும். காங்கிரஸின் அதே மக்கள் விரோதக் கொள்கை முறைகளே இலங்கை, பர்மா, நேபாளம் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது தமிழீழத்தின் மீதான விரோதத்தினை இந்தியம் எந்தவகையிலும் குறைத்துக் கொள்ளப்போவதில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினால் முடிவெடுத்துச் செயல்படுத்தப்படும் பொழுது, இதை ஒரு பொழுதும் கேள்வி எழுப்பாத இந்திய-பார்ப்பனிய-இந்துத்துவம் தமிழினத்தின் மீதான விரோதத்தினை குறைத்துக் கொள்ளும் என நம்பமுடியாது.

தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் வெளியிட்ட தமிழீழ எதிர்ப்பு அறிக்கைகள், நிலைப்பாடுகள், இலங்கை அரசுடன் மேற்கொள்ளும் நட்பு நடவடிக்கைகள் என்பது தமிழ்ச் சமூகத்தின் கவலைகளில் முக்கியமானது. சுப்ரமணிய சாமி போன்ற மூன்றாம்தர கொலைகாரக் குற்றவாளிகளை தன்னகத்தே, எந்த விமர்சனமின்றி இணைத்துக் கொள்ளும் ஒரு கட்சியும், அதன் தலைமையும் எந்தவிதத்திலும் நேர்மையான கட்சி கிடையாது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸின் இலங்கை மீதான கொள்கையே தமது கட்சியின் கொள்கை என அறிவித்திருக்கிறார். பாஜகவின் தலைவர் லால்கிருஷ்ண அத்வானி சிங்கள மக்களுடனான தமது ஆரிய உறவின் பாசத்தினை வெளிப்படுத்துகிறார். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தேவையில்லை எனவும், அதை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் பாஜகவின் ரவிசங்கர்பிரசாத் அறிவிக்கிறார். இதே போல பாராளுமன்றத்தில் இலங்கையில் நிகழ்ந்த படுகொலைகளைப் பற்றி 2011இல் பாஜக கேள்வி எழுப்பினாலும், அது ஒருபோதும் இலங்கை மீதான கொள்கை மாற்றத்தினைக் கோரவில்லை. மாறாக, தமிழீழப் பிரச்சனையைக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்கிற அரசியல் தந்திரமே காண முடிகிறது. சுஷ்மா சுவராஜ்ஜின் ’சாஞ்சி’ தொகுதிக்கு ’அன்புடன்’ அழைக்கப்பட்ட்ட ராஜபக்சேவினையும் அவருக்கு அளிக்கப்பட்ட மத்தியப் பிரதேச அரசின் மரியாதையையும் தமிழர்கள் ஒருமோதும் மறக்க மாட்டார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவானது தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பற்றியோ, அவர்கள் சந்திக்கும் இன அழிப்பினைப் பற்றியோ வாய்திறக்கவில்லை.

ஓர் இனப்படுகொலையை சந்தித்த சமூகம், காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கையை முன்மொழியும் எந்த ஒரு தேசிய, மாநில கட்சிகளை எந்தக் காலத்திலும் தேர்ந்தெடுக்காது என்பதை இந்திய துணைக்கண்டத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்துத்துவத்தினை வரலாறு முழுவதும் எதிர்த்த ஓர் இனம், தனது நலன்களை விட்டுக்கொடுத்து போராட்டத்திலிருந்து பின்வாங்காது என்பதை இந்தியப் பேரரசு புரிந்துகொள்வது அவசியமாகிறது. சிங்கள பெளத்த பேரினவாதமும், பர்மிய பெளத்த பேரினவாதமும் இந்தியாவின் பார்ப்பன இந்துத்துவத்துடன் இணைந்து சிறுபான்மை-தேசிய இன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் கவனிக்கத் தவறவில்லை. இந்த கூட்டமைவு தெற்காசிய பிராந்தியத்தின் அப்பாவி உழைக்கும் மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்தியாவில் தேசிய இனச்சிக்கல் கூர்மையடையும் இந்தக் காலத்தில், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென்கிற அரசியல் நெருக்கடி உண்டான இந்த நேரத்தில், இந்திய தேசியத்தினை ஒற்றை ஆற்றலாக காட்டவும், ஒன்றிணைக்கவும், தேசம் தழுவிய ஒற்றைத் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக தேவைப்படுகிறார்கள். அதாவது ஒரே தேசம், ஒரே இனம், ஒரே ஒரு வலிமையான கட்சி என்பதன் மூலமாக இந்திய துணைக்கண்டத்தின் பன்மைத் தன்மையை உடைப்பது இந்துத்துவ பார்ப்பனிய ஆற்றல்களுக்கு அவசியமாகிறது. இதன் மூலம் மாநிலக் கட்சிகளின் அதிகாரங்களும், மாநில அரசுகளின் அதிகாரங்களும் குறைக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படும். மாநிலக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி அம்மாநில அல்லது தேசிய இனமக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு தேசிய நலன் என்கிற நோக்கத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தேசிய முதலாளிகளுக்கும் ஒட்டுமொத்தமாக தேசிய இனமக்களின் சொத்துக்கள் விற்கப்படும். எனவே இந்த ஒற்றைத்தலைமை – ’ராகுல்’, ’மோடி’ – கோரிக்கையானது தேசிய இனங்களின் நலன்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியே. வலிமையான ஓர் இந்தியத் தலைவர் என்பது இந்தியாவின் பல்தேசிய இனங்களுக்கு ஆபத்தானதே.

இந்துத்துவ வெறியை மையமாக்கி அப்பாவி மக்களை கொலைசெய்யும் நரேந்திர மோடி, சிறுபான்மை-தேசிய இனங்களின் மீது வன்மத்தினை வெளிப்படுத்துகிற கட்சி, அதிகாரத்தினை மையப்படுத்தும் இந்திய தேசிய அதிகார வர்க்கம் ஆகியவை இணைந்து பெரும் வெற்றியடைந்தால் இங்கு இருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக வெளியும் (அல்லது அவ்வாறு சொல்லப்படுகிற) அடைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி என்கிற அவசர நிலையை நோக்கியே நகரும். ஏனெனில் பாசிச தேசிய கோட்பாடுகள் ஆட்சியை கைக்கொள்ளும் பொழுது பெரும்பான்மையான உழைக்கும்-போராடும் மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த கூட்டணி மூலம் காங்கிரஸ் அரசு தற்பொழுது மசோதாவாக மாற்றி இருக்கிற உலகமயமாக்கலின் கொள்கைகளான தண்ணீர் தனியார்மயம், கடற்கரை பாதுகாப்பு மசோதா, மின்சார தனியார் மயம், அணு சக்திக்கொள்கை, காப்பீடு தனியார்மயம், காடு பாதுகாப்பு மசோதா, நிலத்தினை கைக்கோள்ளும் மறுசீரமைப்பு-மறுவாழ்வு சட்டம், சில்லரை வர்த்தக முதலீடு என நிரம்புகிற கொள்கைகளை மோடி தலைமையிலான அரசு, தேச நலன் என்கிற போர்வையில் கடுமையான முறையில் அமுலுக்கு கொண்டுவரும். ஏனெனில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பொழுது பாஜக எந்தவித எதிர்ப்பினையும் காட்டவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.

குறிப்பாக தமிழகத்தின் வாழ்வாதார-அரசியல் உரிமைப் பிரச்சனைகளில் பாஜகவின் நிலைப்பாடு என்பது காங்கிரஸின் நிலையையே பிரதிபலித்தது. மூன்று தமிழர் தூக்கு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை, காவேரி தண்ணீர் பகிர்மானம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம், கூடங்குளம் அணு உலைப் பிரச்சனை, மீனவர் படுகொலை, கெயில் குழாய்ப் பிரச்சனை என தமிழக மக்கள் போராடும் அடிப்படைப் பிரச்சனைகளில் நரேந்திர மோடியோ, பாஜகவின் தலைமையோ தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவில்லை. மாறாக காங்கிரஸ் அரசின் தமிழர் விரோத நிலைப்பாட்டினையே எடுத்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில்தான் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த வகையில் பார்த்தோமானால், தமிழகத்தில் மையப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் வாழ்வுரிமை கோரிக்கை போராட்டங்கள் பெருமளவு இவர்களால் பின்னடைவினை சந்திக்கும்.

அரசின் தனியார் மின்சாரக் கொள்கையினால் வருங்காலத்தில் கூடங்குள அணு உற்பத்தி ஆலை பின்னாளில் தனியாருக்கு விற்கப்படும், குறிப்பாக இந்தத் துறையில் பெருமளவு முதலீடு செய்திருக்கிற ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்படலாம் அல்லது பிற பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படலாம். இதே போல தூத்துக்குடியில் மக்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மார்வாடிகளுக்கு சொந்தமானதாக இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் மார்வாடிகளின் கைகளுக்குள் இருக்கிறது. திருப்பூர் பின்னலாடை போன்ற தொழில்கள் மற்றும் தொழிற்நகரங்கள் இவர்களது கட்டுப்பாட்டிற்குள்ளேயே இயங்குகின்றன. மேலும் வட இந்திய ’ஜிண்டால்’ சேலத்தில் நடத்தும் சுரங்கங்கள் தமிழகத்தின் பிற பகுதியில் நடத்த இருக்கும் சுரங்க முன்னேற்பாடுகள் மோடியின் அரசால் அங்கீகரிக்கப்படும். தஞ்சையின் ஒட்டுமொத்த விவசாயத்தினைக் கொன்று ஆரம்பிக்கப்பட இருக்கும் மீத்தேன் வாயு தொழிற்சாலை (குஜராத் மின்சார உற்பத்திக்கழகத்தினால் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது). சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்து பெருமளவில் களம் இறங்கும் வால்மார்ட்-பாரதி நிறுவனம் குஜராத்தி மார்வாடி நிறுவனம், மேலும் இந்த நிறுவனமே ஈழத்தில் படுகொலைக்கு துணைசெய்யும் தொழிற்நுட்பத்தினை இலங்கைக்கு அளித்தது. வட்டித்தொழில் மூலம் தமிழர்களை சுரண்டும் மார்வாடிகள், தென் தமிழகத்தில் இருக்கும் அரிய கனிமப் பொருட்கள், தமிழகத்தில் இருக்கும் பிற உற்பத்தி நிறுவனங்களில் இருக்கும் குஜராத்தி மார்வாடிகளுக்கு நரேந்திர மோடியின் தேர்வானது ஏகபோக மகிழ்ச்சியையே அளிக்கும். ஏனெனில் மேற்சொன்ன அனைத்து மூலதன முதலீடுகளும் குஜராத்தி மார்வாடிகளின் முதலீடுகளாக தமிழகத்தினை கொள்ளை அடிக்கவே களம் இறங்கி இருக்கின்றன.

நரேந்திர மோடி என்கிற – குஜராத்தி மார்வாடிகளுக்கு துணை நிற்கும் – ஒரு நபரை பிரதமராக்குவதன் மூலம் மேற்சொன்ன முதலீடுகள் அனைத்தினையும் சாத்தியப்படுத்தி ஒட்டுமொத்தமாக தமிழகத்தினை சுரண்டவே இவரது பிரதமர் பதவி துணை செய்யப்பட போகிறது.

எனவே ஓர் இனப்படுகொலையாளன், அதிகார மையவாதி, முதலாளிகளுக்காக குரல்கொடுப்பவர், மதத்தீவிரவாதியாக அறிப்படுபவர் பன்மைச் சமூகமாக இந்தியாவில் சிக்கி இருக்கும் போராடும் தேசிய இனங்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் கடும் நெருக்கடியையும், சிக்கலையும் அளிப்பவராகவே இருப்பார். மேலும் பன்னாட்டு முதலீடுகளுக்கும், பெருவணிக நிறுவனங்களுக்கும் தமிழகம் உட்பட ஏனைய பிரதேசங்களை விற்க வருபவராகவே அவரை நாம் பார்க்க வேண்டும். இதைத்தான் அவரது மாநிலத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். மேலும் அரசு என்பது வலிமை படைத்ததாக இருக்க வேண்டுமென்றும், அதிகார வர்க்கத்தினை தனது சுயநல அரசியல் கொள்கைகளுக்காகவும், பாசிசக் கொள்கைகளுக்காகவும் பயன்படுத்துபவர் தமிழ்ச் சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் விரோதமானவராகவே காட்சியளிக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தினை ஈழத்தில் அழித்த ராஜபக்சே பின்னர் தனது வன்முறையை-பாசிச அரச பயங்கரவாதத்தினை இசுலாமிய மக்கள் மீது செலுத்துகிறார். பின்னர் சொந்த சிங்கள மக்கள் மீதும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதுவே பாசிசத்தின் குணாம்சம். இதுபோலவே இசுலாமியர் மீது செலுத்திய பாசிச கொலைவெறியை தலித்துகள் மீதும், தேசிய இனங்கள் மீதும், முற்போக்கு இயக்கங்கள் மீதும் நரேந்திர மோடி செலுத்தவே செய்வார் என்கிற அரசியல் தத்துவார்த்த உண்மையை நாம் உணர வேண்டும்.

நரேந்திர மோடி எந்த வகையிலும் காங்கிரஸிற்கான மாற்று கிடையாது. மாறாக காங்கிரஸின் அதே கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு நாணயத்தின் அடுத்த பக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே மோடி முற்றும் முழுதாக எதிர்க்கப்பட வேண்டியவர், நிராகரிக்கபட வேண்டியவர். எனவே காங்கிரஸை விரட்டிய தமிழகம், அதே கொள்கையை தனது கொள்கையாகக் கொண்ட நரேந்திர மோடியின் வருகைக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ராஜபக்சேவிற்கும், நரேந்திர மோடிக்கும் தண்டனையைக் கோரும் நாம் இதற்காக ஒன்று திரள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் போராடுவோம்.

வரும் 26, செப்டம்பர், 2013இல் தமிழகம் வரும் நரேந்திர மோடிக்கு தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கருப்புக் கொடி அல்லது பிற எதிர்ப்புக் குரலை எழுப்ப அனைத்து ஜனநாய ஆற்றல்களையும் மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply