ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்

- in பரப்புரை
இன்று (05-03-14) வெளிவந்த ஜூனியர் விகடன் இதழின் நடுப்பக்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் நேர்காணல் வெளிவந்துள்ளது.
 ===================================================

இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது!
 திருமுருகன் தடாலடி

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மே 17 இயக்கம், சமீபத்தில் சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டது. தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிற மே 17 இயக்கத்தின் தலைவரான திருமுருகனிடம் பேசினோம்.

”ஐ.நா-வுக்கான உயரதிகாரியாக பணிசெய்த விஜய் நம்பியார், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறோம். 2009 போரின்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவும் மருந்தும் அனுப்புவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தியது. இது சர்வதேச மனித உரிமைக் குற்றம் அல்லது, போர்க்குற்றம்.

இதை உலகுக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க ஐ,நா-வின் மனிதாபிமான பணிகளுக்கான செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் மறுத்தார். இவர் விஜய் நம்பியாருடன் இணைந்துநின்று இலங்கையைக் காத்தார். சர்வதேச சுதந்திர விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ள விதி எண் 99-ன் கீழ் உடனடியாக இலங்கை மீது விசாரணை நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா. பரிந்துரை செய்திருந்ததைப் புறக்கணித்து, இலங்கை அரசு தம்மைத் தாமே விசாரிக்கும் என்றார். இதுவே இதுநாள்வரை தமிழர்களுக்கான நீதியை தட்டிப்பறித்து நிற்கிறது. இவற்றை அம்பலப்படுத்தவும், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இவர்களால் தடுக்கப்பட்டிருக்கும் சர்வதேச விசாரணையை வெளிக்கொணரவும் ஐ.நா. முற்றுகைப் போராட்டத்தினை நடத்துகிறோம். ஐ.நா-வின் ஜெனிவா தலைமை அலுவலகம் முன் தீக்குளித்த முருகதாசன் நினைவுநாளில் வருடந்தோறும் உலகெங்கும் நடத்தப்படும் போராடத்தினை, இந்த முறை சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, நியூயார்க், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் தோழமை அமைப்புடன் இணைந்து நடத்தினோம்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

”போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. உலக நாடுகளின் மௌனம் இன்னமும் தொடர்கிறதே?”

”இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சீனாவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்களது பிராந்திய நலனை முன்னிறுத்தியே நீதியைத் தடுத்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது. ஏனெனில், விசாரணைத் தொடங்கும்பட்சத்தில் இந்திய அதிகாரிகளும் இலங்கையுடன் சேர்த்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.”

”மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கும் ஐ.நா. அமர்விலாவது இலங்கைக்கு ஏதாவது அழுத்தம் ஏற்படுமா?”

”ஐ.நா-வின் விதிகளைக் கணக்கில் எடுக்காமலும், மனித உரிமை கமிஷனின் பரிந்துரைகளைக் கணக்கில் எடுக்காமலும், மீண்டும் அமெரிக்கா தனது நலனுக்காகவும், இந்தியா தனது விருப்பத்துக்காகவும் தீர்மானங்களை வரையறுத்தால், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இயலாது. இதுவரை உலக அளவில் இலங்கை அழுத்தத்தினைப் பெறவில்லை. மாறாக, அது தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டே இருக்கிறது.”

”ஐ.நா-வின் மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கையின் சில பாகங்கள் கசிந்திருக்கும் நிலையில், அதில் என்ன உள்ளது?”

”கடந்த வருட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை எவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைப்பற்றிய அவரது குறிப்புகளே வெளியாகி இருக்கிறது. இதில் இலங்கை அரசு எழுப்பிய 72 கேள்விகள் / பரிந்துரைகளில் சிலவற்றினை மட்டும் காண முடிந்தது. அமெரிக்க தீர்மானத்தின்படி, இலங்கை அரசு தனது செயல்பாட்டுமுறைகளை மாற்றி, சட்டதிட்டங்களை புதிதாக எழுப்பி, சர்வதேச உதவியுடன் ஜனநாயக நாடாக மாற வேண்டும் என்கிற வழிமுறைகளையும்; தமிழர்களுடன் நல்லிணக்கமாகச் சென்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருவரும் வாழ இலங்கை வழிவகை செய்வதற்கான வழிமுறைகளையும் பற்றி பேசியிருக்கிறது.

”ஆக மொத்தம் நவி பிள்ளையின் இலங்கைப் பயணமும் அறிக்கையும் ஏமாற்றம்தானா?”

”நவி பிள்ளை மனித உரிமை ஆணையராக கலந்துகொள்ளும் இறுதி ஐ.நா. அமர்வு இதுதான். ஆகவே, அவர் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அவரது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டினை யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று அவர் சில தமிழர் தரப்பு பிரதிநிதிகளிடம் சொல்லியிருக்கிறார்.”

”தாங்கள் நடத்திய இனப்படுகொலையைத் தாங்களே விசாரிக்க அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதா? அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த 2017 வரை கால அவகாசம் கேட்டுள்ளதே இலங்கை?”

”ஐ.நா-வின் நிபுணர் குழு, ஐ.நா-வின் மனித உரிமை கமிஷன், மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி, மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவை மற்றும் உலகின் சிறந்த மனித உரிமை கண்காணிப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் அறிஞர்கள் ஆகியோர் இதை நிராகரித்து இருக்கிறார்கள். காலநீட்டிப்பு கேட்பதன் மூலம் வடக்கு கிழக்குப் பகுதியினை முழுமையாக ஆக்கிரமிப்பதும் தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நிகழும் ஈழவிடுதலை ஆதரவு போராட்டங்களை சோர்வடையச் செய்வதற்குமான உத்திதான் அது.”

”வட மாகாணத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள். அதனால், மக்களுக்கு ஆதாயம் ஏதும் உண்டா?”

”1987-ல் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் தீர்வு இது. புலிகள் மட்டுமல்ல… இந்திய ராணுவத்தின் துணையுடன் அங்கே முதல்வராக இருந்த வரதராச பெருமாளே இது தீர்வல்ல என்று புறக்கணித்திருக்கிறார். இதன்மூலம் தமிழர்களுக்கு எந்த குறைந்தபட்ச நன்மையும் வந்துவிடப்போவது இல்லை.”

– டி.அருள் எழிலன்
 

Leave a Reply