2014 அமெரிக்க ( அயோக்கிய ) தீர்மானம் – விளக்க கட்டுரைகள்

- in பரப்புரை
அயோக்கியத்தனத்தினை புரிந்து கொள்வது எப்படி?.. பாகம் 1.

தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை தேவை என்பதாகவும் இருந்த சர்வதேச விவாதத்தினை வேறு திசையில் மாற்றி இருக்கிறார்கள்.

அதாவது,  “இலங்கையில் இந்துக்கள், இசுலாமியர், கிருத்துவர்கள் எனும் மத சிறுபான்மையினர் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக” பொத்தாம் பொதுவாக இலங்கை அரசின்மீதான குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்கிறது அமெரிக்க தீர்மானம்.

இவ்வாறு செய்வதன் மூலம் அது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதை மறைத்து மதப்பிரச்சனையாக , உள்நாட்டு பிரச்சனையாக திசை திருப்புகிறது தீர்மானம்.

கிருத்துவர்கள் மீது தாக்குதல் என்றால், ஏன் சிங்கள கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை?.. ஏன் தமிழரைக் கொன்ற படைகளில் சிங்கள கிருத்துவர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.?.. பல கேள்விகள் எழுகின்றன…

இனம் என்பது மதமாக சுருக்கப்படுகிறது.
ஈழம் என்பது இலங்கையாக மாற்றப்படுகிறது.
இனப்படுகொலை என்பது மனித உரிமை மீறலாக மாற்றப்படுகிறது.
தீர்மானத்தின் ஒரு இடத்தில் கூட தமிழ், தமிழர் என்ற வார்த்தையே இடம்பெறச்செய்யாமல், 2009க்கு பிறகான ”கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை” தொடர்வதற்கான வழியினை அமைத்து கொடுத்திருக்கின்றது

இப்பொழுது சொல்லுங்கள் என்ன செய்யலாம் இந்த அமெரிக்காவை , அதன் தீர்மானத்தினை?

ட்ரோஜன் குதிரையின் பிரவேசம்

அயோக்கியத்தனத்தினை புரிந்து கொள்வது எப்படி? — பாகம் 2.

போர்க்குற்ற விசாரணை இலங்கை-புலிகள் என இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டும் என தீர்மானத்தினாலும், பல்வேறு என்.ஜி.ஓ மனித உரிமை நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகிறது. இதனால் நிகழப்போவது என்ன?

1) இலங்கை தரப்பு: இலங்கையின் ராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ராஜதந்திர பாதுகாப்புடன் –தூதுவர்களாக, ஐ.நா அதிகாரிகளாக இருக்கின்ற காரணத்தினால் இரண்டாம்,-மூன்றாம் கட்ட அதிகாரிகளே விசாரிக்கப்படலாம். இக்குற்றவாளிகளும் இலங்கை அரசினாலும், இந்திய-அமெரிக்க அரசினாலும் பாதுகாக்கப்படுவார்கள். இவ்விசாரணையின் கால அளவு பிற நாடுகளில் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 15 முதல் 20 ஆண்டுகள் குறைந்தபட்சம் எடுத்துக்கொள்ளும்.

2) தமிழர் தரப்பு: புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்று போர்கைதிகளாக இருப்பவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள், இலங்கையை விட்டு வெளியேறியவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப் படுவார்கள். இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் அதிகாரம் கொண்ட எந்த ஒரு நிறுவனமும், அரசும் இல்லாமல் ஒவ்வொரு நாடுகளும் விசாரணை என்கிற பெயரில் வேட்டையாடப்படுவார்கள். தற்பொழுது 32 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பு பல நாடுகளில் தடைசெய்யப்படுகின்ற அமைப்பினைப் போன்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு தமிழீழவிடுதலையை நோக்கி நகருகின்ற நமது போராட்ட பாதையை பின்னுக்கு தள்ளுவார்கள்.

புலிகளும், ஈழமும் திரும்ப எழக்கூடாது என்பதே இவர்களது எண்ணமும், விருப்பமும். இதை பல மாதங்களுக்கு முன்பே பகிர்ந்திருந்தோம். தற்பொழுது இந்த செயல்திட்டத்தினை மிகத் தெளிவாக உலகின் மிகபலம் வாய்ந்ததாக கருதப்படும் சர்வதேச சிந்தனையாளர் என்.ஜி.ஓ குழுமத்தின் தலைவரும் தெரிவித்துள்ளார். இண்டர்நேசனல் க்ரைசிஸ் க்ரூப் என்கிற இந்த அமைப்பின் தலைவர் லூயி ஆர்பர் கடந்த 28 பிப்ரவரி, 2014இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிப்படுத்திருக்கிறார். (இவர் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசனின் முன்னாள் தலைவர் , நவநீதம் அம்மையாருக்கு முந்தய அதிகாரி)
“தோற்கடிக்கப்பட்ட புலிகளின் மீதும் விசாரணை நடப்பதை தமிழர்களாலும், தமிழ் அமைப்புகளாலும் மறுக்கமுடியாததாக இருக்கும். அதுதான் அவர்கள் புலிகளின்மீது வைத்திருக்கும் அளப்பறிய பாசத்தினை/நேசத்தினை குறைக்கும். ( “A commission is also likely to uncover evidence of abuses by the defeated Liberation Tigers of Tamil Eelam in a form that would be hard for Tamils and Tamil organizations to deny. That would deflate a romanticization of the Tigers among Tamils that keeps alive Sinhalese fears that the Tamil insurgency might resume, and also gives the government an excuse for continued militarization and repression.” By LOUISE ARBOUR FEB. 28, 2014 International Crisis Group, NY Times )
 எனவே தான் இருதரப்பினரையும் விசாரிக்கும் போர்க்குற்ற விசாரணை தேவை என்கிறது அமெரிக்காவும்,இங்கிலாந்தும், இந்தியாவும்.
இதே போன்றொதொரு கேள்வியை ஜெர்மன் தீர்ப்பாயத்தில் நீதிபதிகளிடத்தில் ‘டேவிட் காமரூன் சர்வதேசபோர்க்குற்ற விசாரணை கேட்கிறாரே?” கேட்டபொழுது ” அப்படியென்றால் டேவிட் காமரூன் , இங்கிலாந்து நாட்டின் ஆவண காப்பகத்தினையும், அதிகாரிகளையும் விசாரிக்க கதவை திறந்துவிடுவாரா? “ என்றார்

மேற்சொன்ன ஐ.சி.ஜி குழுமம் (. இண்டர்நேசனல் க்ரைசிஸ் க்ரூப்) 2011இல் சென்னையில் பலகுழுக்களை சந்தித்தது. அவர்களிடத்தில்”ஈழவிடுதலை, இனப்படுகொலை,” ஆகிய கோரிக்கைகளை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்தது. இவர்களிடத்தில் கடுமையான எதிர்வாதங்களை வைத்தபொழுது கோபத்தோடு வெளியேறினார்கள்.

இந்த அமைப்பு தான் இருதரப்பு போர்க்குற்ற விசாரணைக்கு பெரும் அழுத்தம் கொடுக்கிறது.

இவர்கள் 2007-2008இல் இவர்கள் புலிகளிடத்தில் ஆயுதங்களை கைவிட்டு , ஈழக்கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.அதை புலிகள் மறுக்கவே இனப்படுகொலைப் போர் நடப்பதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.
எனவே, ’இனப்படுகொலை’ குற்றச்சாட்டினை வைக்கும் பொழுது அது இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டாகவே இருக்கும். இருதரப்பும் இனப்படுகொலை செய்தது என்று குற்றச்சாட்டினை வைக்க இயலாது. ஆகவே தான், நாம் இனப்படுகொலை என்கிற குற்றச்சாட்டினை பலமாக முன்வைக்கவேண்டும்.

2011இல் எங்களை ஐ.சி.ஜியின் பிரதிநிதியை சந்திக்க செய்தவர்கள், இன்று ஐ.சி.ஜியின் நிலைப்பாடுகளை , அமெரிக்காவின் தீர்மானத்தினை ஆதரித்தும், இருதரப்புகளையும் (இலங்கை அரசு- விடுதலைப் புலிகள்) விசாரிக்கட்டும் என்று நம்மிடம் பிரச்சாரம் செய்வதை காணமுடிகிறது.
ஐ.சி.ஜி பல ட்ரோஜன் குதிரைகளை உருவாக்கி நம்மிடத்தில் உலவவிட்டு இருக்கிறது.

தொடர்ந்து ஊடுறுவும் ட்ரோஜன் குதிரைகளை நாம் வென்றால் மட்டுமே நம் போராட்டங்களை காக்க முடியும்.

அமெரிக்க தீர்மானத்தினை ஏன் எரிக்க வேண்டும்?.

அமெரிக்க தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் , ஆகவே அதை வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவோம் என்கிறார்கள்…
ஆனால் அமெரிக்க தீர்மானம் அடிப்படையில்

1. தமிழினம் என்கிற ஒன்றை மறுக்கிறது.

2. நிகழ்ந்தது மதசிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல் என்கிறது

3. தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது

4. இலங்கை ராணுவத்தினை மட்டுமல்ல, புலிகள் அமைப்பினை (மீளக்கட்டமைக்கும் ஆற்றல்களையும் விசாரிக்கவேண்டுமென்று மறைமுகவும்) நேரடியாகவும் கோருகிறது
புலிகளை விசாரிக்கிறோம் என்கிற பெயரில், “ போரில் எஞ்சிய புலி வீரர்களையும், தமிழீழ போர்க்கைதிகளையும், புலிகளின் அரசியல் செயல்பாட்டாளர்களையும்” விசாரிக்கச் சொல்லும் அமெரிக்க தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானமா? தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானமா?…

புலிகளை சர்வதேச பொறிவளைக்குள் சிக்கவைக்கும் ஒரு தீர்மானத்திற்கு எவ்வாறு எதிர்ப்பினை பதிவு செய்வது?
வெறும் 32 நாடுகளில் மட்டுமே பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட புலிகளை , 180 நாடுகளிலும் ”போர்க்குற்ற விசாரணைக்குள் இருக்கும் அமைப்பு” என்று அறிவிக்கும் தீர்மானத்தினை கொண்டு வந்த நாடு அப்பாவி நாடா?

இதுவரை எந்த ஒரு சர்வதேச அறிக்கைகளிலும், சார்லஸ்பெட்ரி, நார்வே, ஐ.நா-வல்லுனர் குழு, மனித உரிமைக்குழுக்கள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்காத பொழுது,
அமெரிக்கா மட்டும் இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டுமென்று கோரிக்கை வைப்பதை விமரிசிக்காமல் எங்களால் எவ்வாறு கள்ள மெளனம் சாதிக்கமுடியும்?

”புலிகள் மீது பாரம் இருந்தால் தானே பயப்படுவதற்கு, புலிகளையும் விசாரிக்கட்டும் , மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்” என்று வாதம் வைக்கிறவர்களிடம் கேட்க விரும்புகிறேன் ,
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் புலிகளை பயங்கரவாதிகள் எனசொல்லமுடியாது என்றபின்னர் ஏன் இங்கே தடை வந்தது?..
புலிகள் மீது தகுந்த ஆதாரம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏன் தடை வந்தது?

 அமெரிக்கா ஏன் ஆதாரம் இல்லாமல் தடைசெய்தது?
 இவற்றினை எவ்வாறு நம்மால் தடுக்க முடிந்தது?..

இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டும் என்கிற அமெரிக்க தீர்மானத்தினை புலிகள் அமைப்பு ஏற்றுகொள்ளுமா? அல்லது அவர்களது அரசியல் செயல்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?..
எங்களையும் சேர்த்து விசாரியுங்கள் என்று புலிகள் கேட்டார்களா? கேட்பார்களா? …

புலிகள் மீது விசாரணையை வலிந்து திணிக்கும் எந்த ஒரு நாட்டினையும் என் ஆற்றல் அனைத்தும் கொண்டு எதிர்க்கவே செய்வேன்… ஏனெனில் அதுவே முள்ளிவாய்க்காலில் தலையில் துப்பாக்கிக் குண்டை எந்த ஒரு பணிவும், சமரசமும் காட்டாமல் வாங்கி உயிர்க் கொடை செய்த தோழர்களுக்கு நான் செய்யும் குறைந்த பட்ச மரியாதை.

அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிக்கவேண்டும் அல்லது கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்க கூடாது என்பவர்களுக்கு வெளிப்படையாக எமது கேள்விகளை முன்வைக்கிறோம்…

பின்வரும் நிகழ்வுகளை முழுமையாக படித்துவிட்டு பின் பேசுங்கள், பொத்தாம் பொதுவான விவாதத்திற்கு நாங்கள் வரவில்லை. விவரங்கள், நிகழ்வுகள் அடிப்படையில் பேசலாம்…. ( அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்)

1. 2009 போர் முடிந்தவுடன் மே மாதத்தில் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசன் சர்வதேச விசாரணையை பான் கி மூன் அதிகாரத்தின் கீழ் (விதி எண் 99) கொண்டு வரவேண்டும் எனக் கோரியது.

2. பான் கி மூன்னின் சட்ட வல்லுனர் குழு 2009 ஜூலையில் இதே கோரிக்கையை முன் வைத்தது.

3. இந்தக் கோரிக்கை ஐ.நாவின் விதி. இதை மறுக்க முடியாது என்பதால் , சர்வதேச விசாரணையை திசை திருப்ப உள்நாட்டு விசாரணையை கோரினார் பான் கி மூன்.

4. 2010 ஜனவரி வரையில்(தனது தேர்தல் வரை) ராஜபக்சே உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கவில்லை.

5. ஜனவரி 2010இல் டப்ளின் தீர்ப்பாயம் இனப்படுகொலைக்கான விசாரணையை கோரியது.

6. உள்நாட்டு விசாரணையை துவக்காததால் தனக்கு “என்ன நடந்தது , என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக” ஐ.நா நிபுணர் குழுவினை பான் கி மூன் அமைத்தார்

7. இறுதியாக உள்நாட்டு விசாரணையை ராஜபக்சே அமைத்தார்

8. 2011 ஏப்ரலில் வெளியான ஐ.நா நிபுணர் குழு சர்வதேச விசாரணையை கோரியது. பான் கி மூன், மெளனம் காத்தார். (திட்டமிட்டே ஐ.நா மனித உரிமைக்கமிசன் கூட்டத்தொடருக்கு பின்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அறிக்கை 2011 மார்ச் மாதத்தில் தயாரானதாக தகவல் உண்டு. மேலும் தமிழகத்தின் தேர்தலும் கணக்கில் எடுத்துக்கொண்டே காங்கிரஸ் திமுகவிற்கு பாதகம் விளைவிக்கவண்ணம் பார்த்துக்கொள்ளாப்பட்டது ).

9 சர்வதேச நிபுணர் குழுவின் மீது நடவெடிக்கை எடுக்க பான் கி மூன் மறுத்தார், இதனால் நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சே நல்லிணக்க ஆணைய பரிந்துறைகளை அமுல்படுத்தினால் சர்வதேச விசாரனை தேவைப்படாது என்ற முடிவு முன்வைக்கப்பட்டது.

10. நல்லிணக்க ஆணையக் குழுவினை மனித உரிமைக் கவுன்சில் ஏற்றுகொள்ள மறுத்தது.

11. சர்வதேச விசாரனை எனும் ஐ.நாவின் விதியை நடைமுறைப்படுத்த நெருக்கடி அதிகரித்ததை கணக்கில் எடுத்துக்கொண்டு, அமெரிக்காவும்-இந்தியாவும் சேர்ந்து உள்நாட்டு விசாரணையையும், நல்லிணக்க ஆணைய பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதை ஒரு தீர்மானமாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் 2012இல் கொண்டு வந்தார்கள். இதன்படி இலங்கையின் அரசியல் சாசனப்படி தீர்வு என்பதாக உள்ளடக்கம் அமைக்கப்பட்டது. இதுவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. (எனவே தான் 2012இல் நல்லிணக்க ஆணையத்தினையும், இலங்கை அரசியல் சாசனத்தினையும் எரித்தோம்)

12. ஐ.நா தீர்மானம் 2012 அமுல்படுத்தமுடியாமல் ராஜபக்சே உள்நாட்டு விசாரணையையும், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் அமுல்படுத்த மறுத்தார்

13. மீண்டும் சர்வதேச விசாரணையை நவநீதம் அம்மையார் ஐ.நா துவக்க வேண்டுமென்றார். ஆக மீண்டும் சர்வதேச விசாரணைக்கான நெருக்கடி ஏற்பட்டது.

14 இந்த நெருக்கடியை தவிர்க்க மீண்டும் 2013இல் உள்நாட்டு விசாரனை என்கிற தீர்மானத்தினை அமெரிக்க முன்வைத்தது. இதில் புலிகள் மீதான விசாரணையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனவும் இந்தியா சேர்த்தது. நவநீதம் அம்மையாரின் சர்வ்தேச பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் என்கிற பிரிவில் இதைச் சேர்த்து செயல்திட்டத்தில் உள்நாட்டு விசாரணையை கோரியது.

15. ஆகஸ்ட் 2013இல் இலங்கை வந்த நவநீதம் அம்மையார் தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரிதும் மாற்றத்தினை முன்வைத்தார். அதாவது புலிகள் பயங்கரவாதிகள் என்றார். இவ்வாறு ஒரு அமைப்பினை விசாரிக்காமல் முத்திரைக்குத்துவது ஐ.நா அதிகாரிகளின் வழக்கமல்ல என்பதை நினைவு படுத்தினோம். மீள்குடியேற்றம் நிகழாமல் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதை ஆவணம் மூலமாக அம்பலப்படுத்தினோம். நவநீதம் அம்மையார் மீண்டும் சர்வதேச விசாரணையை கோரினார். 2013 தீர்மானம் தோல்வி அடைந்ததை அவரது பிப்ரவரி 2014 அறிக்கை வெளிப்படுத்தியது.

16. இதற்கு நடுவே 2012இல் ஐ.நாவின் செயல்பாடுகளை விசாரித்த சார்லஸ் பெட்ரி அறிக்கை சர்வதேச விசாரணையை கோரியது. புலிகள் மீது ஐ.நாவின் மனித உரிமைக்கமிசன் தேவையற்ற குற்றச்சாட்டுகளை நெருக்கடி காரணமாக முன்வைத்தார்கள் என்பதை அம்பலப்படுத்தியது.

17. சார்லஸ் பெட்ரி அறிக்கையின் மீது விசாரணை நடத்திய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி, ஜான் இலியாசன் தனது அறிக்கையை கடந்த ஜூன் 2013இல் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா தனது அதிகாரத்தின் கீழ் உடனே துவக்கவேண்டுமென்று முன்வைத்தார்.
ஆக ஐ.நாவின் விதி எண் 99ன் கீழும் அதன் அதிகாரத்தின் கீழும் தாமாகவே 2009லேயே கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை அமெரிக்காவும், இந்தியாவும் தவிர்த்தார்கள், காலதாமதப்படுத்தினார்கள்.
இலங்கை அரசின் மீதான விசாரணையை, தமிழர் தரப்பினையும் விசாரிக்க வேண்டுமென்று மாற்றி இருக்கிறார்கள்

ஒரு தேசிய இனத்தின் மீது இனவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலை, போரை ம்றுத்திருக்கிறது 2014 அமெரிக்க தீர்மானம், மாறாக அங்கு மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாற்றி இருக்கீறார்கள்.
இதன்படி சர்வதேச விசாரனை வந்தாலும் அதை இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை போராக வரையறை செய்யமுடியாது என்பதாக பின்னாளில் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்காவும், இந்தியாவும் செய்திருக்கிறது.

மேலும் வடக்கு மாகாணதேர்தல் என்பது அரசியல் தீர்வினை மறுக்கும் உக்தி என்று 2013 ஆகஸ்டில் முன்வைத்தோம். ஏதோ ஒன்று கிடைக்கிறது, ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்கள். ஆனால் அதே மாகானத் தேர்தலை அரசியல் தீர்வாக நவநீதம் அம்மையாரும், அமெரிக்காவும் , இந்தியாவும் முன்வைக்கிறது. மாகாண சபை முதலமைச்சரும் அமெரிக்காவின் இனமறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். சம்பந்தன் ஈழ கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று சென்னையில் பேட்டி கொடுக்கிறார். அமெரிக்க தீர்மானத்தினை வெளிப்படையக ஆதரிப்பவர்கள் இவற்றினை ஏன் கண்டிக்க முன்வரவில்லை.?.. கேள்வி எழுப்ப முன்வரவில்லை.?.. அன்று நாங்கள் இநத நிலைப்படுகளை கடுமையாக எதிர்த்த பொழுது மெளனமாக கடந்து சென்றவர்கள், இன்று அமெரிக்காவினை எதிர்க்கவேண்டும் என்கிற பொழுது பொங்குவது ஏன்?

அமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும். அதற்கான அதிகாரத்தினை ஐ.நா சட்டக் குழு, மனித உரிமைக்குழு , ஐ.நாவின் துணை பொதுச் செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?

அமெரிக்க தீர்மானத்தின் பின்னனி பற்றி சொல்லி இருக்கிறோம். இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் ஏன் அமெரிக்க தீர்மானத்தினை எரிக்க கூடாது. ?…
உங்களுக்கு எங்கள் கேள்வி ஒன்று தான்… புலிகள்மீதும் விசாரணை நடத்தி அவர்களது அரசியல் செயல்பாட்டினை ஒடுக்கவேண்டும் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாட்டினை நீங்கள் ஆதரிக்க காரணம் என்ன?
புலிகளை ஒடுக்கவேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா முதல் அம்னெஸ்டி, திமுக வரை அனைவருக்கும் அரசியல் விருப்பம் இருக்கிறது.. இந்தக் குழுவில் நீங்களும் இணைய வேண்டுமென்கிற காரணம் என்ன?

சர்வதேச விசாரணையும் அமெரிக்காவின் ஏமாற்றுத்தனமும்.

அமெரிக்கா தீர்மானங்கள் கொண்டு வருவதற்கு முன் நடந்தேறிய சில நகர்வுகள்.

2009ல் இனப்படுகொலை அரங்கேறி முடிந்த சில நாட்களில், மே 26, 2009 அன்று ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், அதனுடைய தலைவர் நவிப்பிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் ஜூன் மாதம் தொடங்கி பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. அப்பொழுது பேசிய பல்வேறு ஐ.நா. அலுவலர்களும் பல விஷயங்களில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டங்களில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களாக இருந்தவற்றுள் சில.

1. இலங்கையின் கடந்தகால உள்நாட்டு விசாரணைச் செயல்பாடுகள் இலங்கை அரசை உண்மையான பொறுப்புதாரியாக அடையாளம் காட்டவில்லை.

 2. இலங்கையில் ஐ.நா. செயல்படுவதற்கான போதிய அரசியல் வெளி அளிக்கப்படவில்லை.

 3. நீதி மற்றும் விசாரணை தொடர்பான விஷயங்களில் ஐ.நா.வின் திட்டமிடலுக்கும், வழிகாட்டலுக்கும் தேவையான அறிக்கையினை மனித உரிமை கமிஷன் தயாரிக்க வேண்டும்.

ஐ.நா.வின் சட்ட விதி 99ன் படி, இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு (பான்-கி-மூன்) இருக்கின்றது என்று சட்டத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். (சமீபத்தில் சிரியாவில் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட்ட பான்-கி-மூன் விதி 99 ன் அடிப்படையில்தான் செயலாற்றினார். இந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அந்த நடவடிக்கை நடந்தேறும்.)

ஜூன் 23, 2009, அன்று முடிவுற்ற அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நவி பிள்ளை தலைமையிலான மனித உரிமை கவுன்சில், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. ஜூலை 30, 2009 அன்று ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் பான்-கி-மூன் சர்வதேச விசாரணையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார். உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்ப ஏற்படுத்துவதற்கு தேவையான அரசியல் வெளியை இலங்கை அரசுக்கு நாம் வழங்க வேண்டும் என்று கூறினார். அதாவது குற்றவாளி தன்னைத்தானே விசாரித்து தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் ஒரு புதுமையான திட்டத்தை முன்வைத்தார். (சர்வதேச விசாரணையை முதலில் தடுத்து நிறுத்திய பான்-கி-மூனுக்கு இந்தியத் தொடர்பு உண்டு. பான்-கி-மூனின் மருமகன் சித்தார்த் சாட்டர்ஜி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்காக அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையின் பிரிவில் இருந்த ஒரு ராணுவ சிப்பாய்.)

அதற்கு பிறகு ஐ.நா.வில் மூவர் குழு என்னும் பெயரில் நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையினை 2011 மார்ச் இறுதியில் வழங்கியது. அந்த அறிக்கையின் முதல் பரிந்துரையாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் இலங்கை அமைத்த LLRC என்னும் அமைப்பும் நேர்மையானது இல்லை என்று தெரிவித்தது. இந்த அறிக்கை வெளியான பின்பு ஐ.நா.வின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தொராயா ஒபைத் என்பவரை நியமித்தார்கள். ஆனால், அவர் அந்த ஆண்டு இறுதி வரை தனது வேலையைத் தொடங்கவில்லை. பிறகு அந்தப் பணி, சார்லஸ் பெட்ரி என்பவருக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியது. அப்பொழுதுதான் 2012 மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்வைக்கின்றது,.

ஐ.நா.வின் நடைமுறைகளின் படி அதனுடைய மட்டத்தில் சர்வதேச விசாரணையைப் பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலில் அமெரிக்கா LLRC அடிப்படையிலான உள்நாட்டு விசாரணைக் கோரி ஒரு தீர்மானத்தினை முன்வைக்கின்றது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதைப் பற்றி தன்னிச்சையாக உச்சநீதிமன்றமே முன்வந்து செயலாற்றும்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டாம்; கட்டப்பஞ்சாயத்து செய்து இதனை முடித்துக் கொள்ளலாம் என்று கூறுவதைப் போல்தான் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைகின்றது.இது போன்ற நிகழ்வு என்பது, குற்றவாளியை பாதுகாப்பதற்கான ஒரு நகர்வே அன்றி குற்றவாளியை தண்டிப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவனுக்கு நீதி, நிவாரணம் வழங்குவதற்கோ மேற்கொள்ளப்பட்ட நகர்வு அல்ல.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானங்கள், ஐ.நா.வே முன்வந்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்திவிடக்கூடாது என்பதற்காக, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தி முன்வைக்கப்படுவதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட தவறான உள்நோக்கங்களைக் கொண்ட அமெரிக்கா, இந்த ஆண்டும் ஒரு தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் வரைவு நேற்று வெளியானது. அதற்கு முன்னதாக, சில வாரங்களுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் உயர் ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மனித உரிமை மன்றத்திற்கு சர்வதேச விசாரணைக்கான பரிந்துரையினை வழங்கியுள்ளார். இந்த அறிக்கை மார்ச் 25 ம் தேதி அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிந்துரையும் கூட தமிழர்களுக்கான முழுமையான தீர்வினை வழங்காவிட்டாலும், இந்த அறிக்கையினை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையினைத்தான் அமெரிக்காவின் இந்த ஆண்டிற்கான தீர்மானம் செய்கின்றது. இலங்கைத்தீவு விவகாரத்தில் சிறு விஷயம்கூட நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது. மீண்டும் சர்வதேச விசாரணைக்கான குரல் எழும்பியவுடனே, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தி ஒரு தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் அமெரிக்கா இது போன்ற வெற்றுத் தீர்மானங்களை முன்வைக்கும்? எல்லாம் வரும் ஆகஸ்ட் 31 வரைதான். அன்றுடன் நவி பிள்ளை ஓய்வு பெறுகின்றார். அதனால், அதற்கு பின்பு அந்தப் பதவிக்கு பான்-கி-மூனை போன்ற அமெரிக்காவின் கைப்பாவை நியமிக்கப்பட்டு, ஈழ விவகாரம் சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடப்படும்.

#இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஒபாமா?

அமெரிக்காவும், அடையாள மறுப்பு அரசியலும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்றால், அந்த இனத்தின் அடையாளத்தை சிதைப்பது முக்கியமான பணி என்பதை பாலபாடமாகக் கொண்டு செயல்படுகின்றன இனவிடுதலைக்கு எதிரான சக்திகள். தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பது இரண்டு வகைகளில் நடைபெற்று வருகின்றன. ஈழத்தில் தமிழர்களில் கலப்பு இனம் உருவாக்குவது, மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது என்று நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்கள் தமிழர்கள் மற்றும் தமிழர் பகுதிகள் என்று ஒன்றும் கிடையாது என்பதை ஏற்படுத்துவதற்காக நடைபெறுபவை.

இதே வேலையைத்தான், ‘தமிழர்கள் என்று யாரும் கிடையாது’ என்பதை நிறுவ முயற்சிக்கும் ஒரு வேலையைத்தான் அமெரிக்கத் தீர்மானம் செய்கின்றது. தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். அவர்களை தேசிய இனத்தவர்களாக (Ethnic People) குறிப்பிடாமல், மதச் சிறுபான்மையினராக (Religious Minorities) குறிப்பது என்பது தமிழர்களின் அடையாளத்தைக் கொலை செய்வது.
ஒரு இனத்தின் அடையாளத்தைக் கொலை செய்வது என்பது, அந்த இனத்தின் வரலாற்றைக் கொலை செய்வது,
 ஒரு இனத்தின் அடையாளத்தைக் கொலை செய்வது என்பது, அந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொலை செய்வது.
 ஒரு இனத்தின் அடையாளத்தைக் கொலை செய்வது என்பது, அந்த இனத்தின் மீது நிகழ்ந்த அநீதிக்கான நியாயத்தை மறுப்பது.

தமிழ் இனத்தின் அடையாளத்தைக் கொலை செய்யும் முயற்சியில் முன்வைக்கப்படும் தீர்மானம், தமிழ் இனத்தின் விடுதலைக் கோரிக்கையை, வரலாற்றை கொலை செய்வது.

தமிழ் இனத்தின் அடையாளத்தைக் கொலை செய்யும் முயற்சியில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது என்பது, தமிழ் இனத்தின் விடுதலைக் கோரிக்கையை, வரலாற்றைக் கொலை செய்வதற்கு துணை போவதாகும்.

அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை எதிர்ப்பது என்பது விடுதலைக் கோரிக்கையை பற்றி எந்த அக்கறையும் இன்றி மேற்கொள்ளப்படுவது.

விடுதலைக் கோரிக்கைக்காக உயிர் நீத்த கரும்புலிகள்தான் என் கண்முன் நிழலாடுகின்றனர். 1987ல், இந்திய ராணுவம் ஈழத்திற்கு வந்தபொழுது, யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் அவர்களை வரவேற்றனர். ஆனால், இந்திய ராணுவம் தமிழர்களுக்கு எதிரானது என்பதை உணர்ந்த தோழர் திலீபன், ராணுவத்தை வரவேற்க மக்களிடம் தாம் கோரிக்கை வைத்ததை நினைவில் கொண்டு, தான்தான் அதனை சரி செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நடைபெறும் எதனையும் எதிர்ப்பது என்னும் அடிப்படையில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் மூலம், தாம் கோரிக்கைகளில் எந்த சமரசமும் செய்து கொள்பவர்கள் இல்லை என்று உலகிற்கு உணர்த்தினார்.

திலீபன் உள்ளிட்ட அனைத்து கரும்புலிகளை நினைவில் கொண்டு, தமிழர்களின் விடுதலைக் கோரிக்கையை மறுதலிக்கும், தமிழர்களின் அடையாளத்தை மறுக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை நான் எதிர்க்கின்றேன். நீங்கள்?

அமெரிக்க அயோக்கியத் தீர்மானம் – பின்னணி #1

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபர்களுக்கும் இந்த ஆண்டு அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்திற்கும் என்ன தொடர்பு? இந்தப் புகைப்படத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் நபர் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் ‘மத்திய, தெற்காசிய’ விவகாரங்களுக்கான துணைச் செயலர் நிஷா பிஸ்வால் (Nisha Biswal – Assistant Secretary of State).

அவர் பிப்ரவரி 2ம் தேதி அன்று கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தாம் எதற்காக தீர்மானம் கொண்டு வருகிறோம் என்று கூறினார். தாம் கொண்டு வரும் தீர்மானம் இலங்கையுடனான நட்பின் அடிப்படையில் கொண்டு வரப்படுவது என்று கூறினார். நட்பின் அடிப்படையில் கொண்டு வரப்படும் தீர்மானம் நிச்சயமாக சர்வதேச நடவடிக்கைகளை கோரும் தீர்மானமாக இருக்காது என்று கூறியதோடு மட்டுமின்றி, தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்றும் கூறினார்.
நட்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நகர்வு இலங்கை அரசிற்கு சாதகமான இரண்டு விஷயங்களை மேற்கொள்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகள் எதுவும் நடைபெற்று விடாமல் தடுக்கின்றது. இரண்டாவதாக, இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை, சர்வதேசத் தீர்மானத்தின் வாயிலாக தமிழர் என்றொரு தேசிய இனம் இல்லை என்று நிறுவ முயல்கின்றது.

இந்த நட்பு, எதன் அடிப்படையில் அரங்கேறுகிறது என்பதை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சிசன் (Sison) 2013ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகின்றார். இலங்கையுடனான நட்பினை வலுப்படுத்துவதற்காக மின்சாரம், போக்குவரத்து, வான்வெளித்துறை மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்ய உள்ளன என்று கூறினார்.

இந்த வணிக நலன்களே, நட்பு என்னும் ரீதியில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவை செயல்பட வைக்கின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான், இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சந்திப்பு நடைபெறுகின்றது. நிஷா பிஸ்வால், இந்த ஆண்டு மார்ச் 4 அன்று பெங்களுரு வந்திருந்தார். அப்பொழுது அவர் சந்தித்த பல்வேறு நபர்களுள் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஷர்மிளா பரதனும், சுக்லா சந்திராவும் GE India நிறுவனத்தின் அதிகாரிகள். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், சென்னை பல்கலைக் கழகத்திலும் பயின்ற பின்பு, அமெரிக்காவின் சில பல்கலைக்கழகங்களில் பயின்ற ஷர்மிளா பரதன் தற்பொழுது GE நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிகின்றார். அவரது பணிகளுள் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகளில் மின்சார வர்த்தகம் சார்ந்த கொள்கைகள் மற்றும் அரசுகளுடான உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
முதற்கட்டமாக இலங்கை மற்றும் இந்தியாவில் GE நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. அதே தினத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நிஷா பிஸ்வால், உலகம் அறிந்திருந்த சந்தைகளிலேயே மின்துறை சந்தைதான் மிகப்பெரியது என்றும் இதில் Civil Nuclear துறை குறித்த விவாதங்களும் இந்திய அரசுடன் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். (Civil Nuclear துறை என்பது தனியார் நிறுவனங்களுக்கு அணு உலை அமைக்கும் அனுமதி வழங்குவது குறித்தது.) இது தொடர்பாக அடுத்தக்கட்டமாக அமெரிக்காவின் மின்துறை அமைச்சர் மோனிஸ் (Moniz), மார்ச் 11 அன்று டெல்லியில் அடுத்தக் கட்ட பேச்சினை முடித்துள்ளார்.

தெற்காசியப் பகுதியில் தனது வர்த்தக நலன்களை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக, ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக சிதைக்க வேண்டும் என்னும் நோக்கில், தமிழர்கள் என்னும் தேசிய இனத்தை மறுத்து, அவர்களை மதச் சிறுபான்மையினர் என்று வரையறுத்து ஒரு அயோக்கியத் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்கா உண்மையிலேயே கில்லாடிதான். இல்லாவிட்டால், பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழினத்திலிருந்தே, தனது அயோக்கியத் தீர்மானத்திற்கு ஆதரவாக லாபி செய்ய ஆட்களை களமிறக்கியிருக்கமுடியுமா என்ன?

அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் வருமா ?

அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் வருமா என பல தோழர்கள் கேட்கிறார்கள்.
வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடிப்படை கேள்வியே , எவ்வகையான மாற்றங்களை அது கொண்டு வரப் போகிறது என்பது தான்.

ஐ.நாவின் விதிமுறைப்படி (வந்திருக்கவேண்டிய) வரவேண்டிய விசாரனை என்பதை தமிழருக்கான நீதி கிடைக்கும் வழிமுறையாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா-இந்தியா முன்மொழியும் தீர்மானத்தில் சர்வதேச சுதந்திர விசாரனை இலங்கை -விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையாக வரும் பொழுது, இனப்படுகொலை என்கிற நிலைப்பாடு மறுக்கபடும். தமிழ் இனம் என்கிற ஒன்றினை மறுக்கும் அமெரிக்கா எவ்வாறு தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணையை கேட்கும்? …

அமெரிக்க இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், ஐ.நா நிபுணர் குழுவில் முன்வைக்கப்பட்ட , “மக்கள் கருத்துப்பங்கேற்பினையும்” தமது தீர்மானத்தில் “ஆபரேடிவ்-செயலாக்க” பகுதியில் கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே அமெரிக்காவின் நேர்மையை மெட்ச முடியும்.
பிரச்சனை என்னவென்றால், இங்கே அமெரிக்காவினை ஆதரிக்கிற அல்லது மென்மையாக கட்டுரையில் மட்டும் விமர்சிக்கிற நண்பர்கள் , இது நாள் வரையில் “போர்க்குற்றம், இருதரப்பு விசாரனை” என்கிற நிலைப்பாட்டினையே எடுத்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது ஒரு சிலர் போனால் போகிறது என்று ‘இனப்படுகொலை விசாரணை கேட்போம், ஆனால் போர்க்குற்ற விசாரனை வந்தால் அதை மறுக்க மாட்டோம்’ என்றும் அறிவிக்கப்படாத ‘ஆப்சனல்’ முறையை வைத்திருக்கிறார்கள். (காமன்வெல்த் இலங்கையில் நடக்கக்கூடாது , அப்படி நடந்தால் இந்தியா பங்கேற்க கூடாது என்று வைத்திருந்ததைப் போல. எதிர்ப்பில் பல ”ஆப்சன்” பட்டன்கள் கொடுக்கப்படுகின்றன. எது வசதியோ/கிடைக்கிறதோ அதை அழுத்திக் கொள்ளலாம்.)

அமெரிக்காவும்-இங்கிலாந்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கொண்டுவருவார்கள். அப்படி நியாயவான்கள் கொண்டு வரக் கூடிய கடினமான எதிர்ப்பு தீர்மானத்தினை இந்தியா நீர்த்துப் போகச் செய்துவிடாமல் தடுப்பது நமது வேலை என்று எங்களுக்கு இலவசமாக பல அட்வைஸ்கள் கிடைத்தன.

தம்மால் தான், தமது லாபியால் தான் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது என்றும், இந்தியாவிற்கு தெரியாமல் அமெரிக்கா தீர்மானத்தினை தயார் செய்கிறது என்றெல்லாம் நம்புகிறார்கள்..
ஆனால், இருதரப்பினரையும் (இலங்கை-புலிகள்) விசாரிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாட்டினை எப்பொழுதும் கேள்வி எழுப்ப மாட்டோம், என்பது தான் நெருடலாக இருக்கிறது. இதுவரை அதைப் பற்றி மெளனம் காக்கவே செய்கிறார்கள்.
புலிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து முடக்கவேண்டுமென தமது அரசு(அமெரிக்க அரசு) எடுக்கும் நிலைப்பாடு சரி என நினைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை..

அமெரிக்கத் தீர்மானம் எதிர்ப்பதா? எரிப்பதா?

தற்பொழுது அமெரிக்காவால் முன்மொழியப் பட்டிருக்கும் தீர்மானம் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் தரவல்லது அல்ல. அதனை எதிர்க்கலாம்; அதற்காக எரிக்கவெல்லாம் வேண்டாம் என்னும் ரீதியில் சிலர் பேசி வருகின்றனர். விவாதிக்க வேண்டிய அளவிலும், நடைமுறைப்படுத்தும் அளவிலும் இவர்கள் கூறுவது முக்கியமானதும் கூட. தீர்மானத்தை எரிப்பது என்பது இந்த ஆண்டு தொடங்கவில்லை எனினும், எரிக்கும் நடைமுறை எதனால் நிகழ்ந்தது என்பதை அறிந்து கொண்டால், தெளிவாக முடிவெடுக்க வசதியாக இருக்கும்.

பல்வேறு செய்தி ஊடகங்களும் எப்பொழுதுமே தவறான செய்திகளையே தங்களது ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றன என்பதை அனைவருமே அறிந்திருப்பீர்கள். அதிலும் குறிப்பாக இனப்படுகொலைக்கான விசாரணை கோரி நடைபெற்ற போராட்டத்தின் செய்தியை வெளியிடும்போது, இனப்படுகொலை விசாரணை குறித்த பதாகையின் படத்தை வெளியிட்டு, போர்க்குற்ற விசாரணை கோரி போராட்டம் நடந்தது என்று செய்தி வெளியிட்ட கூத்தெல்லாம் நடைபெற்றது.

அதுபோன்ற ஒன்றுதான், கடந்த ஆண்டும் 2013ல் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக மாணவர்கள் மார்ச் 8 அன்று போராட்டத்தை தொடங்கியபோது, அவர்கள் முன்வைத்த 9 கோரிக்கைகளில் முதல் கோரிக்கையே, அமெரிக்கத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் அனைத்து ஊடகங்களும் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து மாணவர்கள் போராடுவதாக செய்தி வெளியிட்டனர். ஒவ்வொரு ஊடகத்தின் Input மற்றும் Assignment குழுக்களிடம் பேசி போராட்டம் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரானது என்று தொடர்ந்து பேசி, பெரும்பாலான ஊடகங்கள் பிறகு மாற்றிக்கொண்டன. ஆனாலும், டெசோ நாடகக் குழுவோடு தொடர்புடைய சில ஊடக நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவதாக செய்தி வெளியிட்டு வந்தன.

அப்பொழுதுதான் செய்தித்திரிப்பை தடுப்பதோடு மட்டுமின்றி, இந்த எதிர்ப்பை இன்னும் வலிமையாகச் சொல்ல வேண்டும் என்னும் நோக்கில், அமெரிக்கத் தீர்மானத்தினை எரிப்பது என்னும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலில் சென்னையிலும், பிறகு சிதம்பரத்திலும் தொடங்கிய அந்த எரிப்புப் போர் அடுத்து தமிழகம் எங்கும் பரவியது. அதற்கு பிறகு திரித்து செய்தி வெளியிட்ட நிறுவனங்களும், அதற்கு மேல் திரிக்க இயலாமல் அமெரிக்கத் தீர்மான எதிர்ப்பு என்னும் சரியான கோரிக்கையை வெளியிடத் தொடங்கினர்.

2009ல் தெற்காசிய பிராந்தியத்தில் செயல்படும் ஒவ்வொரு அமெரிக்க தூதரக அதிகாரியும் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்த விவாதத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதை பல விக்கிலீக்ஸ் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், இங்கிருக்கக்கூடிய பலரும் அவர்களிடம் அளித்த தவறான தகவல்களின் அடிப்படையில், அவர்கள் தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை என (2009) பதிவு செய்திருந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு அது போன்ற தவறான தகவல்கள் எதுவும் அவர்களுக்கு சென்று சேராமல், சரியான தகவல்களே சென்று சேர்ந்திருக்கின்றன. அதற்கு காரணம் ஒவ்வொரு பகுதியிலும் எரிக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மான நகல்களே. இதனை, அமெரிக்காவின் சார்பாக லாபி செய்யக்கூடிய சில காகித அமைப்புகளே கூறியிருக்கின்றன. அப்படியெனில், நாம் எதிர்க்கிறோம் என்பதை மிகச் சரியாக சொல்லவேண்டுமென்றால், வெறும் பதாகைகள் பிடித்து அல்ல அமெரிக்கத் தீர்மானத்தை எரித்தே சொல்ல வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சட்ட வரைவுகளை எரித்த புரட்சியாளர்களைக் கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகிய நாமும், நமது விடுதலைக்கு எதிரான தீர்மான வரைவுகளை எரித்தே எதிர்ப்பினைப் பதிவு செய்வோம்..

தமிழர்கள் என்னும் வார்த்தையே இடம்பெறாமல், தமிழரின் தேசிய இன அடையாளத்தை மறுத்து முன்வைக்கப்படும் அமெரிக்கத் தீர்மானம் செத்துப் பிறந்த குழந்தை. அது வளர்ந்து, நமக்கு தீர்வு தரும் என்றெல்லாம் எண்ணாமல், செத்துப்பிறந்த குழந்தைக்கு பாடை கட்டி, ஊர்வலம் சென்று, எரித்து இறுதிச் சடங்கினை செய்ய வேண்டும், கடந்த ஆண்டு தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தோழர்கள் செய்தது போல. (இந்தப் புகைப்படம் அப்பொழுது எடுக்கப்பட்டது)

 

Leave a Reply