மின்வாரிய இழப்பு தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு

- in பரப்புரை
=========================================
 மின் வாரியத்திற்கு 24309 கோடி ரூபாய் இழப்பு.ஆதாரங்களை வெளியிட்டது தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு.
 =========================================
 மின்வாரிய இழப்பு தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பு சார்பாக சா.காந்தி ,ஹரியான மின்வாரிய முன்னாள் தலைவர் தேவசகாயம் I.A.S,தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன்,
 மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் உமர்,திராவிடர் விடுதலை கழகம் தபசி குமரன்,பொதுப்பணி துறை முன்னால் தலைமை பொறியாளர் நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டு கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டனர்.

1.மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில்,தமிழ்நாடு மின்வாரியம் 40000கோடி ரூபாய்க்கு மேலான நட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இதன் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியத்தில் 2006ம் ஆண்டிலிருந்து,,தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரக் கொள்முதல் மற்றும்
 நடவடிக்கைகளில் சிலவற்றை செய்ததில் மின்வாரியத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் மோசமான நடவடிக்கையினாலேயே 24,309 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட காரணமென ஆய்வுகளில் கண்டறிந்துள்ளோம்.இந்த இழப்பீட்டை திரும்ப பெறவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

2.மாண்புமிகு நிதி அமைசர் அவர்கள்,மத்திய அரசின் “நிதி புனரமைப்புத் திட்டத்தின் படி ” மின் வாரியத்தின் 24422 கோடி ரூபாய் கடனை புனரமைதிருப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

மத்திய அரசின் நிதி புனரமைப்ப்பு திட்டத்தினை ஏற்றுக்கொண்டால் ,நகர் புற மின் விநியோகத்தினை தனியார் நிறுவனங்களுக்கு எந்த பணமும் இன்றி இலவசமாக மாற்ற வேண்டுமென்பது கட்டாய நிபந்தனையை உள்ளடக்கியதாகும். இதனால் தமிழகத்தில் உள்ள 110 நகர்புற மின் சொத்துக்கள் 70,000 கோடி ரூபாய்க்கு மேலானதாகும்.மேலும் மின் வாரியத்தின் வருவாயில் 65 விழுக்காடு நகர் புறத்திலிருந்து தான் கிடைக்கிறது.

எனவே தமிழக மக்களின் பொது சொத்தான நகர்புற சொத்துக்கள் தனியாருக்கு மாற்றுவது குறித்து அரசு மக்களுக்கு சொல்லிடவேண்டுகிறோம்.

3.தற்போது மின்வாரியம் நான்கு தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 738 மெகா வாட் அளவிற்கு மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது.இந்த மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ரூபாய் 10.91 ஆகிறது .இவர்களிடமிருந்து அதிக விலை காரணமாகவே மின்சார கொள்முதல் செய்ய வேண்டாம் என ஒழுங்கு முறை ஆணையம் மக்கள் நலன் கருதி உத்தரவிட்டுள்ளது.ஆனால் தற்போது செய்யப்படும் மின்சார கொல்முதலினால் நாளொன்றுக்கு 19 கோடி ரூபாயை மின்வாரியம் இழக்கிறது.

இந்நிலையில் மின் வாரியத்தின் சொந்த புதிய உற்பத்தி நிலையமான மேட்டூர் 3 வது நிலையம் 600 மெகா வாட் திறனுடையது பிப்ரவரி நான்காம் நாளிலிருந்து முடங்கி கிடக்கிறது .நீண்ட கால் சோதனை ஓட்டத்திலேயே இருந்த இந்நிலையம் 12/10/13 அன்று தான் வணிக உற்பத்தியை துவக்கியது.அதன் உத்திரவாத காலமான ஒராண்டுக்குள்ளாகவே இது பழுதடைந்துள்ளது .மிக இக்கட்டான மாநில மின் தேவையின்போது இது உதவ வில்லை.இது மின் உற்பத்தி செய்திருக்கும் நிலையில் மேலே குறித்த 738 மெகாவாட் அதிக மின்சாரம் தேவை இல்லாது போயிருக்கக் கூடும்.ஒப்பந்தப்படி ஒவ்வொரு மாத கால தாமதத்திற்கும் ருபாய் 107 கோடியை இந்நிறுவனம் வாரியத்திற்கு தரவேண்டும்.இந்நிலையம் ஒப்பந்தப்படி நவம்பர் 2011 இல் உற்பத்தி துவங்கியிருக்க வேண்டும்.

இந்நிலையத்தின் ஒப்பந்ததாரரான பி.ஜி.ஆர் நிறுவனம் தான் மின்வாரியத்தின் வழுதூர் II ,92 மெகா வாட் நிலையத்தினையும் நிறுவியவர்.இது மோசமாக பழுதடைந்து 468 நாட்கள் உற்பத்தி முடக்கம் ஏற்பட்ட அனுபவம் மின்வாரியத்திற்கு உண்டு .

4.தனியார் மின் உற்பத்தி நிறுவனமான GMR உடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் 15/2/2014 அன்று முடிந்துவிட்டது.யூனிட் ரூபாய் 12 என்ற அளவிற்கான அதிக விலை மின்சாரம் விற்கும் இந்நிறுவனத்திடம் மின் கொள்முதல் செய்ய வேண்டாமென ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இது ஒப்பந்தமுள்ள காலத்திலேயே இடப்பட்ட உத்தரவாதம் ஆகும்.எனினும் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் மின்வாரியம் மின் கொள்முதலை தொடர்கிறது.

GMR நிறுவனம் மோசமான நிதி நெருக்கடியில் உள்ளதாகவும்,இதன் கடன் வட்டிகளை சமாளிக்க மாதம் தோறும் ரூ 250 கோடி தேவைப்படுவதாகவும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.ஆயுட்காலம் முடிந்து போன இந்நிலையத்திலிருந்து மாதந்தோறும் 150 கோடி ரூபாய்கான கொள்முதல் என்பது ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு பெரிய உதவியாகவும் ,தமிழக மின் பயனீட்டாளர்களுக்கு கடுமையான நிதி சுமையாகவும் முடியும்.

இத்தனைக்கும் ஜி.எம்.ஆர் மின் வாரியத்துடன் மிக மோசமான நட்பையே உடையது.முன்னதாக அளித்த மின் கட்டண உறுதி மொழியை கைவிட்டு கட்டணத்தை நிலுவையாகவும் வட்டியாகவும் 537 கோடியை வழக்காடி பெற்றுக்கொண்டது . அதே நேரத்தில் வாரியத்திற்கு திருப்பியளிக்க வேண்டிய 350 கோடி ரூபாய்க்கு உச்சநீதிமன்ற தடையையும் பெற்றுள்ளது.எனவே இக்கொள்முதலை நிறுத்த கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
சா.காந்தி
(தமிழ்நாடுமின்துறைபொறியாளர்கள்அமைப்பு )

Leave a Reply