ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ‘தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்’ என்ற ஊடகச் சந்திப்பு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 07-02-2023 செவ்வாய் அன்று நண்பகலில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகச் சந்திப்பில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பை சேர்ந்த தோழர் லயோலா மணி அவர்களும் உடனிருந்தனர்.
அறிக்கை:
தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்
கடந்த சனவரி 29 அன்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டியது குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் ஒன்றாக, ‘இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்த வேண்டும்’ என மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக எம்பி-க்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது.
இச்செய்தி வெளியானவுடன், ‘அதிகாரப் பகிர்வு’ என்ற அரசியல் தீர்வு குறித்தும், ‘இலங்கைத் தமிழர்’ என்ற வார்த்தைப் பயன்பாடு குறித்தும் மே பதினேழு இயக்கம் உடனடியாக தனது கருத்தை பதிவு செய்திருந்தது.
1987-ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்ட இராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் பரிந்துரைப்பதே ‘அதிகாரப் பகிர்வு’ முறையாகும். ஈழத்தமிழர்களை கலந்தாலோசிக்காமல் அவர்கள் மீது இந்தியா திணித்த ஒரு அரசியல் தீர்வாகும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஈழத்தமிழர்களிடம் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த வாக்குறுதிகளை அளித்து, ஒப்பந்தங்கள் பல போட்டு இலங்கை ஒவ்வொரு முறையும் அதனை மீறியுள்ளது. இறுதியாக தந்தை செல்வாவின் தலைமையில் 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் இறுதி முடிவாக உள்ளது. அதனடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளும் இறுதி வரை போராடினர்.
இராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தினை இலங்கை இதுவரை நிறைவேற்ற முயற்சித்ததே இல்லை. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய நேரங்களில் மட்டுமே இந்தியாவும் அதனை பேசுகிறது. இனப்படுகொலைக்கு பிறகான காலகட்டத்தில் இது தீவிரமாக பேசப்பட்டது. அதாவது, இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் கீழ் செயல்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்மொழியப்பட்டது. இது உலக நடைமுறைகளுக்கு எதிரானதாகும். தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 13-வது சட்டத்திருத்தம் குறித்து இந்தியா-இலங்கை பேசுகிறது. இலங்கையும், ஈழத்தமிழர்களும் ஏற்றுக்கொள்ளாத இந்த ‘அதிகாரப் பகிர்வு’ முறையை, தமிழ்நாடும் நிராகரித்துள்ளது.
ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தீர்மானமே தமிழர்களின் இறுதி முடிவாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2013 மார்ச் 27 அன்று அஇஅதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, ‘தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே இறுதித் தீர்வு’ என்னும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் அன்றைய அதிமுக அரசுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கி, ‘தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு’ மற்றும் ‘இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை’ என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியது. இதன் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ‘அதிகாரப் பகிர்வு’ முறையை தமிழ்நாடு முற்று முழுதாக நிராகரித்துள்ளது என்பது வரலாறு.
இவ்வாறு, ஒட்டுமொத்த தமிழர்களும் முற்றிலும் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம் வலியுறுத்தும் ‘அதிகாரப் பகிர்வு’ முறையானது, திரு ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட திமுகவினரும் ஏற்றுக்கொண்டு 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு’ முறைக்கு முற்றிலும் முரணானது ஆகும்.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ‘அதிகாரப் பகிர்வை’, ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் கட்சிகளும் தீர்வாக முன்வைக்கவில்லை. 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் திமுகவின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே தமிழர்களின் இறுதி முடிவு. இந்த வரலாற்று முக்கியத்துவமான அரசியல் முடிவான ‘பொதுவாக்கெடுப்பையே’ திமுக நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டும். மாறாக, திமுகவின் ‘அதிகாரப் பகிர்வு’ என்னும் முடிவு திராவிடர் இயக்க அரசியலுக்கு முரணானது.
திமுகவின் 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் 17-வது பக்கத்தில் 6-வது பிரிவின் 3-வது வாக்குறுதியாக, ‘பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசை வலியுறுத்தும்’ என்று வாக்குறுதி கொடுத்து வென்றுள்ளது. ஆனால், இன்று அதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த தனது எம்பிக்களை அறிவுறுத்தாமல், உலகத் தமிழர்கள் மறுக்கும் இலங்கையின் 13-வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவது திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது.
மேலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் விதமாக தமிழின விரோத பாஜக, 13-வது சட்டத்திருத்தத்தின் ‘அதிகாரப் பகிர்வு’ முறையை தமிழர்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. இதன்மூலம் ஈழத்தமிழர்கள் தமிழீழம் என்ற நாட்டை அடைவதை தடுத்துவிட முடியும் என நினைக்கிறது. இதற்கு துணைபோகும் விதமாக திமுகவும் பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் விதமாக செயல்பட முடிவெடுத்துள்ளது தமிழர்கள் ஏற்றுக்கொள்ள இயலாதது.
அதேபோல், ஈழத்தமிழர்களை ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்பிடுவது திராவிட இயக்க முன்னோடிகளின் கூற்றை மறுத்து, தமிழின விரோதிகளின் நிலைப்பாட்டை ஒட்டிய முடிவாகும். அறிஞர் அண்ணா முதல் கலைஞர் வரை திராவிடர் இயக்க மரபில் ‘ஈழத் தமிழர்’ என திமுக அழைத்து வந்தபோது, துக்ளக் சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனர்கள் ‘இலங்கைத் தமிழர்’ என்றே அழைத்தனர். ஆனால் இன்றைய திமுக ‘இலங்கை தமிழர்’ என்று குருமூர்த்தி மரபை பின்பற்றுகிறது. இது ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளத்தை மறுக்கும் செயலாகும். மேலும், திமுக தனது 2019 தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு, இன்று அதனை தவிர்த்து ‘இலங்கைத் தமிழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது வாக்களித்த தமிழர்களை ஏமாற்றும் செயலாகும்.
சட்டமன்ற மரபுகளை மீறி 2013-ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு எதிரான, வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் முற்றிலும் நிராகரித்த ‘அதிகாரப் பகிர்வு’ முறையை வலியுறுத்துவதை திமுக விட்டுவிட்டு, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக பொதுவாக்கெடுப்பை ஒன்றிய நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்த வேண்டுமென மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் திமுகவினை வலியுறுத்துகிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் 2019 தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப ஈழத்தமிழர்கள் தொடர்பான திமுகவின் நாடாளுமன்ற நடவடிக்கை முடிவுகளை திருத்த ஆவண செய்யவேண்டும் என கோருகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010