தமிழீழ விடுதலைக்காக போராடி உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூறும் மாவீரர் நாளில் மே பதினேழு இயக்கம் வீர வணக்கம் செலுத்துகிறது – நவம்பர் 27, 2022
“தமிழீழ புலிகள் தாயகம் மீட்டிட
உமிழ்ந்த – உமிழ்கின்ற உயிர்களை வணங்கிடும்
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!”
– பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.
ஆம், உண்மைதான். 60 ஆண்டுகால சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை நடந்தேறிய மண்ணில் தமிழீழத் தமிழர்கள் தங்கள் மரபுரிமையான ஈழ மண்ணையும், தங்கள் கல்வி, பொருளாதார உரிமைகளையும் மீட்டெடுத்து சாதி மதமற்ற ஒரு சமூகத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைத்த காலம் விடுதலைப் புலிகள் போராடிய காலமென்றால், அந்த நம்பிக்கைகளுக்கு உரமாய் விழுந்தவர்கள் அப்போராட்டத்தில் ஈகியர்களான மாவீரர்களே.
தமிழீழ இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2009 மே மாதம் மட்டுமே ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன் பல்லாயிரக்காணக்கான மக்கள் தந்தை செல்வா காலம் முதலே சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்கு முறைக்கு பலியாகியுள்ளனர். தமிழர்கள் இழந்த பொருளாதார கணக்கீடுகள் பற்றி முழுமையான தகவல்கள் கூட இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஈழப் போராட்டத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் பண்டார நாயகா ஆட்சியில் ‘ஒற்றை சிங்கள மொழி சட்டம்’ வந்து போது 10 நாட்கள் நடந்த கல்ஓயா(1956-ம் ஆண்டு) தாக்குதலில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டது, ‘சிறீ’ என்ற சிங்கள எழுத்தை இலங்கையில் இருக்கும் வாகனங்களில் கட்டாயம் குறிக்க வேண்டும் என்ற சட்டத்தை போட்டபோது சிங்களவர்கள் நடத்திய கலவரத்தில்(1958-ம் ஆண்டு) 1000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது, 1974 ம் ஆண்டு உலகத் தமிழாராச்சி மாநாட்டில் 9 தமிழர்கள் சிங்கள காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது என ஒரு சில வரலாற்று நிகழ்வுகள் விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கு உருவாவதற்கான காரணத்தை உணர்த்துகின்றன.
எந்த கணம் வட்டுக்கோட்டை தீர்மானம் ‘சுதந்திர தனி ஈழமே ஒரே தீர்வு’ என்று பறை சாற்றியதோ அந்த கணமே ஆயுத போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. “எங்கள் ஆயுதம் எது என்பதை எங்கள் எதிரிகளே முடிவு செய்கின்றனர்” என்ற புரட்சியாளர் மாவோ அவர்களின் கூற்றுப்படி ஆயுத போராட்டத்தின் வழியே ‘சுதந்திர சோசலிச தமிழீழ தேசத்தை’ அடைய முற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வீரச்சாவெய்திய மாவீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.
முதன்முதலாக 1989-ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாவீரர் நாள் பிரகடனப் படுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதல் வீரச்சாவு கண்ட போராளி தோழர் சங்கர் அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினமாக முன்னெடுப்பது என்று முன்மொழியப்பட்டது. இது 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை தொடந்தது.
ஆம். 2009- ஆண்டு “தமிழீழ மண்ணில் நடந்தேறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்” என்று தன்னைத்தானே எரித்து தழல் ஈகியரன தோழர் முத்துக்குமார் அவர்களை தங்கள் போராட்டத்தில் ஈகியராகிய மாவீரராக அறிவித்து விடுதலைப்புலிகள் இயக்கம்.
2006-ம் ஆண்டு ஈழ மண்ணிற்கு கள ஆய்வு செய்ய சுற்று பயணம் மேற்கொண்ட பெரியாரிய பெருந்தொண்டர் ஐயா ஆனைமுத்து அவர்கள் பதிவு செய்திருக்கும் செய்தி படி,ஈழத்தில் இருக்கும் 10 மாவீரகள் துயிலுஞ்சும் இல்லங்களில் மட்டும் 18500 விடுதலைப்புலிகள் பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவுக்கூறப்பட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போராடிய உன்னத இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம் என்பதை பறைசாற்றும் சான்று இதுவேயாகும்.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறியபடி,“மாவீரர்களை வணக்கத்துக்குரியவர்களாக கௌரவிப்பது எமது வீர மரபு”. ஆனால் விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இலங்கை சிங்கள பேரினவாத அரசு மாவீரர் ன நினைவேந்தல் நிகழ்வுகளை கடுமையாக ஒடுக்குகிற காட்சியை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இறந்தவர்களுக்காக கண்ணீர் சிந்த கூட அனுமதிக்காத பாசிச இனவெறி கொண்ட அரசுக்கு மத்தியில்தான் இன்னுமும் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்கு விதி விலக்கு இல்லாத அரசு இந்திய ஒன்றிய அரசு.
தமிழீழம் என்பது ஈழத்தமிழர்களின் மரபுரிமை. தமிழீழம் என்பது தமிழர்களின் அரசியல் உரிமை. தமிழீழம் என்பது சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கான சமூக நீதி. தமிழீழம் என்பது தமிழர்களின் தீராத தாகம். அத் தாகத்தை தீர்த்து விட தங்கள் உயிர் நீர் ஊற்றி ஈகியாரான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
“விடுதலை என்பது ஒரு அக்கினி பிரவேசம். நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம். தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தங்கள் உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்”
– தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் (மாவீரர் நாள் உரை 1994)
“தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்”
மே பதினேழு இயக்கம்
9884864010