நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடு! நேரடி குற்றவாளிகள் மட்டுமல்லாது துப்பாக்கிசூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைத்திடுக!

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளம் காட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடு! நேரடி குற்றவாளிகள் மட்டுமல்லாது துப்பாக்கிசூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைத்திடுக! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய நிலையில் அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர். அதன் உச்சகட்டமாக 2018-ம் ஆண்டு துவங்கிய போராட்டத்தின் 100-வது நாளின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர். அப்போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து அப்போது பல இடங்களில் மே பதினேழு இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் இது குறித்து ஐநா மனித உரிமை அவையில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பதிவு செய்தார். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினை கேள்விக்குட்படுத்தியதால், இந்தியா திரும்பும் போது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் உபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது தூத்துக்குடியில் வழக்கு பதியப்பட்டு இன்றும் சிபிசிஐடி விசாரணைக்குள் உள்ளார்.

அதன் பின், துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டது, காயங்கள் ஏற்பட்டது, அப்போதைய சூழல், அதற்கான காவல்துறையின் நடவடிக்கைகள், துப்பாக்கி சூட்டிற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா உள்ளிட்ட பலவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழ் நாடு அரசு அமைத்தது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழ் நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் பல முக்கிய தகவல்களை வெளிவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணி முன்னரே அறிவிக்கப்பட்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் மிகத் தாமதமாக தடை விதித்ததும், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்லாததும் சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் அலட்சியத்துடன் இருந்ததும் தெரியவருகிறது. திருநெல்வேலி சரக டிஐஜி கபில் குமார் சரத்கர், தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகிய முக்கிய காவல்துறை தலைமைகள் பொறுப்பற்றத்தன்மையுடன் நடந்துகொண்டதாக அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

அதேபோல், பொதுமக்கள் யாரும் வன்முறையில் ஈடுபடாத நிலையில் அவர்களின் தலை, மார்பு என முக்கிய உடற்பகுதிகளை குறி வைத்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்கிறது அறிக்கை. இதன் மூலம் கொலை செய்யும் நோக்கத்துடனே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது உறுதியாகிறது. சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் தானியங்கி துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தாமல் காவல்துறையினர் தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமாக திருநெல்வேலி சரக டிஐஜி, தென்மண்டல ஐஜி, தூத்துக்குடி எஸ்பி, வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் என 17 பேரை அருணா ஜெகதீசன் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்து குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உண்மை இவ்வாறு இருக்க, நடிகர் ரஜினி காந்த் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று கூறி பழியை பொதுமக்கள் மீது போட முயன்றதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், அப்போதைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துப்பாக்கி சூடு குறித்து தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியிருந்தார். ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோர் அவருக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்ததாக அறிக்கையில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார்.

அதேவேளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நெருக்கடியில் இருந்துள்ளார். மேலும், தமிழ் நாடு காவல்துறை திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்பதும் புலப்படுகிறது. எனில், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், அவர்கள் அவ்வாறு உத்தரவிடுவதற்கு என்ன நோக்கம், கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு வந்தது ஏன் போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிக்கை வெளிப்படுத்தவில்லை.

ஸ்டெர்லைட்-வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். எனவே, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாக, ஒன்றிய அரசின் உளவுத்துறையின் உத்தரவின் கீழ் தமிழ்நாட்டு காவல்துறை துப்பாக்கி சூட்டை நடத்தியதாக ஐயம் எழுகிறது. ஆகையால், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் மறைமுக குற்றவாளிகளை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வர, உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், நுண்ணறிவுத்துறை ஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோருகிறது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி உரிய இழப்பீடுகளை உடனே வழங்குவதோடு, அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் கோருகிறது. மேலும், இத்தகைய பயங்கரவாதத்திற்கு பின்புலமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என திமுக அரசு கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அதுவே உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நீதியாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010
20/10/2022