தென்காசி மாவட்டத்தில் ஆசிரியரின் சாதிய அணுகுமுறையால் உயிரிழந்த பட்டியல் சமூக மாணவன்! தொடர்புடைய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுக! – மே பதினேழு இயக்கம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுக்கா அரியநாயகிபுரம் ஊரிலுள்ள இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் 7 வகுப்பு படித்து வந்த 12 வயது மாணவன் சீனு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மாணவனது பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சாதிரீதியாக திட்டியதால் தான் மாணவன் சீனு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சீனுவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரான ஆனந்த் சாதி ஆதிக்க மனோநிலை கொண்டவர். இவர், பள்ளியில் பயிலும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மாணவர்களை சாதிய ரீதியாக அணுகுபவர். அப்படியாக அருந்ததியர் சமூகத்தை மாணவன் சீனுவை தொடர்ச்சியாக சாதியை கூறி இழிவுபடுத்துவதும் கீழ்த்தரமாக நடத்துவதுமாக இருந்துள்ளார். இதனால் மாணவன் சீனு மனரீதியாக பாதிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 14-ம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கு அருகிலேயே மாணவனின் வீடு உள்ள நிலையில், சம்பவத்தன்று மாணவன் சீனு பள்ளி சென்றுவிட்டதாக கருதி அவனது பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். 11.30 மணியளவில் வீடு திரும்பிய போது, மகன் சீனு பிணமாக தூக்கில் தொங்கியுள்ளதை கண்டுள்ளனர். அவனுடன் பயிலும் மாணவர்கள் சீனு பள்ளிக்கு வந்ததாகவும், உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்த், சீனு பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறியதாக முரணான தகவல்கள் வெளியாகின்றன. இது மாணவனின் மரணத்தில் சந்தேகத்தை உண்டாக்குகிறது. இதற்கு முன்னால் இதே பள்ளியை சேர்ந்த புதிரை வண்ணார் மற்றும் குறவர் சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்களும் இதேபோன்று மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாணவன் சீனுவின் மரணத்திற்கு நீதி கேட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காவல்துறை அவர்களது போராட்டத்தை ஒடுக்குவதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. மேலும், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் போராடி வருகின்றனர். அவர்களை தடுப்பதும், கைது செய்வதுமான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்கிறது. தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சந்திரசேகர், குற்றாலம் குமார், விருதுநகர் கனகராஜ் ஆகியோர் 17-10-2022 அன்று கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கும் ஆதிக்க சாதியவாதிகளுக்கும் சாதகமாக நடந்துகொள்ளும் காவல்துறையின் இந்த அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டோரை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்துகிறோம்.
தென் தமிழ் நாட்டில், குறிப்பாக இந்த வட்டாரப் பகுதியில் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினர் மீது சாதிய தீண்டாமை அதிகளவில் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கோ, சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதற்கோ அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுவே பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, ஆசிரியர்-மாணவர்கள் இடையேயும் சாதிய பாகுபாடும் தீண்டாமையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அதுவே இன்று மாணவன் சீனு மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இப்பள்ளியில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதும் அதனை தடுக்காமல் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் செய்வதுமாக இருந்துள்ளது. மாணவன் சீனு மரணத்திற்கு காரணமான உடற்பயிற்சி ஆசிரியர் மீதும், தடுக்கத் தவறிய பள்ளி நிர்வாகத்தின் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மாணவனின் மரணத்தை சந்தேகத்திற்குரிய மரணமாக பதிவு செய்து கொலை என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.
சாதிய மனோநிலை புரையோடி நிற்கும் சமூகம் தமிழ்நாட்டின் முற்போக்கு தன்மை வளர்ச்சிக்கும் சமூகநீதியை வென்றெடுக்கவும் தடையாக இருக்கும். சமூக நீதி மீது அக்கறை கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு, இது போன்று பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் சமூக மாற்றம் எதிர்கால தமிழ் நாட்டை முற்போக்கு மாநிலமாக அமைத்திட வழிவகுக்கும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
18/10/2022