தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீண்டும் முடக்கம்! சமூகவலைத்தளங்களில் சுருக்கப்படும் மே 17 இயக்கத்தின் ஜனநாயக வெளி!

தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீண்டும் முடக்கம்! சமூகவலைத்தளங்களில் சுருக்கப்படும் மே 17 இயக்கத்தின் ஜனநாயக வெளி! – மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி கொண்டிருக்கும், சுமார் 1.7 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்ட டிவிட்டர் கணக்கு, ஒன்றிய பாஜக அரசின் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்திய பயனாளர்களின் பார்வைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது இதனையடுத்து மாற்று பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட புதிய டிவிட்டர் கணக்கையும் டிவிட்டர் நிறுவனம் தற்போது முடக்கியுள்ளது. கருத்துரிமையை மறுக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை, திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக தோழர் திருமுருகன் காந்தி தனது டிவிட்டர் கணக்கில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அமைச்சர்கள் உட்பட பலரை தனது கேள்விகள், விமர்சனங்கள் மூலம் நெருக்கடிக்குள்ளாக்கினார். இதனால் பாசிச பாஜக அரசு தோழர் திருமுகன் காந்தியின் பதிவுகளை இந்திய பயனாளர்கள் பார்வையிடுதை தடுக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தவிட்டது. தோழர் திருமுருகன் காந்தி மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் பல செயற்பாட்டாளர்களின் கணக்கு இவ்வாறு முடக்கப்பட்டது. புதிய கணக்கின் மூலம் மாற்று வழியில் மக்களை அடைவதை தடுக்கும் நோக்கில் தற்போது தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் புதிய கணக்கையும் முடக்கியுள்ளது.

மே பதினேழு இயக்கம் இத்தகைய அடக்குமுறையை நீண்டகாலமாகவே சந்தித்து வருகிறது. மே பதினேழு இயக்கத்தின் முகநூல் கணக்கு சில ஆண்டுகளாக இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது. யூடியூப் தளம் முழுமையாக முடக்கப்பட்டு பல்லாண்டுகால காணொளி தரவுகளை இழந்தோம். தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம், முகநூல் கணக்கு உள்ளிட்டவை தகுந்த காரணங்களின்றி நீக்கப்பட்டது. மே பதினேழு இயக்கத் தோழர்களின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது டிவிட்டர் தளத்தில் அந்த அடக்குமுறை நிகழ்ந்து வருகிறது.

சமூக வெளியில் கருத்துக்களை தெரிவிப்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதிகார வெறியில் பாசிசத்தை புகுத்த முயலும் பாஜக அரசு, அத்தகைய பேச்சுரிமையை, கருத்துரிமையை மறுக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தகுந்த காரணங்கள் அளிக்காமல் பல முக்கிய நபர்களின் கணக்குகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக கோரி வருவதற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றம் சென்றுள்ளது. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக செயல்படுவது அம்பலமாகியுள்ளது. ஆயினும் ஒன்றிய பாஜக அரசு அப்போக்கை நிறுத்திவிடவில்லை என்பதை தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் டிவிட்டர் கணக்கு முடக்கம் காட்டுகிறது.

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை முடக்கினால் மே பதினேழு இயக்கத்தின் கருத்துக்கள் மக்களை சென்றடைவதை தடுத்துவிடலாம் என்று ஒன்றிய அரசு எண்ணுகிறது. ஜனநாயக வெளியை சுருக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மே பதினேழு இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது என்பதை உறுதிபட கூறுகிறோம். அடக்குமுறைகள் அதிகரித்தால் அதே வீரியத்துடன் மீண்டெழுவோம். ஒன்றிய பாஜக இத்தகைய ஜனநாயக விரோத செயல்களை உடனடியாக நிறுத்துமாறு மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply