மார்க்சிய கோட்பாட்டாளரும், அரசியல் தத்துவ ஆசானும், புரட்சியாளருமான தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களின் 127 வது நினைவுநாளில் (ஆகஸ்டு 5, 1985) வீரவணக்கம் செலுத்துவோம்!
“போர் அல்லது மற்ற எந்த அரசியல் நடவடிக்கையையும் போல புரட்சி என்பதும் ஒரு கலையேயாகும்” – தோழர் எங்கெல்ஸ்
உலகம் முழுவதும் முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் என்னும் கோரப்பிடியில் சிக்கி உழன்று கொண்டிருந்த போது பொதுவுடைமை சித்தாந்தத்தின் வழியே உழைப்பிற்கும், சமூகத்துக்குமான உறவை மெய்ப்பித்து ‘உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையே சமூக விடுதலை’ என்று முழங்கிய இருபெரும் தத்துவ அறிஞர்களில் ஒருவர் தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆவார்.
கம்யூனிச சித்தாந்தத்தின் தலைமகன் புரட்சியாளர் மார்க்ஸின் உற்ற தோழரும், உலகின் பொருளாதார சிந்தனைப் போக்கை மாற்றிய நூலான ‘மூலதனம்’ நூல் பதிப்பிடப்படுவதற்கு பெரும் உழைப்பை செலுத்தியவரும், பொதுவுடைமைக் கட்சிகளின் வழிகாட்டியாக விளங்கும் கம்யூனிச அறிக்கையை உருவாக்கியவர்களில் ஒருவருமாக விளங்கியவர் தோழர் எங்கெல்ஸ் ஆவார். இன்றளவும் பொதுவுடைமை அரசியல் பயிரச்சியில் இன்றியமையாத நூலாக விளங்கிவரும் தோழர் எங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ மனித சமூக உருவாக்கத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது.
இந்திய ஒன்றியம் போன்ற வேளாண்மையும், தொழிற்துறையும் கலந்து பயணிக்கின்ற பொருளாதார சமூகத்தில் புரட்சியில் உழவர்களின் பங்கை மிக எளிமையாக எடுத்துக் கூறியவர் தோழர் எங்கெல்ஸ் அவர்களாவார். ஜெர்மனின் புரட்சிப் பற்றி கூறும் போது “விவசாயி மக்கள் தொகையானது மிகப் பெரிய பரப்பில் சிதறலாகப் பரவிக் கிடப்பது, அதன் கணிசமான பகுதியினரிடையே ஓர் உடன்பாட்டைக் கொண்டுவருவதில் உள்ள சங்கடம்” பற்றி புரிதலுக்கு உட்படுத்துகிறார். மேலும் இத்தகைய மக்களை ஒன்றுபடுத்தும் புரட்சிகர செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசியலாக்கப்பட்ட இயக்கத்திற்கு உண்டு என்றும் கூறுகிறார்.
உழைக்கும் வர்க்கத்தின் புரட்சி பற்றி பேசும் அதேவேளையில் புரட்சிக்கு பின் வர இருக்கும் சிக்கல்களையும் உன்னிப்பாக எடுத்துக்கூறி எச்சரிக்கிறார் தோழர் எங்கெல்ஸ். “எந்த ஒரு புரட்சிக்கும் சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு வகையான வர்க்கங்களின் ஒற்றுமை அடிப்படைத் தேவையாகும். ஆனால் ஒற்றுமையானது ஒரு பொது எதிரி என்ற அடிப்படையிலேயே அமைகிறது. எந்த கணத்தில் அப் பொது எதிரி வெற்றி கொள்ளப்படுகிறாரோ, அப்போதே வெற்றிபெற்ற வர்க்கங்கள் தங்கள் ஆயுதங்களை ஒருவருக்கொருவர் எதிராக திருப்புகின்றனர்” என்று புரட்சிகர வர்க்கங்கள் நிலவக்கூடிய முரண்கள் பற்றியும் எச்சரிக்கையுடன் எடுத்துரைக்கிறார்.
இத்தகைய புரட்சியின் பங்குபெறும் அனைவரும் புரட்சியின் இறுதி இலக்கான சமதர்ம சமூகத்தை நோக்கி நடப்பது இல்லை என்றும் அறிவிக்கிறார். குறிப்பாக புரட்சிகர மனநிலை அற்ற குழுக்கள் எத்தகைய தன்மை கொண்டது என்பதை விளக்கும் பொழுது “அதிக மிதமானபோக்குள்ள பிரிவினர் ‘ஜனநாயக மயமாக்கப்பட்ட’ முடியாட்சியுடன் திருப்தி அடைந்து விடுகிறார்கள்” என்று கேலி செய்கிறார். இம்மனநிலையை இன்றளவும் சமூகத்தில் நிலவி வரும் முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சிகளிடையே காண முடிகிறது. புரட்சிகர திட்டங்களை வகுப்பதற்கு பதிலாக ‘ஜனநாய மயமாக்கப்பட்ட முதலாளித்துவ தேர்தல் அதிகாரம்’ என்ற புள்ளியில் மன நிறைவு பெறுகின்ற குழுக்களே இங்கு பெருமளவில் காணமுடிகிறது.
தோழர் எங்கெல்ஸ் அவர்களின் இந்த கருத்து எந்த அளவிற்கு சமகால சமூகத்திற்கும் பொருந்துகிறது என்பதை நம்மால் எளிமையாக கண்டுகொள்ள முடிகிறது. இத்தகைய பரந்துபட்ட சிந்தனையின் காரணமாகவே புரட்சியாளர் காரல் மார்க்ஸ் மற்றும் புரட்சியாளர் ஏங்கல்ஸ் அவர்களின் நட்பு அவர்களுக்கு இறுதி மூச்சு வரை நீடித்தது என்று சொல்லலாம்.
தன் வாழ்நாள் முழுவதும் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக நின்றவரும், உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்தித்தவரும், கம்யூனிச சித்தாந்தம் உலகெங்கும் பரவி நிலை பெற முன்முயற்சி எடுத்த மார்க்சிய கோட்பாட்டாளரும், அரசியல் தத்துவ ஆசானும், புரட்சியாளருமான தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களின் 127 வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010