தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இலங்கை அதிபர் தேர்தலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்திருந்தது சரியான அரசியல் நடவடிக்கையாகும்; புதிதாக பொறுப்பேற்றுள்ள இரணில் அரசும் விரைவில் வீழும்!

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இலங்கை அதிபர் தேர்தலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்திருந்தது சரியான அரசியல் நடவடிக்கையாகும்; புதிதாக பொறுப்பேற்றுள்ள இரணில் அரசும் விரைவில் வீழும்! – மே பதினேழு இயக்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் எழுச்சியினால் இலங்கையை விட்டு தப்பியோடிய அதன் அதிபர் கோத்தபய இராஜபக்சே சிங்கப்பூர் சென்று அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து தற்போதைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இந்த அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று (20-07-2022) இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இடைக்கால அதிபர் இரணில் விக்கிரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இடையே அதிபர் பதவிக்கான போட்டி நிலவியது. இதனிடையே சஜித் பிரேமதாச போட்டிலிருந்து விலகி ஆளும் இலங்கை பொதுசன முன்னணியின் (SLPP) அதிருப்தி எம்பி இலங்கை டலஸ் அழகப்பெரும என்பவரை ஆதரிப்பதாக கூறினார். மேலும், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக என்பவரும் போட்டியிட்டனர்.

இந்த அதிபர் போட்டியில் தமிழர் தரப்பு ஆதரவு முக்கியமானதாக போட்டியிடுபவர்கள் கருதினர். இதனால், தங்களை ஆதரிக்குமாறு ஈழத்தின் தமிழர் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை அணுகி சிங்கள தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இது குறித்து TNPF வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் அதிபர் தேர்தலை நிராகரிக்கிறோமென்று அதற்கான காரணங்களை வெளியிட்டிருந்தனர்.

அதில், இரணில் விக்கிரமசிங்கே தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர்கள் கோரும் கூட்டாட்சி தத்துவத்தை ’யதார்த்தமற்ற, சாத்தியமற்ற கோரிக்கைகள்’ என்று கூறியவர். மேலும், ஒற்றையாட்சி முறையை கொண்ட புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை ஆதரித்தவர். அதனோடு, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இராஜபக்சே குடும்பத்தினர் தான் காரணம் என்று கைகாட்டும் இரணில், அதே இராசபக்சேவை பதவி இறக்க வேண்டுமென்று TNPF வைத்த கோரிக்கையை நிராகரித்து அவரை காப்பாற்றும் வேலையையும் செய்தார். அதேநேரத்தில் தற்போது போராடும் மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டுவர தடையாகவும் இவரே இருக்கின்றார். ஈழத்தமிழர் மீதான நிலைப்பாட்டில் இரணில் மாறவே இல்லை. இந்த காரணங்களால் இரணில் ஆதரவு கேட்டு சந்திக்க முயன்ற போது பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று மறுத்ததாக TNPF கூறியுள்ளது.

அதேபோல், சஜித் பிரேமதாச தரப்பும் இரணில் பார்வையையே வெளிப்படுத்தியது. இந்தியாவை போன்ற உள்ளாட்சி முறையை தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கின்றனர். அதே போல NPP கட்சியின் நிலைப்பாடும் இதுதான் என்பதைதான் அதன் பொறுப்பாளர்கள் ஹரினி அமரசூரிய மற்றும் ஹர்ஷன நாணயக்கார இருவரும் தெரிவித்தார்கள். மேலும் தமிழர் பிரச்சனை குறித்து தங்களது NPP கட்சியிலே இருக்கும் சிலருக்கு மாற்று கருத்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இப்படியாக சனாதிபதி தேர்தலில் பங்கேற்கும் அனைவருமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், கூட்டாட்சி முறையையும் நிராகரிப்பதோடு, தமிழர்களுக்கான தேசியத்தை அங்கீகரிக்க மறுப்பவர்கள். இவர்கள் எக்காலத்திலும் தமிழர்களுக்கான நீதியையோ, உரிமையையோ பெற்றுத்தரப் போவதில்லை என்று TNPF அறிக்கை கூறுகிறது.

இதனடிப்படையில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கையின் அரசியலமைப்பு ஊடாக இல்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அதிபர் தேர்தல் எவ்வகையிலும் தமிழர்கள் நிலையை மாற்றிவிடப் போவதில்லை. சிங்களவர்கள் இடையேயான முரண்பாடுகளை தீர்க்க நடைபெறுவதே தற்போது அங்கு நிலவும் சூழல். அமைதி திரும்பும் வேளையில் சிங்களப் பேரினவாதம் எனும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும். தமிழர்களை நோக்கியே அது திரும்பும்.

ஆகவே, ஈழத் தமிழர்களுக்கு தீர்வை தராத இந்த அதிபர் தேர்தலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது சரியான அரசியல் நடவடிக்கையாகும். இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. அதையொற்றி இதர தமிழ்கட்சிகளான தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்டவைகளும் அதிபர் தேர்தலை புறக்கணித்திருந்தால், அது சிங்கள தரப்புக்கு மாபெரும் அழுத்தமாகவும், சர்வதேசத்திற்கு ஒற்றையாட்சியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்வதாக அமைந்திருக்கும். அப்படி செய்யாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சே கூட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது வரலாற்று பிழையே.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 13 4வாக்குகள் இரணில் விக்ரமசிங்கேவுக்கும், 84 வாக்குகள் டலஸ் அழகப்பெருமவும், ஜேவிபியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக 03 ஓட்டுக்களும் பெற்றிருக்கின்றனர். தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் உறுப்பினர்களின் 2 வாக்குகள் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திரு. செல்வராசா கஜேந்திரகுமார் ஓட்டெடுப்பை புறக்கணித்தார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்று 6 ஆவது முறையாக மீண்டும் இரணில் விக்ரமசிங்கேவே அதிபராக தேர்வாகியிருக்கிறார். இதனை எதிர்த்து மீண்டும் இலங்கையில் போராட்டங்கள் நடக்க தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாதம் ஒருநாளும் வெல்லாது அது சிங்களர்களுக்கே ஆபத்தாக ஒருநாள் முடியுமென்று தமிழீழ தேசியத்தலைவர் சொன்னதை இனியேனும் சிங்களர்கள் உணரவேண்டும். இரணில் விக்ரமசிங்கேவின் ஆட்சியும் விரைவில் வீழும்.

இந்திய அரசோ இரணில் விக்ரமசிங்கேவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறது. ஈழத்தமிர்களின் இனப்படுகொலைக்கு தீர்வை தராமல் தடுக்கும் வேலையை மூர்க்கமாக செய்து வருபவரும், எல்லை தாண்டுவதாகச் சொல்லி தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்களின் படகுகளை பறிப்பதையும் சட்டமாக்கிய இரணில் விக்ரமசிங்கேவை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் இந்தியா தனது ஆதரவை வழங்கியிருப்பது இந்தியாவின் தமிழர் விரோத போக்கையே காட்டுகிறது.

ஆகவே இந்த சமயத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நடத்தக்கோருவதும் , சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க பொதுவாக்கெடுப்பு கோருவதே தமிழர்களுக்கு தீர்வாக அமையும். இதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைத்து வருங்காலங்களில் ஒற்றுமையுடன் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply