முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கிலிருந்து பாஜக வெளியேற்றப்படாவிடில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் 14-05-2022 கருத்தரங்கில் மே 17 இயக்கம் பங்கேற்காது! – மே பதினேழு இயக்கம்
வரும் 14-05-2022 சனிக்கிழமை மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறவிருக்கும் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ நினைவேந்தல் – கருத்தரங்கில் பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலையும் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக, கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவதற்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதே வேளை, நிகழ்வில் பங்கேற்கும் பிற அழைப்பாளர்கள் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை. அழைப்பிதழ் தரப்படாத நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் அழைப்பிதழின் பங்கேற்பாளர்கள் பட்டியலில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழீழ விடுதலைக்காக நீண்டகாலமாக பல்வேறு வகையில் பங்களிப்பு செய்த பல அமைப்புகளை சேர்ந்த தலைவர்களின் பெயர்களோடு, தமிழின விரோதமாக செயல்படும் பாஜகவின் மாநில தலைவர் பெயரும் நினைவேந்தல் உரையாற்றுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவில் ‘இசுலாமியர்களை இனப்படுகொலை செய்வோம்’ என பகிரங்கமாக அறிவித்து செயல்படும் பாஜகவோடு மே பதினேழு இயக்கம் கருத்தரங்கில் பங்கேற்பது இயலாத ஒன்று. இனப்படுகொலை எனும் மனித குலத்திற்கு எதிரான கொள்கைகளை தன்னகத்தே வைத்து போற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறிக்கூட்டத்தோடு எவ்வித சனநாயக கோரிக்கையையும் பகிர்ந்து கொள்வது என்பது அக்கோரிக்கையையே கொச்சைப்படுத்துவதாகும். மேலும் பாசிச ஆற்றல்களுக்கு எதிராக ஒன்று திரளும் சனநாயக ஆற்றல்களோடு பாசிச இனவெறி-மதவெறி பிரதிநிதிகளை சேர்ப்பது, ஓநாய்க்கூட்டத்தை வரவழைப்பது போன்றதே.
காசுமீரில் அடக்குமுறைக்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடும் அப்பாவி காசுமீரிகளை கொலை செய்வதும், ஊடகத்தினரை சிறைப்படுத்துவதும், சிறார்கள் உட்பட சாமானிய மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதும், பலரை காணாமல் ஆக்கச்செய்வதுமான சர்வதேச சட்டமீறல்களையும், தேசிய இனத்திற்கு எதிராகவும் நிற்கிறது பாஜகவின் மோடி அரசு. காசுமீரிகளை இன்றளவும் ஈழத்தமிழர்களைப் போன்று உரிமையற்று, அதிகபட்ச இராணுவத்தையும், அடக்குமுறைச் சட்டங்களையும் கொண்டு அடக்கி ஆளும் பாஜக எவ்வகையிலும் இராஜபக்சே அரசின் பயங்கரவாதத்திற்கு குறைந்ததல்ல. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய கோரும் பொதுபலசேனா எனும் பெளத்த மதவெறி அமைப்போடு கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் பிரிவான பாஜக தமிழர்களால் நிராகரிக்கபட்டு வெளியேற்றப்பட வேண்டிய அமைப்பு.
மேலும் ஈழவிடுதலையை மறுத்து 13-வது சட்ட திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் காங்கிரஸின் நிலைப்பாட்டை மேற்கொள்ளும் மோடி அரசின் நிலைப்பாடு என்பது விடுதலைப்புலிகளின் ஈகத்தை நிராகரிப்பதும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கொச்சைப்படுத்துவதுமாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் நிராகரித்ததே 13-வது சட்டத்திருத்தம் என்பதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்
ஈழத்தமிழர்களுக்கு சார்பான தீர்மானத்தை ஐ.நா.வின் மனித உரிமை அவையில் கொண்டுவராததும், சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை ஐ.நா.வில் முன்னிறுத்தும் மோடியின் பாஜக அரசு எவ்வகையில் முள்ளிவாய்க்காலுக்கு நீதி பெற்றுக்கொடுக்கும்? இவர்களின் நயவஞ்சக பங்கேற்பு என்பது ஈழத்தமிழர் போராட்டத்தை சிங்கள-ஆரிய-இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு பலியிடுவது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று மே 17 இயக்கம் உறுதியாக நம்புகிறது.
மேலும் தமிழ் பண்பாட்டை இந்துத்துவ மதவெறியால் ஆக்கிரமிக்க முயலும் பாஜகவின் ஆரிய இனவெறி கூட்டத்தை சிங்கள இனவெறியோடுதான் ஒப்பிட்டு பார்க்க இயலும். தமிழை அழித்து சமஸ்கிருதம், இந்தியை திணிப்பதும், தமிழ் பண்பாட்டை அழித்து ஆரியபண்பாட்டை திணிப்பதும், தமிழர் உரிமையை மறுத்து வட இந்திய பனியா-பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் பாஜக தமிழரின் முதன்மை எதிரியே.
தமிழ்நாட்டின் உரிமைக்கும், தமிழர்களின் வாழ்வாதாரம், பண்பாடு, தமிழ்மொழி ஆகியவற்றிற்கு எதிரான தமிழின விரோத அமைப்பே ஆர்.எஸ்.எஸ்-பாஜக. தமிழர்களை சாதியாகவும், மதமாகவும் பிரித்து கலவரத்தை தூண்டி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் பாஜக தமிழர்களின் பரம எதிரி. இவர்கள் இக்கருத்தரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டால் மட்டுமே எங்களால் மேடையேற இயலும். ஆகவே பாஜக பிரதிநிதிகள் பங்கேற்கும் பட்சத்தில் இக்கருத்தரங்கில் எங்களால் பங்கேற்க இயலாது. இக்காரணங்களால், இக்கருத்தரங்கில் பாஜக பங்கேற்பதை வன்மையாக மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது. பாஜக இக்கருத்தரங்கிலிருந்து வெளியேற்றப்படாவிடில் மே பதினேழு இயக்கம் இக்கருத்தரங்கை புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பாஜக பங்கேற்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்களெனில், இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கப் போவதில்லை என்பதனை உறுதிபட அறிவிக்கின்றோம். இது போன்ற தமிழின விரோத செயல் தமிழ் மண்ணில் நடைபெறுவது வரலாற்று பிழையாக அமையும். தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு தளத்தை தளரச்செய்யும் மதவாத பாசிச ஆற்றல்களின் பங்கேற்பை மே பதினேழு இயக்கம் என்றுமே ஆதரிக்காது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரிக்காத எந்தவொரு கட்சி, இயக்கத்துடன் இயங்குவது தமிழின விரோதமானது. இந்நிகழ்வில் பங்கேற்கும் தோழமை அமைப்புகளும் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்குமென உறுதியாக நம்புகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010