சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களின் வீடுகளை இடிக்கும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்

சென்னை இராஜா அண்ணாமலைபுரம் (ஆர்.ஏ.புரம்) கோவிந்தசாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களை அப்புறப்படுத்தி அவர்களின் வீடுகளை இடித்து வருகிறனர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள். பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் சென்னையின் பூர்வகுடி மக்கள் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், கண்ணையா என்பவர் வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து நேற்று (08-05-2022) தீக்குளித்தார். இன்று அவர் இறந்துவிட்ட நிலையில், மக்கள் ஒன்றுகூடி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. மே பதினேழு இயக்கம் நேற்று முதல் தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் இருந்து வருகிறது.

மக்கள் போராடியதை தொடர்ந்து, மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியரை (DRO) சந்தித்து கோரிக்கைகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இறந்த கண்ணையாவின் இறுதி கோரிக்கையான இளங்கோ தெரு மக்களுக்கு அங்கேயே வீடுகள் கட்டி தரப்பட வேண்டும், 1971-ல் அறிவிக்கப்பட்ட குடிசை மாற்றுவாரிய பகுதியாக இப்பகுதி இருப்பதால், வீடுகளை அகற்றக்கூடாது மாறாக பட்டா வழங்க வேண்டும், கண்ணையா இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கண்ணையாவின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக ஓரிடத்தில் வசித்து வரும் சென்னையின் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி நகரத்தை விட்டு அப்புறப்படுத்தும் வேலை கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றது தற்போது வாக்குறுதி கொடுத்து வெற்றிபெற திமுக ஆட்சியிலும் தொடர்வது மக்கள் விரோதமானது. மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மக்களின் போராட்டம் ஓயப்போவதில்லை. அதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக மே பதினேழு இயக்கத் தோழர்கள் களத்தில் நிற்பார்கள் என உறுதி கூறுகிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply