ஆங்கிலேய ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தொழிலாளர்களை அணி திரட்டியதற்காக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மலேயா தோட்டத் தொழிலாளர் உரிமைப் போராளி மலேயா வீரசேனன் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது – மே 3, 1949
உலகம் முழுவதும் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் காலனிகளை உருவாக்கிய பொழுது அங்கு கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைத்தான் வலுக்கட்டாயமாக கொண்டு சென்றனர் என்பது வரலாறு. இலங்கை மலையகம் சென்றோர் ஏறத்தாழ 6 லட்சம் பேர், தென்னாப்பிரிக்கா சென்றவர் ஏறத்தாழ 3 லட்சம் பேர், மொரீசியசு சென்றோர் ஏறத்தாழ 60,000 பேர் என்று இந்த எண்ணிக்கை நீண்டவண்ணம் செல்கிறது. அந்த வகையில் மலேசிய சிங்கப்பூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒன்பது லட்சம் பேர் ஆகும்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் இன்றைய வம்சாவழியினரும் கூட தங்கள் அடிப்படை உரிமைகளை பெற முடியாமல் ஏதிலிகளாகவும், உள்நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை சமகாலத்திலும் காண்கிறோம். இந்நிலையில் இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக காலந்தோறும் தமிழர்கள் போராடிக் கொண்டே வந்திருக்கின்றனர். அவ்வகையில் சிங்கப்பூர் மலேயா தோட்டத் தொழிலாளர் வேலையில் அவதிப்பட்டு வந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட சுரண்டலுக்கு எதிராக போராடிய ஈகியர்களில் முகாமையானவர் ஈகியர் வீரசேனன் ஆவார்.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பான் மலாயன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (pan malayan federation of trade unions) தலைவராகவும், சிங்கப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம் (singapore general labour union) துணைத் செயலாளராகவும் பொறுப்பேற்ற ஈகியர் வீரசேனன் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. 1946-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இவர் முன்னெடுத்த வேலை நிறுத்தம் அன்றைய ஆங்கிலேய அரசை அதிர்ச்சி அடையச் செய்தது. மேலும் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் கடும் உடல் உழைப்பு வேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு குடியேற்றப்படுவதை கடுமையாக எதிர்த்து வந்தார்.
ஈகியர் வீரசேனன் அவர்களின் இடதுசாரிக் கருத்துக்களாலும், தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் ஈர்க்கப்பட்ட தமிழர்கள் அவர் பின்னால் அணி திரள்வதை கண்டு பொறுக்க இயலாத ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு, 1949-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கைது செய்தது. அதன் பின்னும் அவரது போராட்டம் தொடரும் என்பதை தெரிந்து கொண்ட ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு அவரை சுட்டுக் கொலை செய்தது. அவர் கொலை செய்யப்பட்டபோது அவருடைய வயது 22 மட்டுமே.
ஈகத்திலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற வழக்கத்திற்கு ஏற்ப தமிழர்கள் உலகெங்கும் எங்கெல்லாம் அடிமைப் படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் உரிமைப்போர் பிறந்துள்ளது. அது மலேயா தமிழர்கள் போராட்டம் ஆனாலும் சரி, தமிழீழ தமிழர்கள் போராட்டம் ஆனாலும் சரி தங்களது சுயமரியாதைக்கும், அரசியல் உரிமைக்கும் எதிராக எத்தகைய ஒடுக்குமுறை வந்தாலும் அதை எதிர்த்து தமிழினம் நிற்கும் என்பதை நிரூபித்துள்ளது.
இத்தகைய தமிழின மரபின் வழியில் தோட்டத் தொழிலாளர்கள் உரிமைக்காக போராடி, ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட போராளி மலேயா வீரசேனன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010