தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை வரவேற்கிறோம்! காலனியாதிக்க ஆளுநர் பதவியை நீக்க போராடுவோம்!

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை வரவேற்கிறோம்! காலனியாதிக்க ஆளுநர் பதவியை நீக்க போராடுவோம்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாட்டு ஆளுநரால் ஏதேச்சதிகாரத்துடன் ஜனநாயக விரோதமாக துணைவேந்தர் நியமிக்கப்பட்டு வந்ததை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, இனி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசால் ஜனநாயகப்பூர்வமாக நியமிக்கப்படும் என்ற சட்ட மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் 25-04-2022 திங்கள் அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களாட்சியிலும் தொடரும் காலனியாதிக்க அதிகாரத்திற்கு முடிவுகட்டும் வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்ட மசோதாவை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.

பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் ஆளுநரால் நியமிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாகவே நடைமுறையில் உள்ளது. வல்லுனர் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 நபர்களில் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்வார். ஆனால் சமீபகாலமாக இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒன்றிய அரசை ஆளும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்துத்துவ கொள்கையை பின்னணியாக கொண்டவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் உயர்கல்வியின் தரம் குறைவதோடு சமூகநீதிக்கு எதிரான இந்துத்துவ கருத்துக்கள் திணிக்கப்படவும் செய்கின்றன. ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கர்நாடகாவின் சூரப்பா என்பவரை அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தராக நியமனம் செய்த பின்பு உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகம் சீரழிந்து போனதே சிறந்த எடுத்துக்காட்டு. உயர்கல்வியில் சேருவோர் விகிதம் இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டில் இரண்டு மடங்காக இருப்பதை சிதைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஓர் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது, மாநில அரசின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. உச்சநீதிமன்றமும் இதனை பலமுறை உறுதி செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.இரவி, சட்டமன்றத்திற்கும் மேலான அதிகாரம் கொண்டவராக, நீட் விலக்கு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் தமிழர் விரோத செயலாகும்.

மேலும், தமிழ்நாடு அரசிற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தும் வகையில் இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சரை கலந்தாலோசிக்காமல், பல்கலைக்கழக துணைவேந்தர்களை, தலைமை நிர்வாகிகளை, பேராசிரியர்களை அழைத்து, ஆர்எஸ்எஸ் பேச்சாளர்களை கொண்டு தன்னிச்சையாக ஊட்டியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறார். அதுவும், தமிழ்நாடு நிராகரித்த புதிய கல்விக் கொள்கையை திணிப்பது குறித்தும், பாஜகவின் இந்துத்துவா அரசியலை முன்வைத்தும் கருத்தரங்கம் நடத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

ஆளுநரின் இத்தகைய ஜனநாயக விரோத போக்கை முடிவுக்கு கொண்டு வரும் விதமாகவே தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் என்ற சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் 13 அரசுப் பல்கலைக்கழகங்களுக்குமான துணை வேந்தர்களை இனி ஆளுநருக்கு பதிலாக தமிழ்நாடு அரசே நியமிக்கும். இம்மசோதா சட்டமாவதற்கு தடை ஏற்படுமென்றால் தமிழர்கள் அதனை போராடி வெல்வோம். மேலும், உயர்கல்வித் துறை அமைச்சர் இணைவேந்தராக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரே தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

மாநில சுயாட்சியை மீட்கும் நடவடிக்கையின் முக்கிய நகர்வாக இம்மசோதாவை பார்க்கின்றோம். இதனை ஆதரிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக, பாஜகவை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாநில சுயாட்சிக்கு, தேசிய இன அரசியலுக்கு எதிராக செயல்படும் தமிழர் விரோத பாஜக இந்த மசோதாவை எதிர்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதேவேளை, மாநில சுயாட்சிக்காக முழங்கிய அறிஞர் அண்ணாவின் பெயரை தாங்கி நிற்கும் அதிமுக இம்மசோதாவினை எதிர்ப்பது கொண்ட கொள்கைக்கு முரணானதாகும். இது அதிமுக பாஜகவுடன் நின்று தமிழ்நாட்டிற்கு இழைக்கும் மற்றொரு துரோக செயலாகும்.

ஆளுநர் பதவி என்பது ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் போது மாகாண அரசை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. நாடு விடுதலையடைந்த பின்பும் காலனிய நடைமுறை தொடர்வது, மொழிவழி தேசிய இன அரசுகளை ஒன்றிய அரசின் கட்டுக்குள் வைத்திருக்கும் சூழ்ச்சியாகவே உள்ளது. காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க நடைமுறைகள் அனைத்தும் நீக்கப்பட்டு குடியரசு ஆட்சியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே.

தற்போதைய ஆளுநர் பதவி என்பது ஒன்றிய அரசிற்கான ஜனநாயக விரோத கங்காணி பதவியாக உள்ளது. அந்த வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே முழு அதிகாரம் கிடைக்கப்பெறும் வகையில் ஆளுநர் பதவி அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கான நகர்வுகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே நிரந்தர தீர்வாக அமையும். மாநில சுயாட்சியை மீட்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் மே பதினேழு இயக்கம் துணை நிற்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010
26/04/202

Leave a Reply