அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் அவர்கள், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். இரவி குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வலைத்தள ஊடகத்தில் பேசியதற்காக 23-04-2022 அன்று இரவு மதுரை மாநகர காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார். கருத்துரிமைக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக பசும்பொன் பாண்டியன் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆரிய சனாதன எதிர்ப்பு, சமூகநீதி தளத்தில் பசும்பொன் பாண்டியன் அவர்கள் மதுரையை மையமாக கொண்டு ஆற்றலுடன் செயலாற்றி வருபவர். இந்துத்துவத்தை கடுமையாக விமர்சித்து ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து வீரியத்துடன் கருத்துக்களை முன்வைத்து வருபவர். அப்படியாக, தமிழர் இறையாண்மைக்கு எதிராக ஜனநாயக விரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆளுநரை விமர்சித்ததற்காக பசும்பொன் பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கருத்துரிமைக்கு எதிரானதாகும்.
ஜனநாயகத்திற்கு விரோதமாக நீட் விலக்கு உள்ளிட்ட தமிழ்நாடு சட்டமன்ற மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இதுபோன்ற விமர்சனங்களை ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள், இயங்கங்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். சமீபத்தில் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதே போன்று எதிர்ப்பினை முன்வைத்த பசும்பொன் பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும்.
ஆளுநர் மீதான திமுக உள்ளிட்ட கட்சிகளின் விமர்சனம் போன்றே பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆளுநரை விமர்சித்ததற்காக அவரை சிறையிலடைத்த தமிழக திமுக அரசை கண்டிக்கின்றோம். சிறையிலடைக்கப்பட்டுள்ள அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் மீதான வழக்கை உடனடியாக இரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வரும் பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் துணை நிற்கும் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010