தமிழீழ மண்ணில் இந்திய அமைதிப்படைக் நிகழ்த்திய கொடுமைகளை எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த ஈகியர் அன்னை பூபதி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது – ஏப்ரல் 19, 1988
“எமது போராட்டம் வெறுமனே விடுதலைப்புலிகளின் போர் அல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் என்பதை, எம்மை அடக்கியாள நினைக்கும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எடுத்து இயம்பியது அன்னை பூபதி அவர்களின் வீரச்சாவு.”
– தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு
தமிழீழத்தின் மட்டகளப்பு மாநிலத்தில் அமைந்துள்ள கிரான் என்ற ஊரை சேர்ந்த அன்னை பூபதி அவர்கள் தமிழீழ வரலாற்றில் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த ஈகியர் ஆவார். மாவீரர் லெப்டினன்ட் கர்னல் திலீபன் அவர்களைப்போலவே அன்னை பூபதி அவர்களும் இந்திய அமைதிப் படைக்கு எதிராகவே தனது உண்ணா நோன்பினை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி அவர்கள் தனிப்பட்ட அளவில் சிங்கள பௌத்த இனவெறி அரசின் கொடுமைகளை உணர்ந்தவர். அவரது கணவர் மிக இளம் வயதிலேயே சிங்கள பௌத்த இனவெறி ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது முதல் மகன் அதே இராணுவத்தினால் நான்கு வருட காலம் சிறைப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார். அவரது இரண்டாவது மகனும் இனவெறி ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தமிழீழத்தில் இந்திய அமைதிப் படையின் கொடுமைகளைக் கண்டு அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் இந்திய அமைதிப் படையை கண்டித்து உண்ணாநோன்பிருந்து உயிர் நீப்பது என்று முடிவு செய்யப்பட்ட பொழுது, அதற்கு தாமே முன் வந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியவர் அன்னை பூபதி அவர்கள் ஆவார். இந்த அமைப்பு வைத்த கோரிக்கைகள் இரண்டு மட்டுமே.
1. அமைதி காக்க வந்த இந்தியப் படை அதற்கு மாறாக தமிழீழத்தில் செய்து வரும் மனித வேட்டைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்
2. நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டு சுமூக நிலை தோன்ற தமிழீழ விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும்.
இவ்விரு கோரிக்கைகளையும் முன்வைத்து 19-03-1988 அன்று தனது உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி அவர்கள் தொடங்கினார். அவரது உண்ணாவிரதத்தையொட்டி தமிழீழத்தில் வாழ்ந்து வந்த தமிழர்கள் அனைவரும் சாதி மதம் கடந்து ஊர்வலங்களும், பேரணிகளும் நடத்தி தனது ஆதரவைத் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்திய அமைதிப் படைக்கு எதிரான முழக்கங்களையும் வைத்துக் கொண்டே சென்றனர். தமிழீழ மாணவ மாணவியர்கள் அன்னையருக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வேளாண் அமைப்புகள் போன்ற அமைப்புகளும் அன்னையர் அவர்களுக்கு ஆதரவான பேரணிகளை நடத்தி கொண்டு இருந்தனர்.
இதற்கிடையில் அவரது உண்ணாநோன்பை நிறுத்திவிட இந்திய அமைதிப் படை அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். நேரடியாக அவரிடம் பேசியும், அவரது கணவர் மற்றும் உறவினர்களை குழப்பி மிரட்டிப் பார்த்தும் கூட அவர்களால் உண்ணா நோன்பை நிறுத்த இயலவில்லை. அன்னை பூபதி அவர்கள் தாம் எடுத்த முடிவில் உறுதியாக நின்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவரது குடும்பமும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டு பின் வாங்காமல் இருந்தது.
32 நாட்கள் நடைபெற்ற அமைதி வழியிலான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை எந்த வகையிலும் ‘அமைதியை நிலைநிறுத்த’ வந்ததாகச் சொன்ன இந்திய அமைதிப்படையோ, அதை அனுப்பிய இந்திய ஒன்றியமோ, அன்று இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் அரசோ மதிக்கத் தவறி விட்டது. அதன் விளைவாக அன்னை பூபதி என்னும் செம்மல் தாம் நேசித்த தமிழீழ தேசத்திற்காக தம்முயிரை ஈகம் செய்தார்.
அன்னையர் அவர்களின் உண்ணாநோன்பை கலைக்கப் பார்த்தது மட்டுமல்லாமல், அவரது உடலை கைப்பற்றி தாமே புதைத்து விடவும் இந்திய அமைதிப்படை முயற்சி செய்தது. அவரது குடும்பத்தினரை மிரட்டியது. ஆயினும் அவர்களது முயற்சி வெற்றியடையவில்லை.
தமிழீழத்தைப் பொறுத்தவரையில் போராட்ட முறை எந்த முறையாக இருந்தாலும், அதற்கு இந்திய ஒன்றியம் போன்ற ஏகாதிபத்தியங்கள் ஆதரவு தருவது இல்லை என்பதையும், சிங்கள பௌத்த இனவெறி அரசுடன் கைகோர்த்து தமிழர்கள் மீது தனது அதிகார வெறியை தீர்த்துக் கொள்கிறது என்பதையும் உறுதிப்படுத்திய நிகழ்வாக அன்னை பூபதி அவர்களின் உண்ணாநோன்பு ஈக நிகழ்வு அமைந்தது. தமிழ்ஈழ மக்களிடையே விடுதலை உணர்வை மூட்டிய தீச்சுடர் ஆக இந்த இயக்கம் உயிர் பெற்றது.
தமிழீழ மண்ணில் இந்திய அமைதிப்படையை கொடுமைகளை எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த ஈகியர் அன்னை பூபதி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
இவளின் கல்லறையில்
கற்களை பதிக்காதீர்கள்
உலகிலுள்ள
ஒலி அலைகள் அத்தனையும்
ஒன்று சேர்த்து வாருங்கள்
விடுதலை முழக்கத்தால்
வீடு கட்டுவோம்!
– விடுதலைப் புலிகள், மகளிர் முன்னணி
மே பதினேழு இயக்கம்
9884864010