தமிழ்தேசிய இயக்க அரசியலை முன்னெடுத்தவரும், தமிழ்நாடு விடுதலைப்படையை உருவாக்கி இடதுசாரி தமிழ்தேசியத்தினை முன்மொழிந்தவருமான தோழர் தமிழரசன் அவர்களின் பிறந்தநாளில் (ஏப்ரல் 14, 1945) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்
தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!
தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்!
நிலப்பிரபுத்துவத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே சாதியமைப்பு!
சாதிய தீண்டாமையும், வர்க்க முரணும் மலிந்து கிடந்த அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் (இன்றைய கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டப் பகுதிகள்) புரட்சிகர தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் வரிகள் தாம் இவை.
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி என்ற கட்சியின் உருவாக்கிய தோழர் தமிழரசன் அவர்கள், தமிழ்நாடு விடுதலைப்படையை உருவாக்கினார். அதன் வழியே தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதே அவர் நோக்கமாய் இருந்தது.
தோழர் தமிழரசன் சாதி ஒழித்த இடது சாரி தமிழ்த்தேசியத்தை முன்மொழிந்தார். சாதி நலனும் வர்க்க நலனும் பின்னிப் பிணைந்திருப்பதையும், அதனை முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் பயன்படுத்தி பொருளாதார சுரண்டல்களை நடத்த வருவதையும் புரிந்து கொண்ட அவர், சாதி ஒழிப்பை முன்னெடுத்து அதற்கென ‘மீன்சுருட்டி’ என்னும் பகுதியில் மாநாடு நடத்தினார். அதில் “சாதிப் பிரச்சனை என்பது சனநாய பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே, இந்தியத் துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போலல்லாமல் இதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும்.” என்று அறிவித்தார். அம்மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை இன்றளவும் இடதுசாரி தமிழ்தேசியத்திற்கு சான்றாக விளங்குகிறது.
மேலும் அவ்வறிக்கையில் “சாதிப் பிரச்சனை ஒவ்வொன்றுமே ஜனநாயக உரிமைக்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களைப் பாட்டாளி வர்க்கக் கட்சி வறட்டுவாதங்களில் சிக்கி சரியான நிலை எடுக்கத் தவறுவதால் நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையிலிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தால் மக்கள் அச்சாதிவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் பிற்போக்குவாதிகளின், வர்க்க சமரச சீர்திருத்தவாதிகளின் பின்னால் ஓடுகிறார்கள். பிற்போக்கு வாதிகளின் நோக்கம் உழைக்கும் மக்களை ஒன்றுபட்டு விடாதபடி பிரித்துவைத்திருப்பதே என்பதால் சனநாயக உரிமையை வழங்குவதை என்றுமே தீர்ப்பதில்லை.” என்று சுயவிமர்சனத்தையும் முன்வைத்தார்.
இந்தியாவை தேசிய இனங்களின் சிறை என்ற தோழர் தமிழரசன் அவர்கள், ஆர.எஸ்.எஸ் முதலிய காவிக் கும்பலை கடுமையாக எதிர்த்தார். “இந்துமத வெறி இந்திய அரசு, ஆர.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் சாதிவெறி மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டு சாதிமத மோதல்களுக்குத் திட்டமிடுகிறது. ஊக்குவிக்கிறது. காஷ்மீர் இனத்திற்கும் இந்துவெறி பண்டிட்களுக்கும் இடையிலான மோதலை முஸ்லீம் இந்து மோதலாகச் சித்தரித்து இந்து மதவெறியைத் தூண்டுகிறது. பஞ்சாபில் இந்தி இனவெறி மோதலைச் சீக்கிய இந்து மோதலாகச் சித்தரித்து இந்து மதவெறியைத் தூண்டுகிறது. ஒவ்வொரு தேசிய இனத்தையும் சாதி மதவெறி மோதலின் மூலம் பிளவுபடுத்தவே இப்படித் திட்டமிட்டு இந்து மதவெறியை திணிக்கிறது. சிறுபான்மையினருக்கான மதங்களுக்கான உரிமையை நசுக்குகிறது.” என்று மீன்சுருட்டி மாநாட்டு அறிக்கையில் வெளியிட்டார்.
தோழர் தமிழரசன் அவர்கள் தனித் தமிழீழ கோரிக்கைக்கு முற்றிலும் ஆதரவு தந்தார். அதற்கெனவே 1984 ம் ஆண்டு மே 5 மற்றும் 6 ம் தேதிகளில் பெண்ணாடம் என்ற பகுதியில் ‘தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு’ நடத்தினார். இதில் தமிழ்த்தேசிய புலவரும், ஈழ ஆதரவாளருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்து கொண்டு தங்கள் ஈழ ஆதரவை வெளிப்படுத்தினர். இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை ‘பெண்ணாடம் மாநாடு அறிக்கை’ என்றே அழைக்கப்படுகிறது.
அப்பொழுதே ஈழத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்று பதிவிட்டவர் தோழர் தமிழரசன் அவர்கள். மேலும் அவ்வறிக்கையில் விடுதலைப்புலிகளின் நிலைபாட்டையே ஈழத்தின் முதன்மை முரணுக்கு சான்றாக முன் வைத்திருந்தார்.
ஈழதேசம் ஏகாதிபத்திய முதலாளிகளின் வேட்டைக்காடு என்பதை அப்பொழுதே பதிவிட்டவர் தோழர் தமிழரசன் அவர்கள். “தமிழீழம் விடுதலையடைவது இரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கும், இந்தியாவுக்கும் பிடித்தமான காரியமல்ல. இலங்கை ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், இவர்களின் எஜமானரான இரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும் அவசியமாகிறது” என்று அறிக்கையில் தெரிவித்தார்.
தனது நோக்கம் தமிழ்நாடு விடுதலையே என்று அறிவித்தது மட்டுமல்லாமல், அந்நோக்கத்திற்காகவே ஈகியரான தோழர் தமிழரசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010