பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் நினைவுநாள் – 06-04-2021

பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் நினைவுநாள் – 06-04-2021

“உழைப்பையே சொத்தாகக் கொண்ட கோடிக்கணக்கான மக்களுக்கு இவர்களின் உயிரினும் மேலான ஆட்சி அதிகார உரிமையை – மக்கள்நாயக உரிமையைப் பெற்றுத் தந்திட, பெற்ற உரிமைகளை அவர்கள் துய்த்து மகிழ்வதைக் கண்டு களித்திட, உயிருள்ள வரையில் உழைத்திட முன்வந்து விட்டேன் நான்.

ஒருவர் பலராக நாம் படையை பெருக்குவோம்.
ஒவ்வொருவரும் அவரவர் பங்கை அட்டியின்றி ஆற்றிடுவோம்.

ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடுவோம்.
ஓய்வு என்பதே என் இறுதி மூச்சு தான்”
– (சிந்தனையாளன் 1991)

இவை பெரியாரோடு இணைந்து இயங்கியவரும், பெரியாரின் எழுத்துக்களை தொகுத்து வெளியிட்டவரும், பெரியாரின் இடஒதுக்கீட்டு உரிமையை வலுப்பெறச் செய்ய தன் இறுதி மூச்சுவரை ஒடுக்கப்பட்டோரின் வகுப்புவாரி விகிதாச்சார உரிமையை பெற போராடியவருமான ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் கூறிய வரிகள்.

ஐயா ஆனைமுத்து அவர்களின் பெயரை உச்சரித்த மறுகணமே நினைவுக்கு வருவது அவர் தொகுத்த தந்தை பெரியாரின் எழுத்துத் தொகுதிகளான ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ என்ற நூல் தொகுப்பே. இன்றளவும் பெரியாரின் சிந்தனைப் பெருங்கடலை தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கொண்டு சேர்ந்த இப்பெரும் பணியை செய்து முடித்தவர் ஐயா ஆனைமுத்து அவர்களே. பெரியாரின் அரசியல், வாழ்வியல் செய்திகளை எவ்விதக் குறிப்புகளும் இன்றி மிகச்சரியாக எடுத்துரைக்கும் காலகோடாக விளங்கியவர் ஐயா ஆனைமுத்து அவர்கள்.

பெரியாரின் மாபெரும் கனவாகிய விகிதாசார இடஒதுக்கீடு உரிமைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். வட இந்திய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றிய போராட்டத் தீயை பற்ற வைத்தவர் ஐயா ஆனைமுத்து அவர்களே.

பெரியாரின் மறைவுக்குப் பின்னால் ‘பெரியார் சமஉரிமைக் கழகம்’ (பின்பு இதுவே மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்று மாறியது) என்ற பெயரில் இயக்க அரசியல் தளத்தில் இயங்கிய ஐயா ஆனைமுத்து அவர்கள், 1978-ம் ஆண்டு ‘அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மதச் சிறுபான்மையினர் பேரவை’ என்ற கட்சி சார்பில்லா அமைப்பை உருவாக்கினார். மேலும், அதே ஆண்டு பீகார் மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் பெரியார் நூற்றாண்டு விழாக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்பொதுக்கூட்டங்கள் வாயிலாக பீகார் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரிடம் இடஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை தூண்டினார்.

1978-ம் ஆண்டு அக்டோபர் மாதம், பீகார் பாட்னாவில் சிறை நிரப்பும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 10,000 பேர் சிறைபடுத்தப்பட்டனர். தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம், 10-11-1978 அன்று பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கு 20% ஒதுக்கீடு அரசு வேலைகளில் தரப்பட்டது. இவ்வெற்றியே பின்பு பஞ்சாப் மாநிலத்தில் 5%-ம், அரியானாவில் 2%-ம் இடஒதுக்கீடு பெற காரணமாய் இருந்தது.

இப்போராட்டங்களின் விளைவாகவே 01-01-1979 அன்று பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மண்டல் குழு அமைந்தது. அதே காலகட்டத்தில் இக்கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியிலும் நூற்றாண்டு விழா பேரணியை பெரியார் முன்னெடுத்தார்.

இடஒதுக்கீடு ஒன்று மட்டுமே இறுதித் தீர்வா என்று கேட்டவர்களுக்கு ஐயா ஆனைமுத்து அவர்கள் பின்வரும் பதிலை தந்தார்.

“இந்த இட ஒதுக்கீட்டினால் சமதர்மம் வந்துவிடுமா? வராது. ஆனால் சமூக சமநீதி வரும்; உறுதியாக வரும்; இங்கு இன்று இது முதலாவது தேவை.

இந்த இட ஒதுக்கீட்டினால் வேலையில்லாத் திண்டாட்டம் தீருமா? தீராது. ஆனால் இப்போது இருக்கிற கிடைக்கிற அரசு வேலைகள் அரசுப் படிப்பு வசதிகள் எல்லோருக்கும் பங்காகும்; எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது இங்கு உடனடித் தேவை.”

ஐயா ஆனைமுத்து அவர்கள் மிகத்தீவிர தமிழீழ ஆதரவாளராவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார். 2005-ம் ஆண்டு தமிழீழத்தில் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஈழத்தமிழர், மலையகத்தமிழர் மற்றும் இலங்கை வாழ்த் தமிழர்களின் உண்மைநிலையை “தமிழீழத் தமிழரை, மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பாருங்கள்!” என்று நூல் மூலம் வெளிக்கொண்டு வந்தார். அதில் விடுதலைப்புலிகள் நடைமுறை ஆட்சியில் எத்தகைய நிர்வாக திறமை இருந்தது என்பதையும், சிங்கள பௌத்தப் பேரினவாத இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கையும் தெளிவாக பறைசாற்றியிருந்தார்.

மேலும், விடுதலைப்புலிகளின் அலுவல் அமைப்பையும், பெண்கள், குழந்தைகள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கான முன்னெடுப்புகளையும் மிக தெளிவாக எடுத்துரைத்திருந்தார். விடுதலைப்புலிகள் முன்னெடுத்த வேளாண் பண்ணைகளும், தொழிற்துறை முன்னெடுப்புகளும் எவ்வாறு ஈழத்தின் தற்சார்பு அரசியலுக்கு உதவியது என்பதை கண்கூடாகக் கண்டு எழுதினார்.

01-06-2005 அன்று ஈழத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஐயா ஆனைமுத்து அவர்கள், “தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் காண விரும்புகிற தமிழீழம் எப்படிப்பட்ட அரசைக் கொண்டிருக்கும் என்பதற்கான ஓர் அரசமைப்பு யாப்பு / அரசமைப்புச் சட்டத்தின் முன் வடிவமாதிரியை (A Draft Model Constitution for Tamil Eelam) அவர்களே உருவாக்கி இலங்கை சிங்களவர்கள், ஐரோப்பிய நாட்டினர், மற்றும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா முதலான நாட்டினரின் விவாதத்துக்கு அதைக் கொண்டுசெல்ல வேண்டும்” என்று பேசினார் (சான்று: ‘தமிழீழ விடுதலை’ நூல்).

தமிழ்நாட்டின் இயக்க அரசியல் வரலாற்றில் ஒரு சமரசமில்லாப் போராளி ஐயா ஆனைமுத்து அவர்கள் என்றால் அது மிகையாகாது. கட்சிகள் சார்பின்றி பெரியாரின் சமூகத்தொண்டை நிறைவேற்றுவது மட்டுமே தான் வாழ்நாள் பணியாக ஏற்று நடத்தியவர். அவரது இழப்பு தமிழ்நாட்டின் சமூகநீதி – சமதர்ம போராட்டக் களத்தின் மாபெரும் இழப்பாகும். அவர் முன்னெடுத்த பணிகளுள் மீதமிருக்கும் பணிகளை நாம் முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் பெரும்பணியாய் அமையும்.

பெரியாரின் பெருந்தொண்டரும், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் நிறுவுனரும், வகுப்புவாரி விகிதாசார இடஒதுக்கீட்டிற்கு இந்திய ஒன்றிய அளவில் போராடியவரும், தமிழீழ விடுதலையின் பேராதரவாளருமான ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply