மக்கள் மன்றத்தின் முடிவை ஏற்காத ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்! ஆளுநர் என்ற பதவி நீக்கப்பட வேண்டும்!

மக்கள் மன்றத்தின் முடிவை ஏற்காத ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்! ஆளுநர் என்ற பதவி நீக்கப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்விலிருந்து (நீட் – NEET) தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் இரவி திருப்பி அனுப்பியுள்ளார். அரசியலமைப்பிற்கு எதிரான ஆளுநரின் இந்த மக்கள்விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு ஒன்றிய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் கல்வி நலனை நோக்கமாக கொண்ட சிபிஎஸ்சி கல்வித் திட்ட முறையில் நடத்தப்படுகிறது. மேலும் சமூகத்தின் தாக்கம் ஏதுமற்ற, சில லட்சங்களையும், சில ஆண்டுகளையும் செலவழித்து பயிற்சி மேற்கொள்ளும் பணக்கார மாணவர்களுக்கான இத்தேர்வு, அனைத்து சமூக மாணவர்களின் பொது முன்னேற்றத்தை நோக்கமாக கொண்ட மாநில கல்வித் திட்ட முறையில் படிக்கும் ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களை தகுதிநீக்கம் செய்யும் வகையிலானது. நுழைவுத் தேர்வு என்பதே சமூகநீதிக்கு எதிரானது. எனவே தமிழ்நாடு இதனை துவக்கம் முதலே எதிர்த்து வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வு காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நசுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா உள்ளிட்ட பல மாணவர்களின் உயிரையும் பறித்தது. தமிழ்நாட்டு நிதியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் தமிழர்கள் படிக்க முடியாத அவல நிலையை நீட் தேர்வு உண்டாக்கியது. இதனால் 2017-ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இறுதியில் அது குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கருத்தான நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில், புதிதாக பதவியேற்ற திமுக அரசு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராசன் தலைமையில் குழு அமைத்தது. அதனடிப்படையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த நீட் விலக்கு மசோதாவை, 02-02-2022 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் விவாதத்திற்கு உட்படுத்திய பின்பு, ஆளுநர் இரவி தமிழ்நாடு அரசிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இரவி திருப்பி அனுப்பியது என்பது உள்நோக்கம் கொண்டது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 163(1)-ன் படி, ஆளுநர் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகள் தவிர்த்து, மாநில அரசின் ஆலோசனைபடி செயல்பட வேண்டியது கட்டாயம். இதனை உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதிபடுத்தியுள்ளது. ஆளுநர் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு அடிப்படையில் முடிவுகள் எடுக்க முடியாது. ஆளுநரின் நியமனம் குறித்து கூறும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், ஆளுநர் தன்னுடைய விருப்பு-வெறுப்பு அடிப்படையில் செய்யக்கூடிய வேலை என்று எதுவுமில்லை என்கிறார். மேலும், அரசியலமைப்பிற்கு எதிரான, அல்லது உயர்நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையிலான சட்ட மசோதாக்களை மட்டுமே ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும். எனில், தமிழ்நாடு அரசிற்கு எதிரான ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவது மக்களாட்சி முறையையே கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது. ஆளுநர் என்னும் பதவியே காலனியாதிக்கத்தின் எச்சம். மாநிலங்களை ஒன்றிய ஆட்சியின் கீழ் அடிமையாக வைத்திருக்கவே ஆளுநர் தேவைப்படுகிறார். சுதந்திர குடியரசில் ஆளுநருக்கான தேவை என்ன என்பதும், அவர் சட்டமன்றத்திற்கு மேலான அதிகாரத்தை கொண்டவர் என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவை. “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?” என்று பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வியை இன்று அனைவரும் எழுப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மக்கள் மன்றத்தின் முடிவை ஆளுநர் ஏற்க மறுப்பது மக்கள் விரோத செயலாகும். தமிழ்நாட்டு மக்களின் முடிவை ஏற்க மறுக்கும் ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையற்றவராகிறார். எனவே ஆளுநர் இரவி தமிழ்நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். மக்கள் உரிமையை மறுக்கும் எந்த கட்டமைப்பும் சனநாயத்திற்கு விரோதமானதே. அந்த வகையில் சனநாயக விரோத ஆளுநர் பதவி அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் பிழைக்கும் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் உரிமையை தீர்மானிப்பதை ஏற்க முடியாது. இந்திய ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை நிராகரிப்போம். தமிழர் உரிமையை மீட்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply