தமிழீழ இனப்படுகொலையை தடுக்கக் கோரி உயிர்நீத்த தழல் ஈகியர் மாவீரர் முத்துக்குமார் அவர்களின் 13 ம் ஆண்டு நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
‘எம் தமிழினத்தை சர்வதேச வல்லாதிக்க நாடுகளே என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று மென்னியை பிடித்து கேட்கும் கேள்விகளோடு தொடங்கிய மாவீரன் முத்துக்குமாரின் ஈகம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை நடுவீதியில் நின்று போராடத் தூண்டியது என்றால் அது மிகையில்லை.
2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவில் இயங்கி வந்த சிங்கள பௌத்தப் பேரினவாத அரசின் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற தமிழீழத்தின் உரிமைப்போர் உச்சத்தை அடைந்தது. ஐநா மற்றும் சர்வதேச வல்லரசுகளின் நேரடி மற்றும் மறைமுக சதியால் போர் என்ற போர்வையில் ஈழத்தமிழர்கள் மேல் நடைபெற்று வந்த இனப்படுகொலை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்கப்பட்ட போது, அதை பொது உலகின் கண்களுக்கு தெரியப்படுத்த அதே 2009 ம் ஆண்டு ஜனவரி 29 ம் நாள் சென்னையில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் அலுவலகமாகிய சாஸ்திரி பவன் முன்பாகத் தீக்குளித்தார் மாவீரர் முத்துக்குமார்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளராகிய மாவீரர் முத்துக்குமார் தனது ஈகத்திற்கு முன் தன் உணர்வுகளையும், 14 கோரிக்கைகளையும் உள்ளடக்கி எழுதிய கடிதத்தில் இருந்த “நான் உயிராயுதம் ஏந்துகிறேன்; நீங்கள் அறிவாயுதம் ஏந்துங்கள்” என்ற வரிகளே மே பதினேழு இயக்கம் உருவெடுக்க காரணமாக இருந்தது. மாவீரர் முத்துக்குமார் தனக்கு மூட்டிக்கொண்ட தீ ஒவ்வொரு தமிழக இளைஞர்களின் நெஞ்சிலும் அரசியல் ஒளி ஊட்ட காரணமாக அமைந்தது. தமிழக மக்களை பார்ந்தது “உங்கள் மவுனத்தின் மூலமும், பாரா முகத்தின் மூலமும் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போகிறீர்கள்” என்ற வரிகள் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பின.
மாவீரர் முத்துக்குமார் அவர்கள் மறைந்திருக்கலாம். ஆண்டுகளும் கடந்திருக்கலாம். ஆனால் தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியை பெறும் நோக்கில் நடைபெறும் அரசியல் போராட்டங்கள் இன்னும் முடிவடையவில்லை. அது ஒரு நீண்ட பயணம்; அந்த நீண்ட பயணத்தில் சரியான அரசியல் இலக்கை நோக்கி நாம் பயணப்பட கலங்கரை விளக்கமாக முத்துக்குமாரின் கடிதமும் அவரது ஈகமும் நம்மை வழிநடத்துகிறது.
அவரது நினைவுநாளில் அறிவாயுதம் ஏந்தி தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்நாட்டின் உரிமை மீட்புக்காகவும் போராடுவோம் என்று மே 17 இயக்கம் உறுதி ஏற்று மாவீரன் முத்துக்குமாருக்கு செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010