ஈரோட்டில் அண்ணல் அம்பேத்கர் சிலை! நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கும் போராடிய அமைப்புகளுக்கும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

ஈரோட்டில் அண்ணல் அம்பேத்கர் சிலை! நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கும் போராடிய அமைப்புகளுக்கும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்பது அப்பகுதியை சேர்ந்த முற்போக்கு அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையாகும். அதன்படி, குடியரசு நாளில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. தமிழ்நாடு அரசிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சாதிய கட்டுமானம் இறுக்கமாக உள்ள தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பது பல முற்போக்கு அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையாகும். இதற்காக பல அம்பேத்கரிய, பெரியாரிய, முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். இதற்காக, 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து அம்பேத்கர் சிலை அமைப்பு குழு உருவாக்கப்பட்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2018 முதல் இதே கோரிக்கையை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மின்சாரச் சட்டம், இடஒதுக்கீடு போன்ற பொருளாதார மற்றும் கல்விக் கொள்கைகளே இன்று தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன. இதனடிப்படையிலேயே அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை மேற்கு மாவட்டங்கள் முழுவதும் நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதிகாரத்தில் இருந்த சாதியவாதிகளால் இப்பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலை அமைவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வந்தது. உள்ளாட்சி அமைப்பு இல்லாத நிலையில், முந்தைய அரசு சிலை அமைப்பதற்கான கோரிக்கையை புறக்கணித்து வந்தது. இந்நிலையில், புதிதாக பதவியேற்ற திமுக அரசு, அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசாணை வெளியிட்டு, குடியரசு நாள் அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்துள்ளார்.

சமூகநீதி நோக்கிய தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதி மாபெரும் தடையாகவே இருந்து வருகிறது. இப்பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டது என்பது சாதிய கட்டுமான இறுக்கத்தை தளர்த்த முதல்படியாக அமையும். சாதி ஒழிந்த, சமத்துவம் நிறைந்த சமூகம் படைக்க அண்ணலை மக்களிடையே அதிகளவில் கொண்டுசெல்ல தேவையான உத்வேகத்தை இது அளிக்கும். அண்ணலின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலம், மேற்கு மாவட்டங்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குவதோடு, சமூகநீதியிலும் சிறந்து விளங்கும்.

சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஈரோட்டில் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது சிறப்பான துவக்கமாகும். இதேபோல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டுமென இத்தருணத்தில் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது. நீண்டகால கோரிக்கையை ஏற்று அண்ணலுக்கு சிலை அமைத்த தமிழ்நாடு அரசிற்கும், இதற்காக போராடிய தலித்திய, பெரியாரிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளுக்கும் மே பதினேழு இயக்கம் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply