=====================================
நவம்பர் ஒன்றாம் நாளே தமிழ்நாடு நாள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடுவோம்!
சூலை 18 – ஐ வேறொரு பொருத்தமான பெயரில் சிறப்பான விழாவாகக் கொண்டாடுவோம்!
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை! =====================================
மொழி வழி மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளின்படி ஏற்கனவே மொழிவழியாக அமைந்திருந்த அசாம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், பஞ்சாப், பம்பாய், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களாக உருவான நாள்தான் 1956 நவம்பர் முதல் நாள் ஆகும்.
1954 – இல் இதே நாளில்தான் புதுச்சேரியை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் பஞ்சாப் மாநிலம் பஞ்சாப், அரியானா என்று 1960இல் இரு மாநிலங்களாக ஆன நாளும் இதுதான். குறிப்பாகத் தமிழ் மக்களுக்கான தாயகம் தனி மாநிலமாக வரையறுக்கப்பட்ட நாள் இதுவேயாகும். வடக்கிலும் தெற்கிலும் சில பகுதிகளில் விடுபட்டு இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டமும் செங்கோட்டை வட்டமும் தமிழ்நாட்டோடு இணைந்த நாளும் இதுதான்.
சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி 18 -7 -1967 அன்று சென்னை மாநிலச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றினாலும், பெயர் மாற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் இதற்கான தீர்மானம் இயற்றியது 23 -11 – 1968 அன்று தான்.
தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுமாறு பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று விழாக்கள் நடந்தது 1-12-1968 அன்றுதான்.
மேலும் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என அறிவிக்கப்பட்டது 14-1-1969ஆம் நாளே ஆகும்.
முதலில் 1953இல் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏழு மாவட்டங்களை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மேலும் ஐதராபாத் நிஜாம் ஆட்சியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களையும் சேர்த்து 1956 நவம்பர் 1 ஆம் நாள் ஆந்திர மாநிலம் திருத்தி அமைக்கப்பட்டது.
அதேவேளையில் சென்னை மாகாணத்தில் இருந்த கஞ்சம் மாவட்டம் ஒரிசாவோடு இணைக்கப்பட்டதால் ஒரு மாவட்டத்தையும் ஆந்திரம் இழந்தது. 14 மாவட்டங்களோடு விளங்கும் கேரள மாவட்டங்களில் மலபார் மாவட்டம் மட்டுமே சென்னை மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டமாகும்.1956 -இல் 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மைசூர் மாநிலத்தில் தென் கன்னடம் (மங்களூர்) எனும் ஒரு மாவட்டம் மட்டுமே சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற மாவட்டமாகும்.
1957ஆம் ஆண்டு முதல் நவம்பர் ஒன்றாம் நாளைத் தமிழகம் அமைந்த நாளாகச் சிறுசிறு விழாக்கள் நடந்து கொண்டிருந்தாலும் தமிழ்ச் சான்றோர் பேரவை 1996 தொடங்கிப் பல ஆண்டுகள் அவ்விழாவினை எடுத்த போதே அந்த நாள் அனைத்து தரப்பினருக்கும் பரவலாக அறியப்பட்ட நாள் ஆனது.
2019 ஆம் ஆண்டு தொடங்கி, 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அந்த நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி விழா எடுத்தது..
2019, 2020 ஆம் ஆண்டுகளில் அன்றைய தமிழ்நாடு அரசு நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுமாறு அறிவித்ததோடு அவ்விழாவிற்கு ரூபாய் 10 லட்சம் நிதியையும் ஒதுக்கியது.
2020ஆம் ஆண்டு தமிழ்நாடு விழாவைப் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிவித்ததுடன் விழா நடத்திக் கொண்டாடவும் செய்தது.
மேலும், தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் 16- 10- 2021 அன்று நேரில் சந்தித்து நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட உள்ளதையும் அந்த நாளை தமிழ்நாடு விழா நாளாக அறிவிக்க வேண்டுகோள் வைத்தோம். பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் அவர்களிடம் அதே வகையில் வேண்டுகோள் விடுத்தனர்.
கருநாடகம், நாகாலாந்து, காஷ்மீரம் போன்ற மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழ்நாட்டுக்கும் ஒரு கொடியை உருவாக்கி அறிமுகப்படுத்தியது… எந்த வகைச் சாதி, வருண அடையாளங்களுக்கும் ஆட்படாத வெள்ளைநிறக் கொடியில் தமிழ்நாடு வரைபடம் சிவப்பு நிறத்தில் பொறித்த வகையில் கொடி அமைக்கப்பட்டது.. தமிழ்நாடு அரசு இது குறித்துப் பரிசீலித்து வேறு வடிவில் கொடியை அறிமுகப்படுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள அணியமாக உள்ளதையும் எடுத்துரைத்தோம்.
இந்நிலையில் முதல்வர் அவர்கள் 30 – 10 – 2021 அன்று சூலை 18 ஆம் நாளினைத் தமிழ்நாடு விழாவாக அறிவித்து திடுமென அறிக்கை வெளியிட்டார்.
அதன் காரணமாகக் கடந்த ஆட்சியில் நடந்தது போலவே ஏறத்தாழ தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தமிழ்நாடு நாள் விழாவை நவம்பர் ஒன்று கொண்டாடுவதைத் தடுத்தது.
தமிழ்நாடு கொடியை அறிமுகத்திற்காக ஏற்றிய பல பகுதிகளில் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
ஒருவேளை முதல்வர் அவர்களின் அறிவிப்பு நவம்பர் முதல் நாளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டு இருந்தால் இந்தக் குழப்பங்கள் நிகழாமல் போயிருக்கலாம் என்றே கருதுகிறோம். மேலும் இவை குறித்துப் பொதுவெளியில் விவாதிப்பது கூட கொள்கை எதிரிகளின் அணியில் நிற்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் பெரும் சங்கடத்தை விளைவித்தது.
இந்த நிலையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தனது கருத்தாக கீழுள்ளவற்றை முன்வைக்கிறது…
•••
நவம்பர் 1 தமிழ் மக்களுக்கான தாயகம் தனி மாநிலமாக வரையறுக்கப்பட்ட நாள். இதன் உருவாக்கத்தில் அன்றைய ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பு மக்களும், ஏறத்தாழ அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் பங்களித்ததன் வகையில் தமிழர்கள் அளவில் சட்டம் இயற்றி முன் மொழியும் அதிகாரம் கொண்ட அரசு உருவான நாள். இந்த நாள் அனைத்து கட்சியினரும் இயக்கத்தினரும் இணைந்து நடத்தினால் தமிழர் ஓர்மையை உருவாக்க உதவும் என்று கருதுகிறோம். எனவே நவம்பர் 1- ஐயே தமிழ்நாடு நாளாக அனைவரும் ஏற்கவும், தமிழ்நாடு அரசு அறிவிக்கவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்…
•••
சென்னை மாநிலச் சட்டப்பேரவை தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றிய சூலை 18; பெயர் திருத்தும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற தீர்மானம் இயற்றிய நாள் நவம்பர் 23 1968; பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோள்படி தமிழ்நாடு நாள் எடுக்கப்பட்ட நாள் 1-12-1968; தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்ட நாள் 14-1-1969 என எந்த நாளாக இருந்தாலும், அந்த நாளில் தமிழ்நாடு விழாவை நடத்துவது திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தேர்தல் கூட்டணி கட்சிகளும் ஒத்த சிந்தனையுள்ள இயக்கங்களும் மட்டும் நடத்தும் விழாவாக சுருங்கும் வாய்ப்பே உண்டு. எனவே அதைத் தவிர்க்க அதற்கு ஒரு பொருத்தமான பெயரை அறிவித்துத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும்படிச் செய்யலாம்..
இந்த இரண்டு நாட்களும் இரண்டு விழாவாக ஏற்று நடந்த பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புக்கு ஏற்புடைய விழா நாட்களே எனினும் தமிழ்நாடு நாள் என நவம்பர் 1- ஆம் நாள் விழாவையே அனைத்துத் தரப்பினரும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் பெருவிழாவாக நடத்துவதற்கும், சூலை 18 – ஐ வேறொரு பொருத்தமான பெயரில் உரிய முக்கியத்துவம் உள்ள விழா நாளாக நடத்தலாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமைக் குழு
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.