மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது அரசு அலுவல்களில் ஆளுநர் தலையிடுவதை கண்டிக்கின்றோம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது அரசு அலுவல்களில் ஆளுநர் தலையிடுவதை கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் பொழுது, அந்த அரசை மீறி, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவல்களின் அதிகாரிகளை தமிழ்நாடு ஆளுநர் அழைத்துப் பேசுவது, அரசுத் துறைகளின் செயலாளர்களிடம் அறிக்கை பெறுவது, அரசு செயல்பாடுகளில் தலையிடுவது போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவமானப்படுத்தும் செயலாகும். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு அரசை தேர்ந்தெடுத்த 7 கோடி தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். ஆளுநரின் இந்த சனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆளுநர் என்பவர் அரசை மேற்பார்வையிடும் பணியை தான் செய்ய வேண்டுமே ஒழிய அரசின் எல்லா அலுவல்களிலும் தலையிடுவது கூடாது என்பது சமீபத்தில் புதுடெல்லி எதிர் ஒன்றிய அரசு வழக்கில் 14-02-2019 அன்று கொடுக்கப்பட்ட தீர்ப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “ஒன்றிய அரசின் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவி மற்றும் ஆலோசனை (Aid & Advice) கொடுப்பதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறதே ஒழிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றவோ அல்லது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளது. ஆகையால் ஆளுநரின் இந்த செயல் அரசியலமைப்பிற்கு விரோதமானதும் கூட.

இதற்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற புதிதில் இப்படியாக அத்துமீறி வந்தார். மக்களின் கடும் எதிர்ப்பு, மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக, முற்போக்கு அமைப்புகள், கட்சிகள், குறிப்பாக அன்றைய எதிர்க்கட்சியான திமுக காட்டிய கடும் எதிர்ப்பு காரணமாக அரசு நிர்வாகங்களில் தலையிடுவதை அவர் நிறுத்திக் கொண்டார். தமிழ்நாட்டு ஆளுநராக தற்போது புதிதாக பதவியேற்றுள்ள இரவி அவர்களின் அதே போன்ற பாணி முற்றிலும் சனநாயக விரோதமானது. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போன்று புதிய ஆளுநர் இரவி அவர்களும் இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் டெல்லி, புதுச்சேரி, மேற்கு வங்காளம் போன்ற பாஜக அல்லாத மாநிலங்களில் இருக்கும் அரசுகளை ஆளுநரை வைத்து மிரட்டியதை போல தமிழ்நாட்டு அரசை மிரட்டவே இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் செய்கிறாறோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டு பாஜகவினர் ஆளுநர் அவர்களை சந்தித்த பின், ஆளுநர் மூன்று நாட்கள் பின்னர் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை சந்தித்து வந்த பின் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்றால், இது முழுக்க முழுக்கபாஜகவிற்காகத்தான் செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டுமே ஒழிய ஒரு கட்சி சார்பாக நடக்கக்கூடாது. அத்தகைய செயல்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆகவே ஆளுநர் இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகள் கைவிட்டுவிட்டு, அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசின் ஆலோசனைகளை பெற்று செயல்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மறுக்கும்பட்சத்தில், தமிழர்களின் சனநாயக ரீதியிலான கடுமையான எதிர்ப்பை ஆளுநர் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் ஆளுநர் தலையிடுவது மாநில சுயாட்சிக்கு எதிரானது. தமிழர் உரிமைகளில் தலையிடுவதற்கு ஒப்பானது. ஏனெனில் ஆளுனர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. கொள்கை முடிவுகளை எடுக்கும் உரிமை மக்கள் மன்றத்திற்கே உண்டு. எழுவர் விடுதலையை மறுப்பது உள்ளிட்ட தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளை செய்ய ஆளுனர் பதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போக்கை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply