உலகத் தமிழர் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற ஈகத்தின் பெரும் உருவம் மாவீரர் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது – 26-09-1987
“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.”
– ‘தமிழீழ தேசிய தலைவர்’ மேதகு வே.பிரபாகரன், மாவீரர் உரை(1990)
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத சொல் ‘விடுதலைப் புலிகள்’ என்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ஒவ்வொரு போராளியும் தன் நெஞ்சில் பதித்திருக்கும் பெயர் லெப் கேணல் திலீபன் என்று சொல்லலாம். சிங்கள பௌத்த இனவெறி அரசின் ராணுவத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவு தந்து விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடக்க பார்த்த இந்திய அரசின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் ஆயுதம் எடுத்து போராடி வந்த விடுதலைப் புலிகள், அமைதிப் போராட்டத்தையும் அதே மன உறுதியோடு மேற்கொள்வார்கள் என்று உலகம் புரிந்து கொண்ட வரலாற்று நிகழ்வுதான் லெப். கேணல் திலீபன் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.
அது இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்டிருந்த போரை தவிர்ப்பதாக கூறி ஈழ மண்ணில் கால் வைத்திருந்த தருணம். ஈழத் தமிழர்களுக்கு பாரபட்சமானதும், இலங்கை அரசின் விருப்பங்கள் மட்டுமே அடங்கியதுமான ஒப்பந்தங்களை விடுதலைப்புலிகளின் மீது திணிக்க முற்பட்ட போது, விடுதலைப்புலிகள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அப்பொழுது விடுதலைப்புலிகளின் மீது ஆயுத தாக்குதலை தொடுத்த இந்திய அமைதிப்படையின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் வண்ணம், விடுதலைப் புலிகளின் அமைப்பில் இயங்கிய ஆரம்பகட்ட போராளிகளில் ஒருவரான திலீபன் அவர்கள் செப்டம்பர் 15, 1987 அன்று கீழ்க்கண்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இந்த கோரிக்கைகள் கூட விடுதலைப்புலிகள் அமைப்பு முன்நிறுத்தியவை அல்ல. ஏற்கனவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் நிறைவேற்றுவதாக இந்திய அரசால் கூறப்பட்ட வாக்குறுதிகளே ஆகும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கு பதிலாக விடுதலைப்புலிகளின் வசம் இருந்த ஆயுதங்களை பறிப்பதிலேயே இந்திய அமைதிப்படை அதிகாரிகளும், இந்திய தூதுவர்களாக வந்த அதிகாரிகளும் குறியாக இருந்தனர். உண்ணாவிரதம் இருந்த திலீபன் அவர்களை சந்திக்கக் கூட செல்லாமல் இந்திய அதிகாரி தீட்சித் உள்ளிட்ட இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம் திலீபன் அவர்களின் போராட்டத்தை அவமானப்படுத்தியது.
தொடர்ச்சியாக 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல், ‘உண்ணாவிரதத்தை கைவிட முடியாது’ என்று மறுத்தார் திலீபன் அவர்கள். மூன்றாம் நாள் முதலே திலீபன் அவர்களின் உடல்நிலை மோசமாக தொடங்கிய பொழுது, இந்திய அமைதிப்படை வந்தபோது மாலையிட்டு வரவேற்ற தமிழீழ மக்கள் இந்திய பார்ப்பணிய சதியாட்டத்தை புரிந்து கொள்ள தொடங்கினர். உண்ணாவிரதம் இருந்த திலீபன் அவர்களின் உயிரைக் காப்பாற்றும் எண்ணம் சிங்கள இனவெறி அரசுக்கும், இந்திய பார்ப்பணிய அரசுக்கும் துளியும் இல்லை என்பதை உலகம் அறிந்து கொண்டது.
உண்ணாவிரதம் தொடங்கிய பன்னிரண்டாம் நாள் செப்டம்பர் 26 அன்று காலை 10.48 க்கு, லெப் கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவை எய்தினார். உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஈகத்தின் உருவமாக குடியேறினார்.
தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. பணத்திற்காகவும் பதவிக்காகவும் போராடாமல் தம் மக்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்த அம்மாவீரர்கள் அனைவரையும் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் நினைவு கூர்வதோடு, மாவீரர் திலீபன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010