செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள் – 14.8.2006
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்ற கணம் முதல் அங்கு வசித்து வரும் பூர்வக்குடி மக்களான ஈழத்தமிழர்கள், சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் “தனித் தமிழீழமே ஒரே தீர்வு” என்ற புள்ளியை நோக்கி நகர்ந்து வந்த தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி மக்களிடையே ஒரு மாபெரும் நம்பிக்கையை வளர்த்து இருந்தது. ஈழத் தமிழர்களின் ஒருமித்த குரல் கண்டு பொறுக்க இயலாத சிங்களப் பேரினவாத அரசின் ராணுவம், விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவித் தமிழர்கள் கூடியிருக்கும் இடத்தில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும், அதை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் போவதும் தமிழீழ நிலப்பரப்பில் இயல்பாக நடக்கின்ற ஒன்றாகிப் போனது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு சிங்கள பௌத்த இனவெறி அரசின் வான்படை தொடுத்த வான்வழித் தாக்குதலினால் 61 மாணவிகள் உடனடியாக அங்கே படுகொலை செய்யப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர். ஆனால் சிங்கள பௌத்த இனவெறி அரசு ‘அது மாணவிகள் விடுதி அல்ல, விடுதலைப்புலிகளின் பயிற்சி வளாகம்’ என்று கூறி தனது கொலை பாதக செயலை நியாயப்படுத்த முயன்றது. ஆனால் அங்கு சென்ற மருத்துவர் குழுவும், ஐநாவின் யுனிசெஃப் குழுவும் படுகொலை செய்யப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகளே என்று பறைசாற்றினர்.
சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் தொடுப்பது புதிதல்ல என்பதும், அதில் பல முறை சிறு குழந்தைகளும், மாணவச் செல்வங்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதுவும் நாம் அறிந்ததுதான் என்றாலும், போராளிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத செஞ்சோலை மாணவிகள் வளாகம், அப்பாவி பெண் குழந்தைகள் தங்கி இருக்கும் இடம் என்று தெரிந்தும் குண்டு வீசி தனது நூற்றாண்டுகால இனப்படுகொலையை தொடர்ந்து செய்தது சிங்கள பௌத்த இனவெறி அரசு.
இத்தகைய சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பான தாக்குதல்களும், மனித தன்மையற்ற மன நிலையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்று கடைசி வரை உறுதியாக நின்றதற்கு காரணம் ஆகும். தமிழீழத்தின் நூற்றாண்டுகால போராட்டத்தில் செஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை சம்பவங்களும், இறுதிப்போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் உயிர்களே அதனை உறுதி செய்யும் சான்றாக விளங்குகிறது.
இலங்கை நிகழ்த்திய இனப் படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணையே இழந்த உயிர்களுக்கு ஒரே தீர்வாக அமைய முடியும். இன்றைய தினத்தில் செஞ்சோலை மாணவிகள் வளாகத்தில் உயிரிழந்த அத்தனை மாணவ கண்மணிகள் அனைவரையும் மே பதினேழு இயக்கம் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010