உலக சுற்றுச்சூழல் தினம் (05-06-2021)
“மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்..” (புறநானூறு – பாடல் 2)
தமிழர்களின் பெருவாழ்வு இயற்கையோடு கலந்த வாழ்வு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலத்திணைகளின் அடிப்படையில் தங்கள் சமூகத்தை ஒருங்கமைத்து கொண்ட முதுபெரும் இனமாக வரலாற்றில் காணப்படுகிற ஒரே இனம் தமிழினம் மட்டுமே. தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்ளும் மிகப் பெரிய உண்மை என்பது ‘தமிழர்கள் இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையிலான சமநிலையை ஒருபோதும் சிதைத்ததில்லை’ என்கிற ஒப்பற்ற உண்மைதான்.
இன்றைய நவீன உலகத்தில் ஒரு தனி மனிதனின் வாழ்வாக இருந்தாலும், ஒரு சமூகத்தின் வாழ்வியல் போக்காக இருந்தாலும் அது பொருளாதாரத்தை வைத்தே முடிவு செய்யப்படுகிற இக்கட்டான சூழலில், இயற்கையின் மீதும், சுற்றுச்சூழலின் மீதும் மனித இனத்தின் மதிப்பீடு குறைந்து போயுள்ளது. குறிப்பாக மேற்குலக நாடுகளின் காலனியாக்க படையெடுப்பிற்குப் பின்பு, மூன்றாம் உலக நாடுகள் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் இயற்கை வள, மற்றும் மனிதவள சுரண்டலுக்கான வேட்டை நிலங்களாகமட்டுமே பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி தற்போதைய இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலான மனித குலத்தின் வளர்ச்சி பூமியின் இயற்கை வளங்களையும், காடு மலை ஆறு போன்ற இயற்கை உருவாக்கங்களையும் அடியோடு சிதைக்கின்ற அழிவாகத்தான் அமைந்திருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார வேட்டைக்காக சுரண்டப்படும் இயற்கை வள சுரண்டல்களும், வளர்ச்சி என்ற பெயரில் மனித குலத்திற்கு மாபெரும் அழிவை தேடித் தரக் கூடிய அணுசக்தி ஆலைகள் போன்ற காரணிகளும் இன்றைய சுற்றுச்சூழலுக்கு மாபெரும் தீங்காய் வந்து நிற்கின்றன. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையாக உருவாகியிருந்த தாது பொருட்கள், எரி பொருள் போன்ற இயற்கை வளங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டில் பெருமளவில் எடுக்கப்பட்டு இன்னும் சில நூறு வருடங்கள் மட்டுமே இந்த இயற்கை வளங்கள் கிடைக்கும் என்கின்ற நிலைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் குடியேற்றங்களுக்காவும் மரங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுதல், இரும்பு போன்ற தாது பொருட்களுக்காக மலைகள் அழிக்கப்படுதல், பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் ஆலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலக்கப்பட்டு ஆறுகள் மாசுபடுதல், எண்ணிலடங்காத வாகனங்களாலும், தொழிற்சாலைகளும் வெளியிடப்படும் நச்சு வாயுக்களால் காற்று மாசுபடுதல் போன்ற செயல்பாடுகள் எதிர்கால மனித இனம் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த உயிரினங்களும் உயிர் வாழும் சாத்தியங்களை கேள்விக்குறியாக்கி இருக்கின்றன.
இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் உரியது அல்ல. இதை தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் தான் திருவள்ளுவர் தனது திருக்குறளில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இத்தகைய தமிழர்தம் விழுமியங்களை உலக சுற்றுச்சூழல் தினமான இன்று மனதில் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்கு இவ்வுலகை வாழத் தகுந்த இடமாய் விட்டுச் செல்வோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010