இலங்கை உளவுத்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்! சிங்கள இனவெறி இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!

இலங்கை உளவுத்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்! சிங்கள இனவெறி இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

இலங்கை ஆக்கிரமிப்பு தமிழீழ பகுதியான மட்டக்களப்பு அருகிலுள்ள கிழக்கு இருதயபுரத்தை சேர்ந்த சந்திரன் விதூசன் என்ற 22 வயது ஈழத்தமிழ் இளைஞரை, புதன் (02-06-2021) இரவு இலங்கை அரசின் உளவுப்பிரிவை சேர்ந்தவர்கள் கைது செய்து அழைத்து சென்று, இரவு முழுவதும் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். சிங்கள இனவெறி அரசின் தமிழீழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடந்து 12 ஆண்டுகள் ஆன பின்பும் நின்றுவிடவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. சிங்கள பௌத்த இனவெறி அரசின் இந்த தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

புதன் இரவு 10:30 மணியளவில் சந்திரன் விதூசனின் நண்பர் தொலைபேசியில் அழைத்து வெளியே வரக் கூறியுள்ளார். வெளியே வந்த விதூசனை தெருவில் நின்றிருந்த சிலர் உளவுப்பிரிவை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு அவரை கைது செய்வதாக கூறியுள்ளனர். அப்போதே அவர் மீது தடிகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். மட்டக்களப்பு காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட அவரை, காலையில் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மட்டக்களப்பு காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட விதூசனை, காவல்துறையினர் இரவு முழுவதும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் உறுதிபடுத்துகின்றனர், காவல்நிலையத்திலேயே அடித்து கொல்லப்பட்டவரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக பொய்யான தகவலை குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். தற்போது அவரது உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்திரன் விதூசன் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார், ஏன் உளவுத்துறையினர் ஈடுபட்டனர், ஏன் அடித்துக்கொள்ளப்பட்டார் போன்ற எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை. தமிழீழ இளைஞர்கள் மீதான இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பிறகு தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இது தமிழீழ இனப்படுகொலையின் நீட்சியே. 2009 தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை ஏற்படுத்தாமல், இலங்கையின் சிங்கள இனவெறி அரசை காப்பாற்றிய சர்வதேச சமூகத்தின் தோல்வியே இதற்கு முதன்மை காரணமாக உள்ளது.

சந்திரன் விதூசன் கொலை மீதான நீதி விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சிங்கள இனவெறி அரசை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க முன்வர வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தமிழர்களுக்கான அரசியலை தமிழர்களே நிர்ணயித்துக்கொள்ளும் வரை இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்போவாதில்லை. தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்பும் நடத்தபடுவதே தமிழீழ தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010 

Leave a Reply