பத்திரிக்கை செய்திக் குறிப்பு – மே பதினேழு இயக்கம் கண்டனம்
இலங்கையின் தெற்குப்பகுதியில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் வசம் இலங்கை அரசு ஒப்படைக்கும் தீர்மானத்தை மே20,2021இல் நிறைவேற்றியதால் தமிழ்நாட்டில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இன்று 31-05-2021 ’தி இந்து’ ஆங்கில நாளிதழின் 4ம் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது (https://www.thehindu.com/…/tn…/article34684689.ece). இதனால் தமிழ்நாட்டில் உள்ள சீனா மற்றும் இலங்கை தூதரகங்களின் முன் போராட்டத்தினை (நாடுகடந்த தமிழீழ அரசு எதிர்ப்பினை அடுத்து) தமிழர் அமைப்புகள் சீனாவின் நிறுவனங்களை குறிவைத்து போராட்டத்தை நட்டத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை தகவல்கள் சொன்னதாக ஒரு செய்தியை வெளியிட்டுளளது. மேலும் பெயர் குறிப்பிடாத தமிழ்த்தேசிய அமைப்பின் பொறுப்பாளர் இத்தகவலை சொன்னதாக சந்தேகத்திற்கிடமான யூக அடிப்படையில் செய்தியை இந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழினப்படுகொலைக்கு சர்வதேசம் நியாயம் வழங்காத காரணத்தினால் தமிழர்கள் சர்வதேசத்தின் மீது மிகுந்த ஏமாற்றமடைந்ததாகவும் அதனால் இந்த எதிர்ப்புகளை சீனாவின் மீது காட்டவாய்ப்புள்ளது என்பது போல செய்தியை தாமாக வெளியிட்டுள்ளது. இலங்கை அரசுகளுடன் கடந்த பல வருடங்களாக நெருக்கமாக இயங்கி வரும் ‘தி இந்து’ நாளிதழ் தமிழ்த்தேசிய அமைப்புகள் குறித்தும், தமிழர் போராட்டங்கள் குறித்தும் மிகத் தவறான செய்திகளை, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்ட வரலாறு உண்டு. இது குறித்து பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளை ‘தி இந்து’ நாளிதழிடமும், பொதுவெளியிலும் வெளிப்படுத்தி இருக்கின்றன. இந்த செய்தி நிறுவனத்தினை கண்டித்து பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
ஐ.நா மனித உரிமை மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடுகளை சீன அரசு எடுத்து வந்துள்ளதை மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழர் அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. இந்த தமிழினப்படுகொலையில் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் உள்ளிட்ட நாடுகளின் நீண்டகால பங்களிப்பை தமிழர் அமைப்புகள் கண்டித்தும் வந்திருக்கின்றன. தங்களது எதிர்ப்புக் கருத்துக்களை சனநாயக வழியிலேயே வெளிப்படுத்தி இருக்கின்றன. மாறாக ‘தி இந்து’ இதழில் சித்தரிப்பதைப் போன்ற சட்ட ஒழுங்கு நெருக்கடியை ஏற்படுத்தியதில்லை. கொரொனோ நெருக்கடி காலகட்டத்தில் அந்த நெருக்கடியை எதிர்கொள்ள தமிழர் அமைப்புகள் தங்களால் இயன்ற சமூகப் பணிகளை செய்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இது போன்ற உண்மைக்கு மாறான செய்தியை வெளியிடும் ‘தி இந்து’வின் இச்சிறுமைச் செயல் விசமத்தனமானது, உள்நோக்கமுடையது. சீனா உள்ளிட்ட நாடுகளின் மீதான ஏமாற்றத்தினை/எதிர்ப்பினை கருத்தியல் அளவில் தொடர்ந்து பதிவு செய்து வந்த போதிலும் ‘தி இந்து’ நாளிதழ் கட்டமைப்பதைப் போன்று தமிழர் அமைப்புகள் சட்ட ஒழுங்கை சீர்கேடு செய்யும் இயக்கங்களாக சித்தரிப்பது என்பது தமிழர் விரோத பார்ப்பனீய சூழ்ச்சியே. இத்தகைய சீர்கேடான செயலை வன்மையான கண்டனத்திற்குரிய பத்திரிக்கை விரோத செயலாகுமென மே பதினேழு இயக்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
31/05/2021