தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் கடற்புலி மாவீரர் அங்கயற்கண்ணி அவர்களின் பிறந்தநாள் இன்று (10.5.1973)
எதிரியே!
ஓடி ஓடி உலகெங்கும் ஆயுதம் வாங்கினாலும்
இந்த “உயிராயுதங்களை” எப்படி இல்லாதழிப்பாய்
பகைவனே!
படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு
கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.
தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஆம். இலங்கை சிங்கள பேரினவாத அரசின் கொடூர ராணுவத்தை திசைக்கொன்றாய் சிதறி ஓடச் செய்த வல்லமையை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈக வரலாற்றின் பக்கங்களில் வியாபித்திருக்கும் மாவீரர்கள் கரும்புலிகள் ஆவர். அப்படிப்பட்ட மன உறுதி கொண்ட மாவீரர்களின் பக்கத்தில் அழியா புகழ் கொண்டு எழுதப்பட்டிருக்கும் பெயர்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் கடற்கரும்புலி மாவீரர் அங்கயற்கண்ணி அவர்கள்.
மாவீரர் தளபதி மில்லர் அவர்கள் தொடங்கி வைத்த புதிய தாக்குதல் ஒவ்வொரு முறையும் சிங்களப் பேரினவாத இராணுவத்தை நிலைகுலையச் செய்து கொண்டிருந்த தருணத்தில், சிங்கள இராணுவ கட்டளை கப்பலொன்று காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தது. அதனை தகர்த்து எறிவது என்று முடிவு செய்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கனவை உண்மையாக்கியவர் மாவீரர் அங்கயற்கண்ணி அவர்கள்.
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஏறத்தாழ 37 கிலோ மீட்டர்கள் கடல் உள்ளே தனியாக நீந்திச் சென்று அங்கே நிறுத்தப்பட்டிருந்த சிங்கள ராணுவத்தின் கப்பல்களை சிதறடித்து சிங்கள பேரினவாத இராணுவத்தின் கடற்படைக்கு மாபெரும் அதிர்ச்சியை தந்திருந்தார் மாவீரர் அங்கயற்கண்ணி அவர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவில் கரும்புலிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களை பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறும் பொழுது “பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள். எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்” என்று கூறுகிறார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் என்பது இவ்வாறாக மாபெரும் ஈகத்தாலும், தன்னலமற்ற தமிழீழ தமிழர்களின் நலனை மட்டும் மனதில் கொண்ட மாவீரர்களின் உழைப்பினாலும் கட்டமைக்கப்பட்ட அரசியலாகும். இதை புரிந்து கொள்ளாத சிலர் விடுதலைப்புலிகள் ஏதோ கட்டாயப்படுத்தி கரும்புலிகளை உருவாக்கியது போல் சித்தரிப்பதும், விடுதலைப்புலிகளை சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் போல் திரித்துக் கூறுவதும் ஒரு உன்னதமான விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்துவது தவிர்த்து வேறு எதுவும் இல்லை.
ஆயினும் எந்த தமிழீழ தமிழர்கள் வாழ்வு அழிந்து விடக்கூடாது என்று மாவீரர் அங்கயற்கண்ணி உட்பட அனைத்து விடுதலைப் புலிகளின் போராளிகளும் நினைத்து போராடினார்களோ, அந்த தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையை 2009 ம் ஆண்டு சர்வதேச வல்லாதிக்க நாடுகள் நடத்திக் காட்டின. வரலாற்றின் அடிப்படையிலும், நிலப்பரப்பின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் சொந்த சகோதரர்களான தமிழீழத் தமிழர்களின் இனப்படுகொலையை அன்று தடுக்கும் வல்லமை அற்ற, அதிகாரமற்ற கையறு நிலையில் நின்றிருந்த நாம், அதற்கு கைமாறு செய்யக்கூடியதெல்லாம் இந்த இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் எடுத்துரைப்பதும், தமிழீழத் தமிழர்களின் நூற்றாண்டுகால இன்னல்களுக்கு ஒரே முடிவு தனித் தமிழீழமே என்று எடுத்துரைப்பதும் ஆகும். அதுவே மாவீரர் அங்கயற்கண்ணி போன்ற வீரச்சாவெய்திய நூற்றுக்கணக்கான போராளிகளுக்கும், இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கும், ஈழத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அகதியாய் சென்றிருப்போருக்கும் நாம் சர்வதேச அரங்கில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டமாக அமையும் என்று கூறிக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் கடற்கரும்புலி மாவீரர் அங்கயற்கண்ணி அவர்களின் பிறந்த நாளான இன்று மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010