
தமிழறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் நினைவை போற்றுவோம்! – மே பதினேழு இயக்கம்
“நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக் கொள்வானோ, அவ்வாறு அழியுந் தருவாயில் இருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக் கொண்டது. அதாவது வைதீக மதம் திராவிட மத தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.
ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் திராவிட வைதீக தொடர்பை உறுதி படுத்திக் கொள்ளும் பொருட்டு திராவிட தெய்வங்களுக்கும் வைதீக தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும், உறவுகளையும் கற்பித்துக் கொண்டது.”
நீதிக்கட்சிக் காலத்தில் வெளிவந்த ‘திராவிடன்’, பெரியாரின் ‘குடிஅரசு’ ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றும், கட்டுரைகள் எழுதியும் வந்த திரு மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள், இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற பண்டைய பார்ப்பன வைதிக மதம் எவ்வாறு நம் பண்பாட்டு அடையாளங்களை அபகரித்துக் கொண்டது என்பது பற்றி கூறிய வரிகள் தான் மேற்காணும் வரிகள்.
சென்னை மயிலாப்பூரில் 1900-இல் பிறந்த வரலாற்று ஆய்வாளர் திரு மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழ் மொழியிலும், தமிழ் இலக்கியத்திலும், தமிழ்நாட்டு வரலாற்றிலும் மாபெரும் அறிவும், தெளிவான பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்தார். தமிழின் மீதான இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து திரு கி.ஆ.பெ விசுவநாதம் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையில் பெரும் பற்று கொண்ட திரு மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தன்னுடைய வளர்ப்பு பெயர்த்திகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். இவரது தமிழ் ஆய்வுகளைப் பாராட்டி மதுரை பல்கலைக்கழகம் 1980-ஆம் ஆண்டு “பல்கலைக்கழக பேரவைச் செம்மல்” என்ற பட்டத்தை வழங்கியது.
தமிழர் வரலாறு, தமிழ் நாட்டு அரசர்கள், மற்றும் தமிழகத்தில் நிலவி வந்த சமயங்கள் குறித்தான பல்வேறு நூல்களை எழுதியிருக்கும் திரு மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள், களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றி எழுதிய “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூல் ஓர் சிறந்த நூலாகும். இதில் களப்பிரர் ஆட்சி தமிழகத்தின் இருண்ட கால ஆட்சி என்பதை முற்றிலுமாய் மறுக்கிறார். தமிழ் எழுத்துக்களின் முன்மை வடிவமாகிய ‘தமிழி’ எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருவாகிய காலம் இதே களப்பிரர் ஆட்சி காலம் தான் என்றும் கூறுகிறார். மேலும் தமிழ்ப்பா வகை இலக்கணங்கள் மேலும் வளர்ச்சி அடைந்த காலமாக இக்காலத்தில்தான் கூறுகிறார்.
தமிழகத்தில் நிலவி வந்த சமண, பௌத்த மதங்களின் பண்பாடுகளை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் இவர், இன்று இந்து மதம் என்று அழைக்கப்படும் பண்டைய வைதீக பார்ப்பன மதம் எவ்வாறு மக்களை சாதி ஆக பிரித்து இருந்தது என்பதையும் தெளிவாக விளக்கி கூறுகிறார். மேலும் இந்த வைதீக பார்ப்பன மதம் எவ்வாறு பிற மதங்கள் கூறிய கருத்துகளை தனதாக்கிக் கொண்டது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக அசைவ உணவுகளை உண்ணாமை என்கின்ற சமணக் கொள்கையே பிற்காலத்தில் வைதிக மதக் கொள்கையாக மாறியது என கூறுகிறார்.
இங்கனம் தமிழர் தம் வரலாற்றையும், தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு கூறுகளையும் எடுத்துக்கூறிய வரலாற்று ஆய்வாளரும், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை ஏற்றுக்கொண்ட தமிழ் பற்றாளருமான திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் நினைவு நாளான இன்று (8.5.2021), மே பதினேழு இயக்கம் அவரது நினைவை போற்றுகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
