திராவிட மொழியியல் ஆய்வறிஞர் திரு இராபர்ட்டு கார்டுவெல் அவர்களுக்கு புகழ் வணக்கம்! – மே பதினேழு இயக்கம்
“இந்தியப் பெரு நாட்டின் வடபகுதியிலேனும், தென்பகுதியிலேனும் எக்காலத்திலும் சமஸ்கிருதம் என்ற வடமொழி உள்நாட்டு மொழியாக வழங்கி இருத்தல் கூடும் என்று நம்புவதற்கில்லை.”
தமிழர் சார்ந்த நிலப்பகுதியாக இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பகுதி மட்டுமல்லாமல், அதைத் தாண்டியும், கடல் கடந்தும் இருந்த நிலப் பகுதிகளை அடையாளப் படுத்தி மொழியியல் ஆய்வறிஞர் திரு இராபர்ட்டு கார்டுவெல் அவர்கள் சமஸ்கிருத மொழியை பற்றி கூறிய கருத்துக்கள் இவை.
அயர்லாந்து நாட்டில் பிறந்த திரு இராபர்ட்டு கார்டுவெல் அவர்கள், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக இம்மொழியை நன்கு கற்று, திராவிட மொழியியல் ஆய்வாளராக உயர்ந்தார். தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதியில் தங்கி தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இவர் வெளியிட்ட “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல் இன்றளவும் வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்ற ஆரியர்களின் புரட்டு கூற்றுக்கு பதில் கூறும் விதமாக அமைந்திருந்தது.
“வடமொழியில் இருந்து தான் திராவிட மொழி பிறந்திருக்க வேண்டும் என்ற பழங்கொள்கை குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமில்லை.”
இந்நூலில் தமிழ் மொழி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல், சிறு குழுவினரால் பேசப்படும் தமிழ் சார்ந்த மொழிகளையும், சமஸ்கிருதத்தின் சார்புடைய வடநாட்டு மொழிகளையும், தமிழ் அரசுகள் பெயர் தொடர்பான ஆய்வுகளையும் மிக விளக்கமாக விவரித்து, தமிழ் மற்றும் திராவிடம் என்ற சொல்லாடல்கள் வேறு வேறல்ல என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
“தமிழ் என்ற சொல்லுக்கு நேர் வடமொழிச்சொல் திராவிடம் என்பதாகும். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசிய மொழியையும் ஒருங்கே குறிப்பதாகும்.”
திரு கார்டுவெல் அவர்கள் எழுதிய இன்னொரு முக்கிய நூலாக பரதகண்ட புராதனம் என்ற நூல் விளங்குகிறது. இதில் ஆரியர்களின் வேதங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் மிக விரிவாக விளக்கி இருக்கும் திரு கார்டுவெல் அவர்கள், ஆரிய பார்ப்பனர்களின் மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தை விளக்கமாய் கூறுகிறார்.
“பசுமாடுகளை அந்தகாலத்து ரிஷி முதலாய் பலியிடும் புசித்து வந்தனர் திருஷ்டாந்தமாக ‘அக்கினியே மலட்டு பசுக்களை கொண்டும், ரிஷபம் கொண்டும், கன்றுள்ள பசுக்களைக் கொண்டும் உனக்கு யாகம் செய்து இருக்கும்போது நீ முற்றிலும் எங்கள் பட்சத்தில் சேர்கிறாய்’ என்று ரிக் வேதத்திலுள்ள 2ம் மண்டலம் 7ம் சூத்திரத்திலும், ‘விசேஷித்த திவ்விய போஜனம் பசுக்களே’ என்று 6ம் மண்டலம் 31-ஆம் சூத்திரத்திலும், ‘ஒரு பசுவை ஜனங்கள் சந்து சந்தாக அறுப்பது போல் இந்திரனே விருத்திரனைத் துண்டு துண்டாக வெட்டிப் போடு’ என்று முதலாம் மண்டலம் 61ம் சூத்திரத்திலும் சொல்லியிருக்கிறது”
மேலும் பகவத் கீதையைப் பற்றி கூறும்பொழுது, “பகவத் கீதையில் உள்ள பாட்டுகள் மிகுந்த அலங்காரம் உடையது தான். ஆனாலும் அதில் போதிக்கின்ற உபதேசம் இதயத்தை கடினப்படுத்தி, இரக்கத்தையும் அன்பையும் மற்றெந்த எந்த நற்குணங்களையும் கெடுக்க தக்கதே அல்லாமல் வேறல்ல. அது நஞ்சை தேனில் கலந்து கொடுப்பது போல் இருக்கிறது” என்று கடுமையாக விமர்சிக்கிறார்.
இதுபோன்ற காரணங்களே ஆரிய சங்பரிவாரங்களும், அவர்களுக்கு துணை போகும் போலி தமிழ்தேசிய கருத்தாளர்களும் திரு கார்டுவெல் அவர்களை வெறும் மத மாற்றத்திற்காக வந்தவர் போல் கட்டமைக்க முயற்சிப்பதற்கான காரணங்களாகும். அவரின் ஆய்வறிக்கையில் சில குறைகள் இருப்பதற்கு நிச்சயம் வாய்ப்புண்டு. அது காலத்தின் போக்கால் நடைபெறும் பல்வேறு ஆய்வுகள் மூலம் விலக்கிக் கொள்ள வேண்டிய குறைகளைத் தவிர, அவரையோ அவரது மொழியில் மற்றும் மதம் சார்ந்த ஆய்வுகளை முழுவதும் புறம் தள்ளுவது சரியாக இருக்காது.
இத்தகைய தெளிந்த ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டு ‘தமிழ் என்று குறிப்பிட்டாலும், திராவிடம் என்று குறிப்பிட்டாலும் அது ஆரியத்திற்கு எதிரானது’ என்று விளக்கிச் சென்றிருக்கும் திரு இராபர்ட்டு கார்டுவெல் அவர்களின் பிறந்த நாளில் (07-05-1814) மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தை கூறிக் கொள்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010