ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டின் அவமானச் சின்னம்! ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
கொரானா இரண்டாம் அலையில் வடஇந்தியாவில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை காரணம்காட்டி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சியை வேதாந்தா நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக இன்று (26-04-2021) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக ஆக்ஸிஜன் உற்பத்திக்கும் மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அங்கீகாரம் பெற்ற ஒரு சில கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசப்பட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவினை மே பதினேழு இயக்கம் முற்றிலுமாக நிராகரிக்கிறது.
இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி குறைபாடு என்பதை தாண்டி கொள்கலன்களில் அடைத்து உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து தேவைப்படும் இடங்களுக்கு கொண்டுசெல்வதிலேயே நடைமுறை சிக்கல் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு போதுமானது என்றும், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமலும், தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்றுவதாலும் தமிழ்நாட்டின் உச்சபட்ச ஆக்ஸிஜன் தேவையையும் சந்திக்க முடியும் என தெரியவருகிறது. வடமாநில தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலை திறந்தாலும், அதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கப்போவதை இதுவரை யாரும் மறுக்கவில்லை.
இச்சூழலில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவது போலவும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் மூலம் அந்த தட்டுப்பாடு நீக்கப்படும் என்பது போலவும் ஒரு பொய்யான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை எதிர்ப்பது மருத்துவ அறிவியலுக்கு எதிரானவர்களாகவும், தேசத்துரோகம் போல சித்தரிக்கவும் செய்கின்றனர். இவை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயலும் மத்திய மாநில அரசுகளால் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. இத்தகைய நெருக்கடி அரசியல் கட்சிகளின் எண்ணத்தை மாற்றிருக்கலாம். ஆனால், இந்த அரசியல் பின்னணியையும், உண்மை நிலவரத்தை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே உண்மை. இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு மின்தட்டுப்பாட்டை முன்வைத்து கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதன் கொள்ளளவில் பாதியை கூட உற்பத்தி செய்யவில்லை.
இது ஒருபுறமிருக்க, உற்பத்தி செய்ய முடியும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்ன 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜனில் வெறும் 35 மெட்ரிக் டன் மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியும் என்றும் மீதமுள்ளவற்றை ஆலை பயன்பாட்டிற்கே பயன்படுத்த முடியும் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் இந்த 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் 92-93% மட்டுமே சுத்தமானது. மருத்துவத்திற்கு 99.4% சுத்தமான திரவ ஆக்ஸிஜன் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையிடம் வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனை ஆழ்ந்த அழுத்தத்திற்குட்படுத்தி திரவ நிலைக்கு மாற்றவும் அதனை கொள்கலன்களில் அடைக்கவும் வசதிகள் இல்லை. அதனை உருவாக்க 9 மாதங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளது. அப்படியென்றால், 1050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்க முடியும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளது. இதன் மீது இனியும் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? இதை தெரிந்தே தான் அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதா?
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தின் தடையாலும், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசாளும் மூடப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளன. தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கப்பட்டால், இதே விதிமுறைகளை மீண்டும் மீறாது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. மேலும், இதனை ஒரு நற்செயல் செய்ததாக கூறி, வேதாந்தா நிறுவனம் தாமிர உருக்காலையை திறப்பதற்க்கு நல்வாய்ப்பாக கருதிக்கொள்ளும். அப்போது நீதிமன்றங்கள் கூட ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் சூழல் ஏற்படும். பல விதிமுறைகளை மீறி மக்களின் உயிரோடு விளையாடிய ஸ்டெர்லைட் நிறுவனம், அதனை திறப்பதற்கு எத்தகைய நாடகத்தையும் நடத்தும். ஆனால் மக்களின் உயிரும், சுற்றுச்சூழல் பாதிப்பும் மீண்டும் கேள்விக்குள்ளாகும்.
இப்படியான சட்டப்பூர்வ காரணங்கள் இருந்தாலும், ஸ்டெர்லைட் ஆலை திறப்படுவதற்கு தார்மீகரீதியாக எந்தவித அருகதையும் அற்றது. போராடிய தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்கள் நடத்தி கலவரத்தை உண்டாக்கியதோடு, ஸ்னோலின் உள்ளிட்ட 13 தமிழர்களை சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் நிறுவனம். இப்படியான ஒரு நிறுவனம் இன்னும் தமிழ்நாட்டில் இருப்பதே தமிழர்களுக்கு அவமானம். ஸ்டெர்லைட் ஆலை தமிழர்களின் அவமானச் சின்னம். அதனை திறப்பது என்பது போராடியாதற்காக கொல்லப்பட்ட 13 பேரின் தியாகத்தை அவமதிக்கும் செயலாகும்.
ஸ்டெர்லைட் நிறுவனம் முழுமையாக மூடப்பட வேண்டும், அந்த தொழிற்சாலை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒற்றை கோரிக்கை. அதனையே மே பதினேழு இயக்கம் முன்மொழிகிறது. ஸ்டெர்லைட் ஆலை எந்த காரணத்திற்காகவும், எந்த சூழலிலும் திறக்கப்படக் கூடாது என்பதில் மே பதினேழு இயக்கம் உறுதியாக உள்ளது.
மே பதினேழு இயக்கம்
9884072010